சாய் தன்ஷிகா முதன்மைப் பாத்திரத்திலும், ருத்வீர் வதன், மைம் கோபி, ரித்விகா, இந்திரஜா ஆகியோர் முக்கிய பாத்திரங்களிலும் நடித்துள்ள படம் ‘தி ப்ரூஃப்.’ நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள இந்த படம் மாறுபட்ட களத்தில் பெண்கள் பாதுகாப்பை மையப்படுத்தி சமூக அக்கறையுடன், கமர்ஷியல் படைப்பாக உருவாகி, விரைவில் திரைக்கு வரவுள்ளது.
முன்னதாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இயக்குநர் மிஷ்கின், தயாரிப்பாளர் கே ராஜன், இயக்குநர் ஆர் வி உதயகுமார், யூகி சேது பாடலாசிரியர் சினேகன், ரோபோ சங்கர், நடிகர் சந்தோஷ் பிரதாப் உட்பட பல திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
நிகழ்வில் இயக்குநர் ராதிகா பேசியபோது, ”என்னை இன்று வரை தோழியாக மதித்து, எனக்கு வாய்ப்பளித்த மிஷ்கின் சாருக்கு என் நன்றிகள். நான் இங்கு நிற்க காரணம் அவர் தான். எனக்கே என் திறமையைச் சுட்டிக்காட்டியவர் அவர் தான். அவருக்கு நன்றி. ராஜன் அப்பா என் அப்பாவின் தோழர் இன்று வரை என்னை மகளாகத்தான் பார்த்துக் கொள்கிறார். இப்படத்திற்காக என்னுடன் துணை நின்ற ஜேசன் மற்றும் எடிட்டர் கமலக்கண்ணனுக்கு நன்றிகள். என் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. சாய் தன்ஷிகா ஆக்டிங் பத்தி எல்லோருக்கும் தெரியும் ஆனால் இந்தப்படத்தில் அவர் மனசாட்சிக்கு எவ்வளவு பயப்படுகிறார் அடுத்தவருக்காக எத்தனை இறங்கி வருவார் எனப் பார்த்தேன். மிகச்சிறந்த மனித நேயம் கொண்டவர். படத்தில் அடிபட்டு ரத்தம் வந்த போது கூட பதறாமல் இருந்தார், நாங்கள் தான் பதறினோம். அவரை வைத்து இன்னும் 100 படம் என்றாலும் செய்வேன். என் மகன் இசையமைப்பாளர் அவன் பிள்ளையாகக் கிடைத்தது எனக்குத் தான் பெருமை. எங்களை வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி” என்றார்.
நாயகன் ருத்விக் பேசியபோது, ”சின்ன வயதிலிருந்து நடிகனாக வேண்டும் என்பது தான் ஆசை. தியேட்டருக்கு வரும் மக்கள் 2 மணி நேரம் எல்லாத்தையும் மறந்து விடுவார்கள் அது தான் சினிமா மேஜிக். கிரியேட்டருக்கான மரியாதை அது தான். ராதிகா மேடம் இது தான் கதை, இது தான் பாத்திரம், நீ தியேட்டர் ஆர்டிஸ்ட் தானே, உனக்கு வருவதைச் செய் என்று ஊக்கம் தந்தார். மைம் கோபி சார், தன்ஷிகா மேடம் நடிப்பைப் பிரமித்துப் பார்த்தேன். அவர்களிடம் இருந்து நிறையக் கற்றுக்கொண்டேன். ராதிகா மேடம் என்னை ஒரு மகன் போலவே பார்த்துக் கொண்டார்கள். அவர் தந்த ஊக்கம் தான் எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தைத் தந்தது. இப்படம் மிக நன்றாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி” என்றார்.
இயக்குநர் மிஷ்கின் பேசியபோது, ”ராதிகாவை நான் வாடி போடி என்றுதான் கூப்பிடுவேன். அவள் எனக்கு அந்தளவு நெருங்கிய தோழி. நானும் அவளும் சினிமாவில் அஸிஸ்டெண்டாக இருந்த காலத்தில் இருந்து தெரியும். நான் படம் செய்ய ஆரம்பித்த போது, அவளைத்தான் முதலில் கூப்பிட்டேன் ஆனால் வர மாட்டேன் என்றாள், முதல் மூணு படத்திற்கும் கூப்பிட்டேன் வரவில்லை ஆனால் அவளே ஒரு நாள் கூப்பிட்டு நான் ரெடி சார் எனச் சொன்னாள். அவளுக்கு நம்பிக்கை வந்த பிறகு என்னிடம் வந்து மாஸ்டராக பணியாற்றினாள். சினிமாவில் பல காலம் ஒரு சிலர் மட்டுமே நண்பர்களாக இருப்பார்கள், நான் 300 பேருக்கு மேல் அறிமுகப்படுத்தியுள்ளேன். ஆனால் என் பிறந்த நாளுக்கு முதல் ஆளாக ராதிகா தான் போன் செய்வாள். அத்தனை சிறந்த நட்பு, அவள் படமெடுத்திருக்கிறேன் என்று சொன்ன போது நம்பவில்லை, படத்தில் ஜெயிச்சிட்டியா என கேட்கும்போது, முயற்சிக்கொண்டிருப்பேன் என வசனம் வருகிறது. அது தான் முக்கியம் முயற்சித்துக்கொண்டே இருக்க வேண்டும் அது தான் சினிமா. அதே மாதிரி நீயும் சினிமாவில் இரு. நான் சினிமா பற்றி கருத்து சொல்ல மாட்டேன். படமெடுத்து விட்டாய் இனி பத்திரிக்கையாளர்கள் பார்த்துக்கொள்வார்கள்.
ராதிகா 30 மார்க் எடுத்திருந்தால் 50 மார்க் கொடுங்கள் அதை மட்டும் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். தீபக் இசையமைப்பாளர் சின்ன பையன், பாடல் சூப்பர் என்று சொல்ல மாட்டேன் நன்றாக வந்துள்ளது வாழ்த்துகள். சாய் தன்ஷிகா மிகச்சிறந்த நடிகை அவரை என் படத்தில் நடிக்க வைக்க ஆசைப்பட்டேன், வருங்காலத்தில் அவருக்காகக் கதை எழுதுவேன். சினிமா என்பது என்னைப்பொறுத்தவரை கடவுள் மாதிரி அதை நாம் வணங்குவோம்” என்றார்.