‘இடி மின்னல் காதல்’ சினிமா விமர்சனம்

தமிழ் சினிமாவில் ஹீரோக்கள், வில்லன்கள் செய்யும் அத்தனை குற்றச் செயல்களையும் செய்துவிட்டு கூலாக பஞ்ச் டயலாக் பேசிக் கொண்டிருக்கும் சூழலில், தெரியாமல் ஒரு குற்றத்தை செய்துவிட்டு குற்றவுணர்ச்சியில் தவிப்பவனாக, செய்த குற்றத்துக்கு பரிகாரம் செய்யத் துடிப்பவனாக ஹீரோவை சித்தரித்திருக்கிற ‘இடி மின்னல் காதல்.’

தான் கார் ஓட்டிக் கொண்டிருந்தபோது ஒருவர் மீது மோதி, அவர் இறந்துவிட அந்த குற்றத்தை காவல்துறையிடமிருந்து மறைக்கும் முடிவுக்கு வருகிறார் படத்தின் ஹீரோ சிபி.

நண்பரும் காதலியும் வற்புறுத்துவதாலேயே அவர் அந்த முடிவுக்கு வருகிறார் என்பது முதலாவது முக்கியச் செய்தி.

விபத்து நடக்க காரணமாக இருந்தது அந்த காதலி அவருக்கு தரவிருந்த முத்தம் என்பது இரண்டாவது முக்கியச் செய்தி.

ஹீரோ சில தினங்கள் கழித்து, தன் தகுதிக்கான வேலையில் சேர வெளிநாடு போவதற்கு தயாராகிக் கொண்டிருந்த சூழலில் இந்த விபத்து நடந்தது என்பது மூன்றாவது முக்கியச் செய்தி.

இதே கதையில் சிறுவன் ஒருவனின் தந்தை காணாது போக, அந்த சிறுவனுக்கு ‘கே‘டு கெட்ட கொலைகார ரவுடியொருவன் மூலம் ஆபத்து சூழ்கிறது. ஹீரோவுக்கு அந்த சிறுவனை அவனிடமிருந்து காப்பாற்றும் வாய்ப்பு கிடைக்க, காப்பாற்றி அவனை தன் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வருகிறார். இதனால் ரவுடியின் பகையைச் சம்பாதிக்கிறார். இப்போது ஹீரோவுக்கு ரவுடியிடமிருந்து தன்னையும் சிறுவனையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய சூழ்நிலை…

இப்படி நகரும் கதையில் ஹீரோ நினைத்தபடி குற்றத்தை மறைக்க முடிந்ததா, திட்டமிட்டபடி வெளிநாட்டுக்குப் போக முடிந்ததா, ரவுடியிடமிருந்து தப்பிக்க முடிந்ததா என்பதே கதையோட்டம். இயக்கம் பாலாஜி மாதவன்

ஹீரோவுக்கான அனைத்து அம்சங்களோடும் இருக்கிற சிபி ஏற்ற பாத்திரத்திற்கேற்ப ஓரளவு பொருத்தமான நடிப்பையும் தந்திருக்கிறார். அடுத்தடுத்த படங்களில் தேர்ந்த நடிப்பை வழங்குவார் என்று நம்பலாம்.

பளபளப்பும் மினுமினுப்புமாக வலம் வருகிற நாயகி பவ்யா திரிகா இடம் பொருள் பார்க்காமல் காதலனுக்கு முத்தம் கொடுக்கப் பாய்வது, காதலனை சிக்கலிலிருந்து மீட்டெடுக்கப் போராடுவது, காதலன் பாதுகாக்கும் சிறுவன் மீது அன்பைப் பொழிவது என அலட்டலற்ற நடிப்புப் பங்களிப்பால் கவர்கிறார்.

அப்பாவைப் பிரிந்த வேதனையில் சற்றே மனநலம் பாதிக்கப்பட்டு முரட்டுத்தனமாக நடந்துகொள்கிற சிறுவன் ஆதித்யாவின் நடிப்பு ஓகே ரகம்.

சிறுவன் குளிப்பதற்குப் பயன்படுத்தும் சோப்பை முகர்ந்து பார்த்து மூடாகிற வில்லன் வின்சென்ட் நகுல், தனது பெரிய விழிகளை முடிந்தமட்டும் விரித்து உருட்டி மிரட்டியிருக்கிறார்.

பாலியல் தொழிலாளியாக வருகிற யாஸ்மின் வெகுளித்தனமான நடிப்பால் கவர்கிறார்.

நாயகனின் நண்பனாக வருகிற ஜெகன், சிறுவன் ஆதித்யாவின் தந்தையாக வருகிற மனோஜ் முல்லத் உள்ளிட்டோரின் நடிப்பு கச்சிதம்.

கிறிஸ்தவ போதகராக வரும் ராதாரவி, போலீஸ் அதிகாரியாக வரும் பாலாஜி சக்திவேல் இருவரின் நடிப்பும் தனித்துத் தெரிகிறது.

ஊர் உலகத்தில் யார் நொடித்துப் போனாலும் சேட்ஜிகளின் சாம்ராஜ்யம் செல்வ செழிப்புடனே இருக்கிற நம்மூரில், சேட்ஜியொருவர் பொருளாதாரத்தில் நலிவடைந்து, கெட்ட சகவாசத்தால் உடலில் நோய் சுமந்து, தற்கொலை முடிவெடுப்பதெல்லாம் தமிழ் சினிமாவுக்கு புதுசோ புதுசு.

சாம் சி எஸ்ஸின் பின்னணி இசை, ஜெயச்சந்தர் பின்னம்னேனியின் ஒளிப்பதிவு நேர்த்தி.

‘இடி மின்னல் காதல்’ மாறுபட்ட அடிதடி மோதல்!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here