போதைக்கு அடிமையான, அதிகார பலத்திலும் பணபலத்திலும் மிதக்கிற மனிதர்களுக்குள் இருக்கிற மிருகங்களால் சமூகம் சந்திக்கும் ஆபத்துகளை, சீரழிவுகளை பல படங்களில் பார்த்தாயிற்று. மீண்டும் ஒருமுறை பார்க்கிற வாய்ப்பைத் தருகிறது ‘இங்கு மிருகங்கள் வாழும் இடம்.’
மனைவியை இழந்த நிலையில் மகளை பாசம் கொட்டி வளர்க்கும் அந்த அப்பாவுக்கு, ஒருநாள் அந்த மகள் சிலரால் பேராபத்துக்கு ஆளான தகவல் கிடைக்கிறது. அதற்கு காரணமானவர்களை சட்டத்தின் மூலம் தண்டிக்க நினைக்கிறார். அவரால் அது முடிந்ததா இல்லையா என்பதே காட்சிகளின் தொடர்ச்சி… இயக்கம் எஸ்.சசிகுமார்
மகள் மீது பாசத்தைப் பொழிவதாகட்டும், மகளை வேறு விதமாக பார்க்கும்போது மனம் உடைவதாகட்டும், மகளின் நிலைக்கு காரணமானவர்களை பழிவாங்க துடிப்பதாகட்டும் புதுமுகம் என்று தெரியாதபடி கதாபாத்திரத்தின் தன்மையுணர்ந்து நடித்துள்ளார் இந்த படத்தை தயாரித்துள்ள ஃபைன்ஜான். கிளைமாக்ஸில் அருவருப்பான குப்பை மேட்டில் வேறொரு பரிமாணத்தில் தோன்றி ‘அவரா இவர்?’ என ஆச்சரியப்படவும் வைத்துள்ளார். நடிப்பை கொஞ்சம் ஃபைன் டியூன் செய்து கொண்டால் அடுத்தடுத்த படங்களில் பெரியளவில் பாராட்டும்படி வெளிப்படலாம்.
பாசமான மகளாக ஸ்ரீதேவி உன்னிகிருஷ்ணன். ஹோம்லி லுக்கில் லட்சணமாக இருக்கிற அவரது வெள்ளந்தியான சிரிப்பும் இயல்பான நடிப்பும் ஈர்க்கிறது. அதே வெள்ளந்தித்தனத்துடன் காதலனை நம்பிப் போய் பரிதாப முடிவை சம்பாதிப்பதன் மூலம், உணர்ச்சி வசப்பட்டு காதல் வலையில் வீழ்கிற பெண்களுக்கு, காதலனின் அத்துமீறலில் சுதாரிக்காத பெண்களுக்கு எச்சரிக்கை மணியடித்திருக்கிறார்.
பெண்களைக் காதலித்து காமப் பசிக்கு இரையாக்குவது, காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்குவது என துரோகம், குரூரம், கொடூரம் என அனைத்தின் மொத்த உருவமாக வருகிற இளைஞர்கள் நான்கு பேரும் தங்களின் பங்களிப்பை மிகச் சரியாக பரிமாறியிருக்கிறார்கள்.
வழக்கமாக கேடுகெட்ட போலீஸாகவே பார்த்துப் பழகிய சேரன் ராஜ், இந்த படத்தில் நேர்மையான காவல்துறை உயரதிகாரியாக கம்பீரம் காட்டியிருக்கிறார்.
கதாநாயகியின் இளவயது தோற்றத்தில் வருகிற சிறுமி அத்தனை அழகு. அந்த சிறுமி காதாநாயகியின் சாயலுக்கு ஒத்துப் போவது வியக்க வைக்கும் சங்கதி. அதிலிருந்து கதாபாத்திர தேர்வுக்காக இயக்குநரும் தயாரிப்பாளரும் பெரிதாய் மெனக்கெட்டிருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
அமைச்சராக வந்து அதிகார பலத்தை வெளிப்படுத்துகிறவர், வழக்கறிஞராக வருகிற லவ்லி ஆனந்த் உள்ளிட்ட இன்னபிற நடிகர்கள் அவரவர் பங்களிப்பை சரியாகச் செய்திருக்க, ஒளிப்பதிவை நேர்த்தியாக கையாண்டிருக்கிறார் சந்திரன் சாமி.
‘எனக்கு ஐஸ் விக்கிறவனைகூட பிடிக்கும்; ஐஸ் வைக்கிறவனை பிடிக்காது’, லவ்வ கூட தகுதி பாத்துதான் பண்ணணும்’ என வந்து விழும் வசனங்கள் நறுக் சுறுக்!
கதாநாயகன் சட்டத்தை நம்பி ஏமாற்றத்தை சந்தித்தபின், தானே சட்டத்தை கையிலெடுத்து சீறிப் பாயும்போது ஒலிக்கும் ‘வெறிகொண்ட புலி ஒண்ணு’ பாடல் உற்சாகத்தையும் சிலிர்ப்பையும் சேர்த்துத் தருகிறது.
வித்யாஷரண் இசையில், அப்பாவும் மகளும் மல்லிகைத் தோட்டத்தில் கொஞ்சித் திரியும் ‘ஆரிரோ ஆராரிரோ’ பாடல் இதம் தருகிறது.
கர்த்தரை வணங்கிவிட்டு செல்லும் பெண் ஆபத்தை சந்திப்பது போல் வைத்திருக்கும் காட்சியின் வழியாக என்ன சொல்ல வருகிறார் என்பது இயக்குநருக்கே வெளிச்சம்.
உருவாக்கத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான குறைகள் இருந்தாலும், சில காட்சிகளின் அடுத்தகட்ட நகர்வு யூகிக்க முடிவதாக இருந்தாலும்,
சொல்ல வந்த விஷயத்தில் சமூக அக்கறை கலந்திருக்கிற, குத்துப் பாட்டு அதுஇதுவென மசாலா அம்சங்களைக் கலந்து கதையோட்டத்தின் வீரியத்தைக் குறைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிற படக்குழுவுக்கு பெரிதாய் ஒரு பாராட்டு!
‘இது மிருகங்கள் வாழும் இடம்’, ரசிகர்கள் குவிய வேண்டிய களம்!