போதைப் பொருட்களின் தீமைகளை எடுத்துச் சொல்லி, சமூக விழிப்புணர்வைத் தூண்டும் விதத்திலான கதைக்களத்தில் உருவாகியுள்ள படம் ‘இங்கு மிருகங்கள் வாழும் இடம்.’
இந்த படம் ‘ரத்னம்’, ‘அரண்மனை 4’ என பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகும் ஏப்ரல் 26 அன்று திரைக்கு வரவுள்ளது. கதையின் மீது நம்பிக்கை வைத்து படத்தை வெளியிட முன்வந்திருக்கிறார் ‘ஆக்சன் ரியாக்சன்’ ஜெனிஷ்.
இந்த நிலையில், படத்தின் கதாநாயகனும் தயாரிப்பாளருமான பைன்சான், எளிய பட்ஜெட் படங்களின் வெளியீட்டுக்குத் துணை நிற்கிற சிறு முதலீட்டுப் பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ஆர் கே அன்புச் செல்வன், படத்தின் ஸ்டன்ட் மாஸ்டர் ‘இடிமின்னல்’ இளங்கோ உள்ளிட்டோர் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய பைன்ஜான் ,”நான் நடிப்பதற்காகத்தான் இந்த சினிமா துறைக்குள் வந்தேன். ஆனால், சூழ்நிலையால் தயாரிப்பாளரானேன். சினிமா என்கிற மிக புனிதமான துறையில் அந்த கலையை நேசிக்காமல் எப்படி வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்கலாம் என்று உள்ளே வருகிறவர்கள் சினிமாவை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியான சிலரிடம் நான் சிக்கிக் கொண்டேன். படம் இயக்குவதாக சொல்லி என்னிடம் வந்த இரண்டு பேர், கேமரா மேன் என சிலர் என்னை ஏமாற்றினார்கள். அதையெல்லாம் தாண்டி, சென்சாருக்கு போனால் படத்தில் டிரக்ஸ் பயன்படுத்துகிற காட்சிகள் வருவதால் ஏ சான்றிதழ்தான் தர முடியும் என்று சொன்னார்கள். படத்தில் அப்படியான காட்சிகள் இருப்பது உண்மைதான். ஆனால் அதை வைத்து போதைப் பழக்கம் எந்தளவுக்கு அபத்தை உருவாக்குகிறது என சொல்லியிருக்கிறோம். அதை அவர்கள் ஒத்துக் கொள்வதாயில்லை. ஏ சான்றிதழ்தான் தர முடியும் என உறுதியாக இருந்தார்கள். வேறு வழியின்றி ஒத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. சென்சாரில் இப்படியான தேவையற்ற கெடுபிடிகளை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் சமூகத்துக்கு நல்ல படங்களை தர முடியாது” என்றார்.
சிறு முதலீட்டுப் பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ஆர் கே அன்புச் செல்வன் பேசியபோது, ”நான் இந்த படத்தை பார்த்துவிட்டேன். படத்தில் நல்ல மெசேஜ் இருக்கிறது. கதாநாயகனாக பைன்ஜான் சிறப்பாக நடித்துள்ளார். சேது படத்தில் விக்ரம் எப்படி சிரமப்பட்டு நடித்திருந்தாரோ அப்படி நடித்துள்ளார். அதனால் என்னால் இயன்ற அத்தனை ஆதரவையும் தந்திருக்கிறேன்.
நல்ல படத்திற்கு வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. தயாரிப்பாளர் என்றால் அவர் தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். கதாநாயகன் என்றால் அவர் அவருடைய நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். இயக்குநர் என்றால் அவர் கதையம்சத்தில் கவனம் செலுத்த வேண்டும். அப்படி இல்லாமல் ஒருவரே தயாரித்து, அவரே நடித்து, அவரே இயக்கி, பாடல்கள் எழுதி, இசையமைத்து என பல வேலைகளைச் செய்வதால்தான் தரமான படங்கள் உருவாவதில்லை.
ஒருவரே எல்லா வேலைகளையும் செய்யலாம்தான். அதில் தவறில்லை. ஆனால், போதிய அனுபவம் இல்லாமல் சினிமாவில் நுழைந்ததுமே ஆர்வக் கோளாறில் பல வேலைகளைச் செய்து படமெடுப்பவர்களால் தான் சினிமா கெட்டுப் போகிறது. சிறு படங்கள் என்பது பிரச்சனையே இல்லை. நல்ல படமாக இருந்தால் அவற்றை வெளியிட, டிவி, ஓடிடி தளத்தில் கொண்டு போய் சேர்க்க, தயாரிப்பாளர் லாபம் பார்க்க அனைத்து உதவிகளையும் எங்கள் சங்கம் சார்பில் செய்வேன்” என்றார்.
ஸ்டண்ட் மாஸ்டர் இடி மின்னல் இளங்கோ பேசியபோது, ”படத்தின் கடைசி 25 நிமிடங்கள் பைன்ஜான் மிகமிக அருவருப்பான குப்பை மேட்டில் உடலை வருத்திக் கொண்டு உருண்டு புரண்டு நடித்துள்ளார். அந்த காட்சிகளில் அவருடைய நடிப்பு கண்கலங்க வைக்கும். அப்படி நடித்ததால் ஒரு வாரம் வரை சாப்பிட முடியாமல் தவித்து, உடலளவில் பெரிய ஆபத்துகளை சந்தித்து மீண்டு வந்துள்ளார்.” என்றார்.