தமிழ் சினிமா ரஜினி, பிரபு காலம் போல் இல்லை; நிலைமை மாறிவிட்டது! -‘இடி மின்னல் காதல்’ இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பி.வாசு பேச்சு

சிபி, பவ்யா த்ரிகா, யாஸ்மின் பொன்னப்பா நடிப்பில் பாலாஜி மாதவன் இயக்கத்தில், மாறுபட்ட திரைக்கதையில் பரபரப்பான எமோஷனல் டிராமாவாக உருவாகியுள்ள படம் ‘இடி மின்னல் காதல்.’ இந்த படம் வரும் மார்ச் 29-ம் தேதி வெளிவரவிருக்கிறது. முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் தயாரிப்பாளரும் இயக்குநருமான பாலாஜி மாதவன் பேசியபோது, ”பி.வாசு அங்கிள் குடும்பத்திலிருந்து மூன்றாவது தலைமுறையாக சினிமாவில் வந்துள்ளோம். சினிமாவுக்குள் அறிமுகமாக வேண்டும் என நினைத்த போது, மிஷ்கின் சாரிடமிருந்தது தான் என் திரைப்பயணம் ஆரம்பமானது. அவரிடம் அஸிஸ்டெண்டாக வேலை பார்த்தேன். பின்பு மாதவன் சாரிடம். அவரை நடிகராகத் தான் அணுகினேன், ராக்கெட்டரி ஸ்கிரிப்ட் தந்தார். அப்போது அவர் இயக்குநர் என்பதே தெரியாது. ஆனால் பிறகு அந்தப்படத்தில் இணைந்தேன். அந்தப்படம் என்னை மாற்றியது. அவர் இயக்குநராகப் பிரமிப்பைத் தந்தார். அந்தப்படம் மிகப்பெரிய அனுபவம்.

மிஷ்கின் சாரிடமும், மாதவன் சாரிடமும் முழுமையாக முழுப்படத்திலும் வேலை பார்த்தேன். பின் என் திரைக்கதையை எழுத ஆரம்பித்த போது, என் நண்பன் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒளிப்பதிவாளர் பெரும் துணையாக இருந்தார். அவர் தான் நாமே பண்ணலாம் என சொன்னார் அங்கிருந்துதான் எங்கள் பாவகி கம்பெனி உதயமானது. அந்த ரெண்டு பேருக்கும் இந்நேரத்தில் நான் நன்றி கூறிக்கொள்கிறேன். அந்த நிலையிலிருந்து பலரும் எங்களுக்கு உதவினார்கள். யாருமே உங்களால் முடியுமா? எனக் கேட்கவில்லை முழு ஆதரவு தந்தார்கள். ராதாரவி சார், பாலாஜி சக்திவேல் சார், ஆண்டனி சார் எல்லோரும் முழு ஆதரவைத் தந்தார்கள்.

இந்தப்படத்தின் கதை முடிந்த போது, சிபியை அணுகினேன். அவர் கதை மட்டுமல்ல, திரைக்கதையும் கொடுங்கள் படிக்கிறேன் என்றார். அங்கிருந்தே அவரை எனக்குப் பிடிக்க ஆரம்பித்துவிட்டது. இசையமைப்பாளர் சாம். மாதவன் சாருக்கு செய்த கதைக்கும் சாம் தான் மியூசிக் என்று இருந்தது. இப்போதும் அவர் அந்தப்படத்தை நாம் கண்டிப்பாகச் செய்கிறோம் என்று சொல்வார். இந்தப்படத்தில் அசத்தலாக மியூசிக் தந்துள்ளார். நாங்கள் எடுத்துக் கொடுத்த விஷுவலுக்கு மியூசிக் போட்டு அசத்தினார். ஒரு பாடல் எழுத மிஷ்கின் சாரை அணுகினேன், ஆனால் அவர் கபிலன் தான் இதற்கு சரியாக வருவார் என்றார். கபிலன் சாருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தப்படத்தில் எல்லோரும் படத்தை நம்பி படத்திற்காக வேலை பார்த்தார்கள். படத்தில் நிறைய செட் இருக்கிறது, பாலசுப்பிரமணியம் படத்தின் புரடக்சன் டிசைனை மிக அருமையாகச் செய்து தந்தார். அவருக்கு நன்றி. காக்கா முட்டை வசனகர்த்தா ஆனந்த முருகேசன் ராக்கெட்ரியில் பழக்கம். அவர் தான் இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். அவரை நடிக்கவும் வைத்துள்ளேன் அவருக்கு நன்றி. எல்லோருமே அற்புதமாக நடித்துள்ளார்கள். எல்லோருக்கும் என் நன்றிகள்.என் மாமா இயக்குநர் வாசு எப்போதும் ஆதரவாக இருந்துள்ளார். ஒரு நல்ல படம் தந்துள்ளோம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.

இயக்குநர் வாசு பேசியபோது, ”பாலாஜி என்னிடம் கதையே சொல்லவில்லை ஆனால் சைக்கலாஜிகலாக இருக்குமென்பது, இங்கு பேசியவர்களை வைத்துத் தெரிகிறது. ஒரு நல்ல கதையை எடுத்துள்ளனர். இங்கு எல்லோருமே இப்படத்தின் அனுபவம் பற்றி அதன் கஷ்டம் பற்றிப் பேசினார்கள். இதைக்கேட்ட பிறகு தான் பல படங்கள் எடுத்த எங்கள் அனுபவங்கள் பிரமிப்பு தருகிறது.

யார் ஹீரோ எனக்கேட்காமல் என்ன கதை எனக்கேட்க வேண்டும் எனச் சொன்ன போது, எனக்குக் கைதட்டத் தோன்றியது. நாங்கள் ஒரு பொற்காலத்தில் படம் எடுத்தோம். சின்னத்தம்பி படத்தில் பிரபுவிற்குக் கதையே தெரியாது. ரஜினி சாரும் அப்படித்தான் ஒரு முறை கதை கேட்டால் அதன் பிறகு எதுவும் கேட்க மாட்டார். இன்று நிலைமை மாறிவிட்டது. பாலாஜி என்ன கஷ்டப்பட்டாலும் கண்டிப்பாக சினிமாவை விட்டுப் போக மாட்டார் அவரிடம் திறமை இருக்கிறது. என் மகன் இந்தப்படம் பார்த்து அழுதுவிட்டேன் எனச் சொன்னான். மாமாவாக பாலாஜியை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். ஒரு நல்ல கதைக்கு மீடியா எப்போதும் முழு ஆதரவைத் தரும். எல்லோரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள்” என்றார்.

நிகழ்வில் தயாரிப்பாளர் ஜெயச்சந்தர், எழுத்தாளர் ஆனந்த் குமரேசன், நடிகை யாஸ்மின், நடிகர் வின்சென்ட் நகுல், ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம், நடிகை பவ்யா, நடிகர் ஜெகன், இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., நடிகர் சிபி உள்ளிட்டோரும் பேசினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here