உங்களின் கோரிக்கைகளை பிரதமர் முன் பாராளுமன்றத்தில் எடுத்துச் சொல்வேன்! –Seafarers நலச்சங்க விழாவில் தொல். திருமாவளவன் உறுதி
தேசிய கடல்சார் தினத்தையொட்டி, INDIAN SEAFARERS WELFARE ORGANIZATION அமைப்பு நடத்திய விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
Seafarers நலச்சங்கத்தின் சேர்மன், பாபு மயிலான் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்திய இந்த விழாவில் தொல். திருமாவளவனுக்கு ‘வாழும் அம்பேத்கர்’ என்ற பட்டம் சூட்டி, விருதும் நினைவுப் பரிசாக வெள்ளியால் செய்யப்பட்ட அம்பேத்கர் சிலையொன்றும் வழங்கப்பட்டது.
விழாவில் பாபு மயிலான், தொல். திருமாவளவனின் மக்கள் நலன் சார்ந்த, தன் கட்சியினர் நலன் சார்ந்த விஷயங்களில் எந்தளவுக்கு அக்கறை காட்டுவார் என்பதை எடுத்துச் சொல்லி அவரது கொள்கையுறுதி, போராடும் குணம் உள்ளட்ட சிறப்புகளை விரிவாக எடுத்துரைத்தார்.
அதை தொடர்ந்து, விழாவில் பேசிய தொல். திருமாவளவன், ”பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் Seafarers நலச்சங்கத்தினரின் கோரிக்கைகளை மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்று உரிய தீர்வு காண முயற்சி எடுத்துக் கொள்வேன்” என்று உறுதியளித்தார்.
தொல். திருமாவளவன் தனது பேச்சில், பாராளுமன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த விஷயங்களைப் பேசுவது, அதுவும் ஒன்றிரண்டு உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் பிரதிநிதி எடுத்துச் சொல்வது எத்தனை கடினமான பணி என்பதை விரிவாக எடுத்துச் சொன்னார்.
தங்களது பணியில் சிறப்பாக செயல்பட்டுவரும் Seafarers நலச்சங்கத்தினர் பலருக்கும் விருதுகள், ஊக்குவிப்புச் சான்றிதழ்கள், நினைவுப் பரிசுகள் தொல். திருமாவளவன் கையால் வழங்கப்பட்டது.
விழாவின் நிறைவில், விழாவுக்கு வந்திருந்தவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது!