அந்நியன், இந்தியன் பாணியிலான கதைக்களத்தில், இயக்குநர் விக்ரமனின் மகனை கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தியிருக்கும் கிரைம் திரில்லர்.
நாயகன் விஜய்யின், அம்மாவையும் தங்கையையும் முகமூடி மனிதன் ஒருவன் கடத்தி வைத்துக்கொண்டு, தான் சொன்னதை செய்யாவிட்டால் கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறான். பால் கூட அசைவம் என்று கருதுகிற வீகன் உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கிற விஜய், மிரட்டலுக்குப் பணிந்து அவன் சொன்னபடி முதலில் ஒரு சேவலையும், கெத்தான ரவுடிப் பேர்வழி ஒருவரையும் கொலை செய்கிறான். அதன் பின்னும் முகமூடி மனிதன் விஜய்யின் அம்மாவையும் தங்கையும் விடுவிக்காமல் வேறொருவரை கொலை செய்ய உத்தரவிடுகிறான். விஜய் அந்த நபரை கொலை செய்தாரா, அம்மாவையும் தங்கையையும் காப்பாற்றினாரா என்பதே ஹிட் லிஸ்டின் திக்திக் அனுபவம் தருகிற திரைக்கதை.
விஜய்யாக விஜய் கனிஷ்கா. அறிமுகப்படமே ஆக்சனில் அதகளம் செய்யும்படி அமைந்துவிட, நடிப்பில் அதற்கேற்ற உடல்மொழியோடு வெளிப்பட்டிருப்பதை கண்டிப்பாக பாராட்டலாம். உணர்வுபூர்வமான காட்சிகளில் நடிப்புப் பங்களிப்பு கொஞ்சம் பின்தங்கியிருந்தாலும், கதையோட்டத்தின் வேகத்தில் அது பெரிய குறையாக தெரியவில்லை.
காவல்துறை உயரதிகாரியாக சரத்குமார். முகமூடி மனிதன் யார்? எங்கிருந்து விஜய்யை இயக்குகிறான்? அவந்து நோக்கம் என்ன? என்பதையெல்லாம் கண்டுபிடித்து அவனிடம் சிக்கியவர்களை மீட்டெடுக்கும் கடமையை மிகச்சரியாக, கம்பீரமாக செய்திருக்கிறார்.
அரசு மருத்துவமனையின் தலைமைப் பொறுப்பிலிருந்தபடி, சதிகாரர்களின் கைக்கூலியாக செயல்படுகிற கவுதம் மேனனின் நடிப்பு கச்சிதம்.
கொரோனா காலகட்டத்தில் உயிர்களைக் காப்பாற்றப் போராடி, சாவல்களைச் சந்தித்து பரிதாப முடிவுக்கு ஆளாகிற ஸ்ம்ருதி வெங்கட்டின் நடிப்பு கதையின் ஆணிவேருக்கு அசுர பலம் தந்திருக்க,
நாயகனால் கொலை செய்யப்படுகிற ரவுடியாக ராமச்சந்திர ராஜு, நாயகனின் அம்மாவாக (விக்ரமனின் முதல் பட கதாநாயகி) சித்தாரா, தங்கையாக அபி நட்சத்திரா என இன்னபிற நடிகர், நடிகைகளின் நடிப்பு நேர்த்தி.
சி சத்யாவின் இசையில் பாடல்கள் பெரிதாய் ஈர்க்காவிட்டாலும், காட்சிகளின் பரபர நகர்வுக்கேற்ப தந்திருக்கும் விறுவிறு பின்னணி இசைக்கு பாஸ் மார்க் தரலாம். கே ராமச்சந்திரனின் ஒளிப்பதிவில் வைத்திருக்கும் கோணங்கள் கச்சிதம்.
கொரோனா வீரியப் பாய்ச்சல் நிகழ்த்திய காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட பெரும் பணக்காரர்களைக் காப்பாற்ற, மனிதாபிமானமற்றவர்கள் எடுத்த முயற்சிகளால், அதே விதமாக பாதிக்கப்பட்ட சாமானிய மக்கள் எப்படியெல்லாம் துன்புறுத்தப்பட்டார்கள் என்பதை மையப்படுத்தி கதைக்களத்தை உருவாக்கிய இயக்குநர்கள் சூரியக்கதிரும் கே.கார்த்திகேயனும் லாஜிக் ஓட்டைகளை கவனிக்காமல் விட்டதால், காட்சிகளில் நாடகத்தனம் நிறைந்திருப்பதால் படம் ஹிட் லிஸ்டில் சேர முடியாமல் திணறுகிறது.