‘ஹாட் ஸ்பாட்’ சினிமா விமர்சனம்

‘வருவது வரட்டும் பார்த்துக்கலாம்’ என்ற துணிச்சலோடு வில்லங்கமான படங்களை எடுப்பவர்களின் வரவு அதிகரித்திருக்கிற சூழலில் விஷமான சங்கதிகளோடும், ஏற்கும்படியான விஷயங்களோடும் அட்டனன்ஸ் போட்டிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்.

இது கட்டுப்பாடுகளை உடைத்தல், கலாச்சாரத்தை மீறுதல், பண்பாட்டைச் சிதைத்தல் என தான் சந்தோஷமாக வாழ்வதற்காக எதையும் செய்யத் துணிகிற தலைமுறை சூழ்ந்திருக்கிற காலகட்டம்.

இந்த காலகட்டத்திலும் தொடர்கிற ணாதிக்கத்தை அசைத்துப் பார்க்கிற ஒரு கதை, காதல் வயப்பட்டவர்கள் உறவு முறை நெருக்கடியால் மண வாழ்க்கையில் இணைய முடியாத இன்னொரு கதை, ண் விபச்சாரமும் அது சார்ந்த விபரீதமுமாக மற்றொரு கதை, குழந்தைகளின் குழந்தைப் பருவ இயல்பை குழிதோண்டிப் புதைக்கிற ரியாலிடி ஷோக்களை கண்டிக்கிற வேறொரு கதை என நான்கு கதைகளின் தொகுப்பாக உருவாகியிருக்கிறது ‘ஹாட் ஸ்பாட்.’‘ஹேப்பி மேரிட் ஃலைப்’ என்ற முதல் கதையில் காதலர்கள் ஆதித்யா பாஸ்கர், கெளரி கிஷனுக்கு இரு வீட்டார் சம்மதத்துடன் கல்யாணத்துக்கு ஏற்பாடாகிறது. ஆதித்யா கழுத்தில் கெளரி கிஷன் தாலி கட்டுகிறார். மருமகளுக்கு மாமியார் டார்ச்சர் கொடுப்பதைபோல், இந்த வித்தியாசமான திருமண உறவில் மருமகன் மாமனார் தருகிற அவஸ்தைகளை அனுபவிக்கிற பரிதாபச் சூழ்நிலை. நடித்திருப்பவர்கள் தங்கள் பங்களிப்பை கச்சிதமாக செய்ய, சற்றே கலகலப்போடு கருத்தும் சொல்லி முடிகிறது.

இரண்டாவது கதை ‘கோல்டன் ரூல்ஸ்.’ இதில் சாண்டி மாஸ்டரும் அம்மு அபிராமியும் காதலர்கள். தன் காதலைச் சொல்லி அப்பா அம்மாவிடம் சம்மதம் பெற அம்மு அபிராமி போடும் ஸ்கெட்ச் புத்திசாலித்தனமாகவும், கொஞ்சம் நெளிய வைப்பதாகவும் இருக்க… முடிவு தலையிலடித்துக் கொள்ளும்படி இருக்கிறது. யாருடைய நடிப்பிலும் குறையில்லை.

ஆண் விபச்சாரத்தின் நீள அகலங்களை காட்சிப்படுத்த முயற்சித்திருக்கிறது மூன்றாவது கதையான ‘தக்காளிச் சட்னி.’ அந்த முயற்சியில் பெரிதாய் தவறில்லை. அம்மாவும், மகனும் எக்குத்தப்பான இடத்தில் சந்திப்பதுபோல் கதையை சிந்தித்திருப்பதைத்தான் ஜீரணிக்க முடியவில்லை. சதையம்சமுள்ள இந்த கதையில் காதலனுக்கு பாடம் புகட்ட காதலி எடுக்கும் நடவடிக்கை ஒருவிதத்தில் சரிதான் என்றாலும் அந்த ராவான காட்சி முகஞ்சுளிக்க வைக்கிறது. சுபாஷ் ஏறியடித்திருக்கிற இந்த அத்தியாயத்தில் ஜனனி தரை லோக்கலாய் இறங்கியடித்திருக்கிறார்.

நான்காவதாக வருகிற ‘ஃபேம் கேம்’ என்ற கதையில் தங்களின் சிறுவயது மகனையும் மகளையும் ரியாலிடி ஷோவில் கலந்துகொள்ள வைத்து, அதன் தாக்கத்தால் படுபயங்கர விபரீதத்தை சந்திக்கிறார்கள் அந்த அப்பா அம்மா. அதில் அப்பாவாக கலையரசனும் அம்மாவாக சோபியாவும் யதார்த்தமாக நடித்திருக்க, இந்த கதை சமூகத்துக்கு விழிப்புணர்வுப் பாடம் நடத்தியிருக்கிறது.

நான்கு கதைகளோடு ஐந்தாவதாகவும் ஒரு கதை தொற்றிக் கொண்டிருக்கிறது. அதில் படம் இயக்குவதற்கான முயற்சியிலிருக்கிற இளைஞன் ஒருவன் தயாரிப்பாளரைத் தேடிப்பிடித்து கதை சொல்லி அசத்துகிறான். இந்த சுவாரஸ்யமான எபிசோடில் இளைஞனாக இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் ரசிக்கும்படி நடித்திருப்பதோடு, அவரிடம் கதை கேட்பவராக இந்த படத்தின் தயாரிப்பாளரையே நடிக்க வைத்திருக்கிறார் என்பது தவறாமல் சொல்ல வேண்டிய செய்தி.

பின்னணி இசை, பாடல்கள், ஒளிப்பதிவு, எடிட்டிங் என இன்னபிற அம்சங்கள் கதைக்களத்தின் தேவையை சரியாய் பூர்த்தி செய்திருக்கின்றன.

படம் பார்க்க முடிவு செய்யும்முன் படத்தின் டிரெய்லரை ஒருமுறை யூ டியூபில் பார்த்துவிடுங்கள். படத்துக்கு சென்சாரில் ‘ஏ’ சான்றிதழ் தந்திருப்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்…