இங்க நான்தான் கிங்கு சினிமா விமர்சனம்

தமிழகம் முழுக்க கோடை மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கும் சூழலில், தியேட்டர்களை சிரிப்பு மழையால் நிரப்ப வந்திருக்கும் படம். வடக்குப்பட்டி ராமசாமிக்குப் பிறகு, சந்தானம் வசூல் கிங்காக தொடர வாய்ப்பு தந்திருக்கும் ‘இங்க நான்தான் கிங்கு.’

நண்பனிடம் 25 லட்சம் கடன் வாங்கி, திருப்பிக் கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார் சந்தானம். ஒரு சூழ்நிலையில் அந்த நண்பனை சந்தானத்தின் மாமனாரும் மச்சானுமாக சேர்ந்து கொலை செய்துவிடுகிறார்கள். அந்த சடலத்தை அப்புறப்படுத்தவும், கொலைப் பழியிலிருந்து தப்பிக்கவும் சந்தானமும், அவரது மனைவியும், மாமனாரும் மச்சானும் சிலபல முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். கதை இப்படியாக சூடுபிடிக்க, கொலை செய்யப்பட்டத் சந்தானத்தின் நண்பனின் தோற்றத்திலிருந்த தீவிரவாதி என தெரியவர, அதன் பிறகு நடப்பதெல்லாம் கலாட்டாதான், களேபரம்தான், ரகளைதான்… அத்தனையும் நிஜமாகவே வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடிதான். இயக்கம் ஆனந்த் நாராயண்

சந்தானத்துக்கு கடன் தொல்லையிலிருந்து விடுபட, ஜமீன் குடும்பத்தில் பெண் பார்த்து, நுடுல்ஸ் தயாரிக்கும் நேரத்துக்குள் கல்யாணமும் முடிந்துவிட அந்த நிமிடத்திலிருந்து இடியாப்பச் சிக்கலுக்கு ஆளாகும் கதாபாத்திரம். பெண் வீட்டாரிடம் ஏமாறுவது, மாமனாரும் மச்சானும் சேர்ந்து செய்யும் ஏடாகூடங்ககளால் அவஸ்தைகளைச் சந்திப்பது, சடலத்தை அப்புறப்படுத்த எடுக்கும் முயற்சிகள் அத்தனையும் சொதப்பலில் முடிவது என காட்சிக்கு காட்சி ரசிக்க வைத்திருக்கிறார். மனைவியிடம் கோபத்தை தொடர்வது, பின் அன்பாய் நெருங்குவது என நீளும் காட்சிகளில் இயல்பான நடிப்பு டெலிவரியாகியிருக்கிறது. பாடல்களில் நடனம், படம் முடிகையில் ஆக்சன் இரண்டிலும் குறைவைக்கவில்லை.

இதேபோல் தனக்கு முக்கியத்துவம் தருகிற நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தால் நடிப்பில் பெரியாளாக வரக்கூடிய அத்தனை தகுதிகளும் இருக்கிறது பிரியா லயாவிடம். தன்னை ஏமாற்றிக் கல்யாணம் செய்து கொண்டதாக கருதி, தன்னிடம் இணக்கமில்லாமல் நடந்துகொள்கிற கணவனின் இறுக்கமான நடவடிக்கைகளை மென்சோக முகபாவம் காட்டி கடப்பது, காமெடியில் புகுந்து விளையாடும் சந்தர்ப்பம் கிடைத்தபின் அதை சரிவர பயன்படுத்தி கலகலப்பூட்டுவது என அசத்தியிருக்கிற அந்த ஹோம்லி லுக் அம்மணியின் ஆடலும் கவர்கிறது.

காமெடியிலிருந்து டிராக் மாறி குணச்சித்திர வேடங்களில் திறமை காட்டிக் கொண்டிருக்கும் தம்பி ராமையாவுக்கு ‘கம்பேக்’ சான்ஸ். ஜமீனாக தலைகாட்டி, தலைப்பாகை கட்டி அலப்பரை செய்வதாகட்டும், வீட்டோடு மாப்பிள்ளை போல், வீட்டோடு மாமனாராக அடைக்கலமாவதாகட்டும், வெகுளித்தனமாக செய்கிற காரியங்கள் விபரீதமாக முடிய, அதே வெகுளித்தனத்தால் மீண்டு வருவதாகட்டும் மனிதர் அதிரிபுதிரி ஆட்டம் போட்டிருக்கிறார். அவருடன் தொற்றிக் கொண்டிருக்கும் பாலசரவணனின் சேட்டைகளால் சிரிப்பு பற்றிக் கொள்கிறது.

விவேக் பிரசன்னாவுக்கு ஆள் மாறாட்ட கதாபாத்திரம். பிணமாக நடிக்க ஒத்துக்கொண்டு போஸ்ட்மார்ட்டம் வரை போய் மீண்டு வருவதில் அட்ராசிட்டி அன்லிமிடெட்.

‘செத்த’நேரமே வந்தாலும் வழக்கம் மாறாத மாறனின் பங்களிப்பு, ரிலாக்ஸுக்கான ஒத்துழைப்பு.

மனோபாலாவுக்கு சந்தானத்தை வில்லங்கத்தில் தள்ளி விடுகிற சிறிய வேலை. அதை சரியாக செய்திருக்கிறார். முனீஸ்காந்த், சேஷு என திரும்பிய திசையெல்லாம் காமெடியில் தேர்ந்தவர்கள்… கூல் சுரேஷை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாம்.

‘குலுக்கு குலுக்கு’, ‘மாயோனே’, ‘மாலு மாலு’ பாடல்களில் எனர்ஜியை எக்கச்சக்கமாக ஏற்றியிருக்கிற இமான், பின்னணி இசையில் கதைக்களத்தின் தேவை புரிந்து பூர்த்தி செய்திருக்கிறார். பாடல் காட்சிகள் கலர்ஃபுல்!

எழிச்சூர் அரவிந்தனின் வசனங்களில் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை பின்னிப் பிணைந்திருக்கும் சுவாரஸ்யம் ஏராளம்; தாராளம்! யூ டியூப் வீடியோக்களுக்கு வியூஸ் ஏறாமல் தவிப்பவர்களை ஒற்றை வாக்கியத்தில் வெச்சு செய்திருக்கிறார்.

சடலத்தை மறைக்கப் போராடும் காட்சிகளில் சில பஞ்சதந்திரத்தை நினைவுபடுத்துவதை தவிர்க்க முடியவில்லை.

குடும்பத்தோடு ரசிக்கலாம்; அக்கம் பக்கத்தினரை, உற்றார் உறவினரை பார்க்கச் சொல்லி பரிந்துரைக்கலாம் என்று சொல்லும்படி வந்திருக்கும் இந்த படத்தில் ‘அளவுக்கு மீறி கடன் வாங்காதீங்க’ என்ற அறிவுரையும் இருக்கிறது.

‘இங்க நான்தான் கிங்கு’ மொக்கைப் படங்களுக்கு சங்கு!

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here