சிறு முதலீட்டுப் படங்களுக்கு நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம்! – ‘ஐமா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ‘ஆக்சன் ரியாக்ஷன்’ ஜெனிஷ் பேச்சு

சர்வைவல் திரில்லர் சப்ஜெக்டில் அறிமுக இயக்குநர் ராகுல் ஆர் .கிருஷ்ணா இயக்கி, வரும் செப்டம்பர் 22;2023 அன்று வெளியாகவிருக்கும் படம் ‘ஐமா.’

யூனஸ், எல்வின் ஜூலியட், அகில் பிரபாகரன், ஷாஜி, ஷீரா, மேகா மாலு மனோகரன், படத்தின் தயாரித்துள்ள சண்முகம் ராமசாமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு செப்டம்பர் 20-ம் தேதி சென்னையில் நடந்தது. படக்குழுவினரோடு சிறப்பு விருந்தினர்களாக விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே. ராஜன், இயக்குநர் பேரரசு, இயக்குநர் கேபிள் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே.ராஜன் பேசும் போது, ‘‘சிறு முதலீட்டுப் படங்கள் தான் திரையுலகை என்றும் வாழவைத்துக் கொண்டிருக்கின்றன. அதன் மூலம் தான் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்று ‘ஜெயிலர்’ படம் வெற்றிகரமாக ஓடியுள்ளது. ரஜினிகாந்த் பெரிய நடிகர்தான். இருந்தாலும் அவருக்குக் கூட மலையாளத்திலிருந்து மோகன்லாலும் கன்னடத்தில் இருந்து சிவராஜ்குமாரும் வந்து நடிக்க வேண்டி உள்ளது. அப்படி இன்று சினிமா மாறியுள்ளது. இப்போதெல்லாம் வெளி மாநிலங்களில் இருந்து வந்து தமிழ்நாட்டில் படம் எடுக்கிறார்கள். அவர்களை நான் வரவேற்கிறேன். இந்தப் படமும் அப்படித்தான் உருவாகியுள்ளது. படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது, ‘‘இந்த ஐமா படத்தில் பத்து பாடல்கள் என்ற போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது .அதற்கு ஒரு தைரியம் வேண்டும். அதைப் படத்தில் சரிவர வைத்திருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்.

இந்தப் படத்தில் கதாநாயகன் பேசும்போது கண்ணாடி உடைக்கும் காட்சியில் நிஜமாகவே நடித்தேன் என்றார். கத்தியால் குத்தும் காட்சி என்றால் நிஜமாகவே குத்தி விட முடியுமா? அப்படி எல்லாம் அபாயகரமான காட்சிகளில் நடிக்கக் கூடாது. அதற்கு அவசியமும் இல்லை. ஏனென்றால் அந்த அளவிற்கு வசதிகள் வந்து விட்டன. மெதுவாக நடந்து வருவதைக் கூட ஓடி வருவது போல் எடுக்க முடியும். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமி பேசும்போது, நான் ஐடி துறையில் இருந்தவன். எனக்கு சினிமாவின் மீது ஆர்வமுண்டு. நடிப்பின் மீது மோகம் இருந்தது. ஒரு நடிகராக நான் யாரிடமும் போய் வாய்ப்பு கேட்க முடியாது.அது எப்படி என்று எனக்குத் தெரியாது. எனவே நானே ஒரு படத்தைத் தயாரித்து அதில் நடிப்பதாக முடிவு எடுத்தேன். அப்படித்தான் இந்த ‘ஐமா’ படம் உருவானது. இதில் இயக்குநர் சொன்ன கதை எனக்குப் பிடித்திருந்ததால் தயாரிக்க ஒப்புக்கொண்டேன்.

இன்று படம் எடுப்பதை விட வெளியிடுவது சிரமமாக உள்ளது. படத்தைப் போட்டுக் காட்ட அழைத்தால்கூட யாரும் பார்க்க வருவதில்லை. இந்த நிலைமை சீரடைய வேண்டும் .ஊடகங்கள் இந்தப் படத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும்” என்றார்.

படத்தை வெளியிடும் ‘ஆக்சன் ரியாக்ஷன்’ விநியோக நிறுவனத்தின் ஜெனிஷ் பேசும்போது, ‘‘சிறு முதலீட்டுப் படங்களுக்கு நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம் .ஊடகங்கள் என்றும் சிறு முதலீட்டுப் படங்களையும் நல்ல முயற்சிகளையும் கைவிட்டதில்லை. அந்த நம்பிக்கையில் இந்தப் படத்தை வெளியிடுகிறோம்” என்றார்.

இயக்குநர் கேபிள் சங்கர், படத்தின் நாயகன் யூனஸ், நாயகி எவ்லின் ஜூலியட் இசையமைப்பாளர் கே. ஆர். ராகுல், ஒளிப்பதிவாளர் விஷ்ணு கண்ணன் உள்ளிட்ட படக்குழுவினரும் பேசினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here