இந்தியன் 2 சினிமா விமர்சனம்

தர்மம் எங்கெல்லாம் அழிந்து அதர்மம் தலைதூக்குகிறதோ அப்போதெல்லாம் நான் அவதரிப்பேன்; தீயவர்களை அழித்து நல்லவர்களைக் காப்பேன்! -இது கிருஷ்ணர் கீதையில் சொன்னது

வீட்டை நீங்க பாத்துக்கோங்க; நாட்டை நான் பாத்துக்கிறேன்! -இது கம்பேக் கொடுத்திருக்கும் இந்தியன், இன்றைய இளைய தலைமுறைக்கு சொல்லியிருப்பது

28 வருடங்கள் முன்… நாடு முழுக்க லஞ்சம்; ஊர் முழுக்க ஊழல். அந்த லஞ்சாதிபதிகளைத் தேடித்தேடி பதம் பார்த்த சேனாபதியின் கத்தி, ஒரு கட்டத்தில் அவருடைய மகனுக்கே எமனாக மாறியதெல்லாம் உலகறிந்த கதை.

அன்று, ‘இந்தியனுக்கு சாவே இல்லை’ என்று சொல்லிவிட்டு போனவர், நாட்டில் அன்றைவிட லஞ்சமும் ஊழலும் பெருகியிருக்கிற இன்றைய சூழ்நிலையில் மீண்டும் வருகிறார். தப்பு செய்தவர்கள் எங்கிருந்தாலும் எத்தனை பாதுகாப்பாக இருந்தாலும் அங்கு நுழைந்து அவர்களது உயிருக்கு சாமர்த்தியமாக விடுதலை தருகிறார்.

‘அயோக்கியனுங்களை நான் மட்டுமே அழிக்க முடியாது. நீங்களும் அதை செய்யணும். அதுக்காக, என்னைப் போல் உங்களை கொலை செய்யச் சொல்லலை… உங்க அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மாமா, அத்தைன்னு உங்க வீட்ல யாராச்சும் லஞ்சம், ஊழல் அது இதுன்னு தப்பு பண்ணா அவங்களை சட்டப்படி தண்டிக்க உங்களால என்ன செய்ய முடியுமோ அதை செய்யுங்க’ என்கிறார்.

சேனாபதி சொன்னபடி செய்ய, சமூக அக்கறையோடு யூ டியூப் நடத்துகிற இள ரத்தங்கள் முன் வருகிறார்கள். அவர்களால் சிலர் கைதாகிறார்கள். அந்த சம்பவங்கள் தருகிற அதிர்வு இந்தியா முழுக்க பரவ, லஞ்ச ஊழல் பேர்வழிகள் அவர்களின் வாரிசுகளாலேயே சட்டத்தின் பிடியில் சிக்கவைக்கப்படுகிறார்கள்.

அதெல்லாம் ஒருபக்கம் சுறுசுறுப்பாய் நடந்துகொண்டிருக்க நடக்க, இந்தியன் தாத்தா சேனாபதி தவறான வழியில் பல ஆயிரம் கோடி, பல லட்சம் கோடி என பணம் சேர்த்து வைத்திருக்கிறவர்களை தான் கற்ற வர்மக் கலையால் விதவிதமாக தண்டித்துக் கொல்கிறார். நாடு முழுக்க அவருக்கு மவுசு கூடுகிறது. ஆனால், அதெல்லாம் சில நாட்கள் மட்டுமே.

எந்த மக்கள் அவர் சொன்னதை கேட்டு செயல்பட்டார்களோ, அவர் சொன்னதை வரவேற்றார்களோ, அவர்களே அந்த சேனாபதியை ஒழிக்க வேண்டும் அழிக்க வேண்டும் என திரள்கிறார்கள்… அவர்களின் மன மாற்றத்துக்கு காரணம் என்ன? என்பதை இந்த பாகத்தில் சொல்லியிருக்கும் இயக்குநர் ஷங்கர், படத்தின் முடிவில் 3-ம் பாகத்துக்கான டிரெய்லரை காண்பித்து ஏகத்துக்கும் எதிர்பார்ப்பைத் தூண்டியிருக்கிறார்.

சமூகத்திலிருந்து ஒழிக்கப்பட வேண்டியவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை வர்மக் கலையால் தாக்கி ஓய்வின்றி பாடவைத்து, ஆடவைத்து, ஓட வைத்துக் கொல்வதை ஓரளவு ரசிக்க முடிகிறது. ஆறேழு கெட்டப்களில், வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் நுழையும்போது காட்டியிருக்கும் தோற்ற மாற்றம் அதிகம் கவர்கிறது. அதைத்தாண்டி இந்த பாகத்தில் பெரிதாய் நிறைவு தராத உலகநாயகன் அடுத்த பாகத்தில் ஏமாற்ற மாட்டார் என நம்புவதைத் தவிர வேறு வழியில்லை.

சேனாபதியை கைது செய்யத் துடிக்கும் சி பி ஐ அதிகாரியாக வருகிறார் பாபி சிம்ஹா, யூ டியூபர்களாக வருகிறார்கள் சித்தார்த், பிரியா பவானி சங்கர், ஜெகன், ரிஷிகாந்த். அவர்களின் சிநேகிதியாக ரகுல் பிரித்சிங். சமுத்திரகனி, டெல்லி கணேஷ், தம்பி ராமையா, ரேணுகா அவர் இவர் என ஏ………கப்பட்ட நடிகர் நடிகைகள் ஆக்கிரமித்திருக்கும் களத்தில், எஸ் ஜெ சூர்யா ஜி ஆர் டி, ஜோயாலுக்காஸ், கல்யாண் ஜுவல்லரியை கழுத்தில் அள்ளிப்போட்டுக் கொண்டு ஒருசில காட்சிகளில் எட்டிப்பார்த்து வழக்கம்போல் அலட்டலான வில்லத்தனம் காட்டிப் போகிறார். குரலை அப்படியே விட்டுவிட்டு தோற்றத்தில் இமான் அண்ணாச்சியை வேறொரு மனிதராக மாற்றியிருக்கிறார்கள்.

நெடுமுடி வேணு, விவேக், மனோபாலா, மாரிமுத்து என இன்று பரலோகத்திலிருக்கிற சிலரையும் படத்தில் பார்க்க முடிகிறது.

அனிருத்தின் பின்னணி இசை பரவாயில்லை ரகம். கதறவிட்டு செதறவிடும் பாடலில் எனர்ஜிக்கு குரைவில்லை. 3-ம் பாக டிரெய்லரில் வரும் ‘பாரா…’ பாடல் மனதில் நிற்கிறது.

‘கோல்டன்’ பேலஸ் தங்கத்தில் கழிவறை என காட்சிக்கு காட்சி பிரமாண்டத்தைக் கொண்டுவர, பார்த்துப் பார்த்து உழைத்திருக்கிறார் கலை இயக்குநர். ரவிவர்மனின் ஒளிப்பதிவின் தரம் படத்தின் பலம்.

படத்தின் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத். அவரை வேலை செய்யக்கூடாது என இயக்குநர் மிரட்டியிருப்பார் போலிருக்கிறது.

‘நாடு நல்லாயிருக்கணும்னா கெட்டவங்களை அடக்கணும்; அழிக்கணும்’ என கருத்து சொல்வதெல்லாம் நல்ல விஷயம்தான். படத்தில் பிரமாண்டத்துக்கும் குறைவில்லைதான்.

படத்தில் இந்தியன் தாத்தா செல்ஃபி வீடியோ போடுகிறார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார். எல்லாவிதத்திலும் இந்தக் காலத்துக்கு ஏற்ற மாதிரி அப்டேட் ஆகியிருக்கிறார். அந்த ‘அப்டேட்’ திரைக்கதையிலும் இருந்திருக்கலாம்!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here