ரூ. 10 லட்சம் கல்வி உதவித் தொகை… மாணவர்கள் ‘இன்ஸ்டிடியூஷன் ஆப் என்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி’ நிறுவனத்தில் விண்ணப்பிக்கலாம்!

இன்ஸ்டிடியூஷன் ஆப் என்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி (IET – Institution of Engineering and Technology) ‘ஐஇடி இந்தியா ஸ்காலர்ஷிப் விருது’க்கான விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் 7-வது ஆண்டாக இந்த கல்வி உதவித் தொகையை வழங்குகிறது. வருங்கால பொறியியல் தலைவர்களை கவுரவிக்கும் விதமாக மொத்தம் 10 லட்ச ரூபாய் பரிசுத் தொகையை இந்த கல்வி நிறுவனம் வழங்குகிறது.

அனைத்து ஏஐசிடிஇ, யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் மற்றும் தேசிய கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களும் இந்த கல்வி உதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்தியாவில் உள்ள இளங்கலை பொறியியல் மாணவர்களின் தனிப்பட்ட சிறப்பையும் புதுமையையும் திறமையையும் பரிசு அளித்து கவுரவிக்கும் நோக்கில் இந்த கல்வி உதவித் தொகை திட்டத்தை இன்ஸ்டிடியூஷன் ஆப் என்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி செயல்படுத்தி வருகிறது. இது நாட்டின் இளங்கலை பொறியியல் மாணவர்களுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய உதவித்தொகை ஆகும்.

ஜூன் 3, 2023 வரை விண்ணப்பிக்கலாம்.

இந்த உதவித் தொகையை பெற மேற்குறிப்பிட்ட கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் வரும் ஜூன் 3–ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதில் பங்கேற்ற முந்தைய வெற்றியாளர்கள் ஆப்பிள், போயிங், டெலாய்ட் மற்றும் எம்ஐடி போன்ற முன்னணி உலகளாவிய நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர், மேலும் சிலர் தொழில் முனைவோராகவும் மாறியுள்ளனர். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் கல்வி மற்றும் தொழில்நுட்ப திறன்கள், படைப்பாற்றல், புதுமை மற்றும் விளக்கக்காட்சி திறன் ஆகிய 4 நிலைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

இது குறித்து ஐஇடி இந்தியா நிறுவனத்தின் இயக்குனரும், தேசியத் தலைவருமான சேகர் சன்யால் கூறுகையில், தொழில்நுட்பம் சார்ந்த எதிர்காலத்திற்குள் நாம் நுழையும்போது, வருங்கால இளம் பொறியியல் தலைவர்களை அங்கீகரிப்பதும், ஊக்குவிப்பதும் முன்னெப்போதையும் விட இந்தக் காலக்கட்டத்தில் மிகவும் முக்கியமானதாகும். எங்களின் இந்த ஸ்காலர்ஷிப் விருது என்பது பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தனி நபரை கவுரவித்து ஊக்கப்படுத்துவதற்காக வழங்கப்படும் உதவித் தொகையாகும். கடந்த ஆண்டு ஏராளமான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரப்பெற்றன. அந்த வகையில் இந்த ஆண்டும் அதிக அளவில் விண்ணப்பங்கள் வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த உதவித் தொகையை பெற விண்ணப்பிக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

ஐஇடி இந்தியா ஸ்காலர்ஷிப் விருது 2023, சிறந்த ஆலோசனைக் குழுவால் வழிநடத்தப்படுகிறது, விருதுக்கான கட்டமைப்பை தேசியப் புகழ்பெற்ற கல்வியாளர்கள் மற்றும் கார்ப்பரேட் நிபுணர்கள் உருவாக்கி உள்ளனர். கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் அபிஜித் சக்ரபர்தி இந்த விருதுக்கான ஆலோசனைக் குழுவின் தலைவராக உள்ளார்.

இது குறித்து பேராசிரியர் சக்ரபர்தி கூறுகையில், ”ஐஇடி இந்தியா ஸ்காலர்ஷிப் விருதின் ஏழாவது பதிப்பின் துவக்கம் குறித்து அறிவிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த உதவித்தொகையானது இளங்கலை பொறியியல் மாணவர்கள் தங்கள் திறன்களையும் கண்டுபிடிப்புகளையும் தொழில்துறை வல்லுனர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு முன் வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் மூலம், இளங்கலைப் பட்டதாரி மாணவர்கள் பொறியியல் துறையில் சிறந்து விளங்குவதற்கு ஊக்கம் அளிப்பதோடு, இன்று நாம் எதிர்கொள்ளும் சவால்களைத் தீர்ப்பதில் அவர்கள் முக்கிய பங்கு வகிப்பதற்கான வாய்ப்பும் அவர்களுக்கு கிடைக்கும்” என்றார்.

இந்த விருது 4 நிலைகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகிறது. முதல் நிலையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் கல்வி, தனித் திறமை, தொழில்முறை செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும். ஒவ்வொரு வகைக்கும் ஏற்ப அவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இரண்டாவது நிலை, பட்டியலில் இடம் பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட பாடங்களில் அவர்களின் திறமை மற்றும் தொழில்நுட்ப அறிவை கண்டறிவதற்கு ஆன்லைன் தேர்வில் பங்கேற்க வேண்டும். மூன்றாவதாக, அதிக மதிப்பெண் பெற்ற 10 சதவீத மாணவர்கள் 5 பிராந்திய மையங்களில் நடைபெறும் பிராந்திய மதிப்பீடுகளில் பங்கேற்க அழைக்கப்படுவார்கள், அங்கு அவர்களின் தொழில்நுட்பத் தீர்வுகள் நிபுணர்கள் குழுவால் மதிப்பிடப்படும். பின்னர் இறுதியாக தேசிய இறுதிப் போட்டியில் பங்கேற்று அங்கு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படும்.

கடந்த முறை போட்டிக்கு மொத்தம் 29 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் தேசிய மற்றும் பிராந்திய அளவிலான வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு, முன்னாள் மத்திய இணை அமைச்சரும், 6 முறை பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற சுரேஷ் பிரபு பரிசு வழங்கி பாராட்டினார். இளம் பொறியாளர்களின் தனித்திறமையை வெளிக்கொண்டு வருவதோடு, அவர்களின் புதுமையான சிந்தனைகளை கவுரவிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அத்துடன் இந்தியாவில் பொறியியல் தரத்தை மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த உதவித் தொகையை ஐஇடி வழங்கி வருகிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here