ஜெய் ஆகாஷ் தயாரித்து, ஹீரோவாக நடித்து, ஜெய் சதீசன் நாகேஸ்வரன் என்ற பெயரில் இயக்கிய ‘ஜெய் விஜயம்’ திரைப்படம் ‘ஏ கியூப் மூவிஸ் ஆப்’பிலும், திரையரங்குகளிலும் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. அதையடுத்து படத்தின் வெற்றி விழா சென்னையில் நடந்தது.
நிகழ்வில் ஜெய் ஆகாஷ், இப்படத்தை முதலில் ஏ கியூப் மூவிஸ் செயலியில் வெளியிட்டேன். எனக்கு உலகம் முழுவதும் 3 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள். சினிமாவில் நடித்தபோது எனக்கு கிடைத்த ரசிகர்களும் ஜீ டிவியில் நீ தானே என் பொன் வசந்தம் சீரியலில் நடித்தபோது ஆண்கள், பெண்கள் என லட்சக்கணக்கில் ரசிகர்கள் கிடைத்தனர். அனைவரும் என்னுடைய ரசிகர் மன்றத்தின் உறுப்பினர்களாக உள்ளனர்.
நான் ஏ கியூப் செயலியில் படம் வெளியிட்டால் அந்த படத்தை கட்டணம் செலுத்தி டவுன் லோடு செய்து உடனே பார்த்து பாசிடிவ் கமெண்ட் பகிர்வார்கள். அப்படித்தான் ஜெய் விஜயம் படத்துக்கு பாராட்டு குவிந்தது. அதை பார்த்து விட்டுத்தான். இப்படத்தை தியேட்டரில் வெளியிடுங்கள் என்று பலர் கூறினார்கள். சிறு முதலீட்டு சங்கம் எனக்கு தியேட்டரில் படத்தை வெளியிட உதவியது. சரியான தியேட்டர்கள் கிடைக்கவில்லை. தியேட்டரில் எனக்கு லாபம் கிடைக்கவில்லை. ஆனால் என்னுடைய ஏ கியூப் செயலியில் படத்தை ரிலீஸ் செய்ததில் பட்ஜெட்டை விட இரு மடங்கு லாபம் கிடைத்துவிட்டது.
ஜெய் விஜயம் பட வெற்றியால் தற்போது நான்குவெளிப் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. வெவ்வேறு இயக்குநர்கள் இயக்குகிறார்கள். ஜெய் விஜயம் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த அனைத்து ஊடகத்தினருக்கும் நன்றி.
முன்பு அமைச்சர் ரிட்டர்ன் என்ற படத்தில் நடித்தேன். மாமரம் படத்திலும் நடித்திருக்கிறேன் . இந்த இரண்டு படங்களுமே பெரிய பட்ஜெட் படம். அமைச்சர் ரிட்டர்ன் படத்தை நானே இயக்கி இருக்கிறேன். கமர்ஷியல் படமாக நன்றாக வந்திருக்கிறது.
இனி நான் படங்கள் இயக்கப் போவதில்லை. முழுக்க நடிப்பில் கவனம் செலுத்த உள்ளேன்.
தியேட்டரில் சிறிய பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்ய மறுக்கிறார்கள். இப்போது தொழில் நுட்ப வளர்ச்சி அதிகரித்து விட்டது. சினிமாவை தியேட்டரில்தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. படத்தை மக்களிடம்.கொண்டு போய் சேர்த்தால் போதும். படம் நன்றாக இருந்தால் அவர்கள் செயலியில் டவுன்லோட் செய்து பார்க்க தவறுவதில்லை. இனி சினிமா தியேட்டர்களில் பொங்கல், தீபாவளிக்கு மட்டுமே பெரிய படங்கள் ரிலீஸ் ஆக வேண்டிய நிலை வரும். அது நன்றாக இருந்தால் மக்கள் பார்ப்பார்கள் இல்லாவிட்டால் பார்க்க மாட்டார்கள்” என்றார்.
நிகழ்வில் மாவட்ட முன்னாள் அமர்வு நீதிபதி மொஹமத் ஜியாவு தீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் அன்புச் செல்வன், கில்டு சங்க தலைவர் ஜாகுவார் தங்கம், ஐ ஜே கே கட்சி துணைத் தலைவர் ஆனந்த முருகன், நடிகர்கள் பிர்லா போஸ், காதல். சுகுமார், முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஜெய் ஆகாஷின் முயற்சி, அதற்கு கிடைத்த வெற்றி பற்றி பேசி வாழ்த்து தெரிவித்தனர்.