விஜய் ஆண்டனி, விஜய் ரேஞ்சுக்கு மெர்சலாக நடிக்க நினைத்து ‘துப்பாக்கி’ தூக்கியிருக்கும் படம்.
பரபரப்பான சென்னையில், சட்டமன்றத் தேர்தல் நெருங்கிய நிலையில், தொடர்ச்சியாக சில கொலைகள் நடக்கிறது. அரசியல் தலைவர் ஒருவர் தேர்தல் செலவுக்காக வைத்திருக்கும் பல கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்படுகிறது. அதற்கெல்லாம் காரணம் யார் என தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக, அவர்கள் யாரைக் கண்டுபிடித்தார்கள், எதைக் கண்டுபிடித்தார்கள் என்பது திரைக்கதை…
அந்த மெல்லிய மீசை தாடியும், ஹேர் ஸ்டைலும் பழைய விஜய் ஆண்டனியின் அழகான தோற்றத்தை குறைத்திருக்க, காதலிக்கும் பெண்ணிடம் ‘அம்பி’யாகப் பழகுவது, அராஜகப் பேர்வழிகளை அடக்கி அழிக்கும்போது அந்நியனான மாறுவது என அப்படியும் இப்படியுமாய் செயல்பாடுகளில் வித்தியாசம் காட்டி களமாடியிருக்கிறார்.
ஒரு பக்கம் ஆளுங்கட்சி அமைச்சரிடம் பணிவு காட்டிக் கொண்டே, கொலைக் குற்றவாளியை அடையாளம் கண்டுபிடிக்கிற கெளதன் வாசுதேவ் மேனனின் நடிப்பிலிருக்கிற சுறுசுறுப்பு அவரது காவல்துறை உயரதிகாரி பாத்திரத்துக்கு தெம்பூட்டியிருக்கிறது.
விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக வருகிற ரியா சுமன் அழகாக இருக்கிறார்; நடிப்பிலும் அந்த அழகு வெளிப்படுகிறது.
கேடுகெட்ட அரசியல்வாதி எதையெல்லாம் செய்வாரோ அதையெல்லாம் உடலை அலட்டிக் கொள்ளாமல் நின்றுகொண்டும் அமர்ந்துகொண்டும் சரியாகச் செய்திருக்கிறார் சரண்ராஜ். அவருக்கு தம்பியாக வருகிற இயக்குநர் தமிழ், அரசியல்வாதியாக வருகிற ஆடுகளம் நரேன், ரெடின் கிங்ஸ்லி என இன்னபிற நடிகர் நடிகைகள் அவரவர் வேலையில் கச்சிதம்.
விவேக் மெர்வின் பின்னணி இசை விறுவிறுப்பாக பயணிக்கும் காட்சிகளின் வீரியத்தைக் கூட்டியிருக்க, ஐஸ்வர்யா தத்தா அசத்தலாக ஆடும் பாடலுக்கான இசை உற்சாகத்தை தூண்டுகிறது.
சிலருடைய சுயநலத்தால் மக்கள் பாதிக்கப்பட, அந்த பாதிப்பில் தன்னைச் சார்ந்தவர்களும் கலந்துவிட அதை பார்த்துக் கலங்கும் சாமானிய மனிதனின் கோபம் எப்படியான விளைவை உருவாக்கும் என்பதை எடுத்துக்காட்டும் வழக்கமான கதைக்களம்தான் என்றாலும்,
இந்த கதையில் அந்த சாமானியன் புத்திசாலியாக காய் நகர்த்தி எதிரிகளைப் பந்தாடுவதும் காரியம் சாதிப்பதும் திரைக்கதைக்கு ஊக்க மருந்தாகியிருக்கிறது.