தமிழ் சினிமாவில் முதன் முறையாக நிஜ கணவன் மனைவி ஹீரோ, ஹீரோயினாக நடித்து இயக்கிய ‘ல்தகா சைஆ’ விரைவில் ரிலீஸ்!

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் சதா நாடார். அவருடைய மனைவி மோனிகா செலேனா. இருவரும் அறிமுக நாயகன் நாயகியாக நடித்து, அவர்களே இயக்கி, தயாரித்திருக்கும் படம் ‘ல்தகா சைஆ.’ நிஜ தம்பதிகள் தயாரித்து, இயக்கி, நடித்த முதல் தமிழ்த் திரைப்படம் இதுவாகவே  இருக்கக்கூடும்.

படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள், பணிபுரிந்துள்ள தொழில்நுட்பக் கலைஞர்கள், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் என அனைவருமே புது முகங்கள்.

விரைவில் வெளிவரவிருக்கும் இந்த படம் பற்றி இயக்குநர் சதா நாடார் பேசியபோது, ”எனக்குச் சிறுவயதில் இருந்து அரசியல் போல சினிமாவில் ஆர்வம் உண்டு. திரைப்படங்கள் மூலம் நமது சமுதாயத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தேன். அதற்கு முன்பு ஒரு முன்னோட்டம் போல ஒரு திரைப்படம் எடுப்பது என்று முடிவு செய்தோம். அதுதான் ‘ல் தகா சைஆ.’ கதாநாயகனாக நானும், கதாநாயகியாக நடித்திருக்கிறோம். எங்களைத் தவிர ஏராளமான கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள்.

ஒரு குடும்பத்தில் காதல் மனைவியுடன் இருக்கும் ஒருவனுக்கு ஒரு பிரச்சினை வரும்போது எப்படி எதிர்கொண்டு சமாளிக்கிறான் என்பதை ஒரு முழுப் படமாக சுவையான திரைக்கதையுடன் குடும்பத்தினருடன் பார்க்கும் படியாக உருவாக்கியிருக்கிறோம். படப்பிடிப்பை ஊட்டி , ஈரோடு, சென்னை, கோயம்புத்தூர், ஏற்காடு, பாண்டிச்சேரி, கிழக்கு கடற்கரை சாலை, கோவா உள்ளிட்ட இடங்களில் நடத்தி முடித்துள்ளோம்.

நான் யாரிடமும் உதவி இயக்குநராக இருந்ததில்லை. சினிமா பார்த்துப் பார்த்துக் கற்றுக் கொண்டவைதான் ஏராளம். அதனால் நாங்கள் உருவாக்கிய கதையை எங்களால் சரியாகச் சொல்ல முடியும் என்ற நம்பிக்கையோடு இந்தப் படத்தை எடுத்து முடித்து இருக்கிறோம். அது சிறப்பாக வந்திருப்பதாகவே உணர்கிறோம். படம் பார்ப்பவர்களுக்கு திருப்தி அளிக்கக் கூடிய வகையில் இருக்கும் என்று நம்புகிறோம்” என்கிறார்.

படத்தின் நாயகியும் சதா நாடாரின் மனைவியுமான மோனிகா செலேனா பேசும்போது, ”எனக்கு சின்ன வயதில் இருந்து சினிமா ஆர்வம் உண்டு. ஏனென்றால் என் அப்பா இரண்டு படங்களில் நடித்தார். அதை எனது தாத்தா தயாரித்தார். அப்பா மூலம் பார்த்து பார்த்து எனக்கு சினிமா மீது ஆர்வம் வந்திருந்தது. என் கணவரும் அதற்கான வாய்ப்பைத் தரும்போது மகிழ்ச்சியாக இந்தப் படத்தில் நான் இணை இயக்குநராகப் பொறுப்பேற்றுப் பணிகளை நான் பகிர்ந்து கொண்டேன். படம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் உருவாகியுள்ளது” என்கிறார்.

படக்குழு:-
தயாரிப்பு: கப்பில் கிரியேஷன்ஸ்
ஒளிப்பதிவு: எம் எஸ் மனோகுமார்
இசை: ஈ ஜே. ஜான்சன்
பாடல்கள்: க .சுதந்திரன்
பின்னணி இசை: சுரேஷ் ஷர்மா
படத்தொகுப்பு: பரணி செல்வம்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here