சிக்கல் ராஜேஷ் இயக்கத்தில், தயாரிப்பாளர் மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்கும் ‘இரவின் விழிகள்’ படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் பேசிய இயக்குநர் சிக்கல் ராஜேஷ் “படத்தின் தயாரிப்பாளர் மகேந்திரன் என் நண்பர். பலரிடம் இந்த கதையை நான் சொல்வதை பார்த்த அவர், நானே இந்த படத்தை தயாரிக்கிறேன் என்று முன் வந்தார். முதல் கட்ட படப்பிடிப்பிற்கு பிறகு மேற்கொண்டு நகர்வதில் சிக்கல் எழுந்தது.. ஆனால் கதை பிடித்து இருந்ததால் பல சிரமங்களை ஏற்றுக்கொண்டு இந்த படத்தைத் தயாரித்தார்.
படத்தொகுப்பாளர் ராமர் படத்தொகுப்பை முடிந்தபின், படம் நன்றாக இருக்கிறது.. இன்னும் இரண்டு பாடல்களை சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்.
மக்களை திருப்திப்படுத்துவதையும் தாண்டி இங்கே வியாபாரம் என்று ஒன்று இருக்கிறது. தயாரிப்பாளரும் நஷ்டப்படக்கூடாது என்பதால் அதை தயாரிப்பாளரிடம் சொன்னேன். அவர் அதற்கு ஒப்புக்கொண்டார். அது மட்டுமல்ல, படத்தில் ஏற்கனவே எடுத்த கொஞ்சம் திருப்தி இல்லாத கிட்டத்தட்ட 12 நாள் எடுத்த காட்சிகளை தூக்கிவிட்டு புதிதாக எடுத்தோம். அந்த அளவுக்கு ஒத்துழைப்பு தந்தார்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும் கூட பெண்களை அடக்கி ஒடுக்கி வைக்கவே முயற்சி செய்தார்கள். அதன்பிறகு சில அரசியல் கட்சிகள், முற்போக்கு சிந்தனையாளர்கள் வந்து அவற்றை மாற்றி அமைக்க முயற்சி செய்தார்கள். அதற்கான சட்டங்களும் கொண்டுவரப்பட்டன.
ஆனாலும் இப்போது வரை பெண்களுக்கான அநீதியும் கொடுமைகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதைக் கேட்கும்போதே மனது அதிர்கிறது. அதன் விளைவு தான் இந்த இரவின் விழிகள் படம்.
இந்த சமுதாயத்திற்கு நான் என்ன செய்ய வேண்டும், என்ன சொல்ல வேண்டும் என நினைத்தேனோ அதை தெளிவாகவும் தீர்க்கமாகவும் சொல்லி இருக்கிறேன்.
இசையமைப்பாளர் நான் என் மனதில் என்ன வேண்டும் என நினைக்கிறேனோ, அதை அழகான பாடல்களாகக் கொடுத்தார்.
ஏற்காடு பகுதியில் வாகனங்கள் கூட செல்ல முடியாத இடங்களில் படப்பிடிப்பை நடத்தினோம். ஒரு சண்டைக் காட்சியில் எண்பது அடி உயரத்திற்கு என்னை கம்பியில் கட்டி தூக்கியவர்கள், இரண்டு மூன்று நிமிடம் கீழே இறக்காமல் அந்தரத்திலேயே தொங்க விட்டு விட்டனர். அந்த சில நிமிடங்கள் கீழே பார்க்கும் போது மிகவும் திகிலாக இருந்தது” என்றார்.
படம் பற்றி:-
தயாரிப்பாளர் மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க மற்றொரு கதாபாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் நடித்திருக்கிறார்.
கன்னடத்தில் வெளியான ‘பங்காரா’ என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நீமா ரே இதில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்….
மேலும் முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி இராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு ஏ.எம் அசார் இசையமைத்துள்ளார். பாஸ்கர் ஒளிப்பதிவை கவனிக்க, விடுதலை படத்தின் படத்தொகுப்பாளர் ஆர்.ராமர் மற்றும் வெங்கடேஷ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளனர்.
சண்டைப் பயிற்சியை சரவெடி சரவணன் மற்றும் சூப்பர்குட் ஜீவா ஆகியோரும், நடனத்தை எல்கே ஆண்டனியும் வடிவமைத்துள்ளனர். பாடல்களை அரவிந்த் அக்ரம் எழுதியுள்ளார்.
டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் ஆர்.வி உதயகுமார், பேரரசு, மு.களஞ்சியம், போஸ் வெங்கட், நடிகை நமீதாவின் கணவர் வீரா, நடிகை கோமல் சர்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

