பள்ளிப்பருவத்தில் தோழிகளுடன் கபடி விளையாடிவிட்டு செல்லும்போது வழியில் ஒரு கடையில் ஜிமிக்கியொன்றை பார்க்கிறாள் சிறுமி துளசி. அந்த ஜிமிக்கி அவளுக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
வாங்கிய கடனுக்காக வயதான ஒருவனுக்கு துளசியை திருமணம் செய்து வைக்கிறார் குடிகார தகப்பன். ஒரு குழந்தை பிறந்தவுடன் அவனும் துளசியை விட்டுவிட்டு சென்று விட அவள் எழுதிய அரசுத்தேர்வில் வெளிமாநிலத்தில் அவளுக்கு வேலைகிடைக்கிறது.
குடும்பத்தினர் தயவின்றி குழந்தையுடன் தவிக்கும் துளசி மகனை இட்லி விற்கும் பெண் ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு வேலைக்கு செல்கிறாள்.
மொழி தெரியாத புதிய இடத்தில் அறிமுகமாகும் மானஸா என்கிற அலுவலக பெண் உதவுகிறார். மானஸாவின் மூலம் அறிமுகமாகும் கௌதமன் என்கிற பேராசிரியர் இந்தி கற்றுத்தருவதாக வீட்டுக்கு வந்து துளசியிடம் அவளுடைய மகனுக்கு தகப்பனாக இருக்கிறேன் என்று பழகி அவளின் பிராவிடன்ட் பண்ட்டில் ஒரு பகுதி வரை சுருட்டிக்கொண்டு ஓடிவிட, அவளது பணி ஓய்வில் கிடைக்கும் பணத்தை வீடுவாங்க மொத்தமாக கேட்கிறான் வெளிநாட்டிலிருந்து படித்துவிட்டு திரும்பும் மகன்.
“எல்லா பணத்தையும் கொடுத்துட்டு நான் என்னடா செய்யுறது?” என்று கேட்கும் தாயிடம், “ஆம்பள சொகத்துக்காக உன்னோட சேமிப்பெல்லாம் கொடுத்தியே” என்று கேட்கிறான் மகன்.
பணி ஓய்வில் கிடைத்த பணத்தில் தன் பள்ளிப் பருவத்தில் விருப்பப்பட்டு வாங்கமுடியாமல் போன வடிவத்தில் ஒரு ஜிமிக்கியை வாங்கிகொண்டு வீடு திரும்புகிறாள் துளசி.
வசந்தம் நூலகம் வழங்கிய ஜிமிக்கி நாடகத்தை இன்று மாலை தி.நகர் தக்கர்பாபா பள்ளியில் நண்பர்களுடன் சென்று பார்த்தேன்.
அம்மையார் சுதா அவர்களின் கதையை தோழர்கள் ஜானகி சாரதி இணையர்கள் சிறப்பாக இயக்கியிருந்தனர்.
முகமூடி அரங்கம் குழுவினர் சிறப்பாக நடித்திருந்தனர்.
கூத்துப்பட்டறையிலிருந்து வந்திருந்த பெரியவர் பாஸ்கர் அவர்களின் ஔி அமைப்பு சிறப்பாக இருந்தது.அத்தி குழுவின் உறுப்பினரான தீபிகா துளசியாக, மிகச்சிறப்பாக நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சிறந்ததொரு சமூக நாடகம் பார்த்த திருப்தியுடன் வீடு திரும்பினோம்.