அம்மா பிள்ளைகள் பாசப்பிணைப்பை மையமாக வைத்து, அண்ணன் தம்பி சென்டிமென்டையும் சேர்த்துக் கொண்ட ஜெ பேபி.
பாசமான அம்மா சென்னையிலிருந்து காணாமல் போய்விட, நேசமான பிள்ளைகள் அவரை கொல்கத்தாவில் தேடிக் கண்டுபிடிக்கிற கதை. அம்மா காணாமல் போனதன் பின்னணி கலங்க வைக்க, கண்டுபிடிக்க கிளம்பியவர்கள் சந்திக்கிற சிக்கல்கள் மனம் கனக்கச் செய்கிறது; கூடவே அந்த சிக்கல்களில் சுவாரஸ்யங்களும் தொற்றிக் கொண்டிருக்கிறது…
ஊர்வசியின் நடிப்பை ஊர் போற்றாமல் விடாது. ஐந்து பிள்ளைகளுக்குத் தாய், பேரன் பேத்தி எடுத்தவர். மனநல பாதிப்பால் ஏடாகூடமாக நடந்துகொள்ள பெற்ற பிள்ளையின் கையாலேயே அடிபடுபவர், அடுத்த நிமிடமே அந்த பிள்ளைக்கு சோறூட்டுகிறார். மனநல மருத்துவமனையின் கெடுபிடிகளில் மனம் உடைந்து, அம்பத்தூருக்கு போக ரயிலேறி ஹவுராவில் இறங்குகிறார். அங்கு காப்பகத்தில் சேர்க்கப்பட்டு தீயணைப்புத் துறை வந்து மீட்கிற அளவுக்கு ரகளையில் ஈடுபடுகிறார். அத்தனையிலும் உயிரோட்டமிருக்கிறது. சீரியஸான காட்சிகளுக்கிடையே சிரிக்கவும் வைக்கிறார் அந்த பேபியம்மா.
கதாபாத்திரத்துக்காக உடல் எடை அதிகரித்திருக்கும் தினேஷ், அதிக மதிப்பெண் போடுகிற அளவுக்கு நடிப்பிலும் தேர்ச்சியடைந்திருக்கிறார். அம்மா தருகிற அவஸ்தைகளை பொறுத்துக் கொள்வதாகட்டும், தன்னை எதிரியாக நினைத்து முறுக்கிக் கொண்டு திரியும் அண்ணனைச் சமாளிப்பதில் காட்டும் நிதானமாகட்டும், தனக்குப் பிறந்த குழந்தையை பார்க்கப் போவதா இல்லை அம்மாவை தேடிப் போவதா என தவிப்பதாகட்டும் தனக்கான காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார்.
நடித்தது சில படங்கள்தான் என்றாலும் கவுண்டர் டயலாக்கில் தனக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்ட மாறன், இந்த படத்தில் அப்படியே வேறொரு பரிமாணத்துக்கு தாவியிருக்கிறார். அவரது பாத்திரம் ஈகோ பேர்வழியாக, குடிகாரராக வடிவமைக்கப் பட்டிருக்க அதை மிகமிக இயல்பான நடிப்பால் தாங்கிப் பிடித்திருக்கிறார். அவரது பேச்சினிடையே வழக்கமான கவுன்டர் வசனங்களும் வந்து விழுந்து வயிறு குலுங்க வைக்கிறது.
ஊர்வசிக்கு மகள்களாக, மருமகள்களாக வருகிற மெலடி டார்கஸ், தாட்சாயிணி, இஸ்மத் பானு, சபீதா ராய், மாயாஸ்ரீ உள்ளிட்டோரின் பங்களிப்பு நிறைவு.
கொல்கத்தா காவல்துறை அதிகாரியாக, கர்ப்பிணியாக வருகிறவரின் கனிவுப் பார்வை கவர்கிறது.
காணாமல் போன பேபியம்மாவை கண்டுபிடித்து மகன்களிடம் ஒப்படைக்கும் பொறுப்பை, எந்தவித சுயநலமும் இல்லாமல் செய்கிற மூர்த்தி கதாபாத்திரம் மனதில் தங்கும்.
சந்தோஷ் நாராயணனின் சிஷ்யர் டோனி பிரிட்டோவின் பின்னணி இசை காட்சிகளுக்கு இன்னும் கொஞ்சம் நெருக்கமாய் இருந்திருக்கலாம்.
ஜெயந்த் சேது மாதவனின் கேமரா கதைக்களத்துக்கேற்ற மனிதர்கள் வாழ்கிற சென்னை அயனாவரத்தின் சுற்று வட்டத்தை, ஜன நெரிசல் மிக்க கொல்கத்தாவின் நீள அகலத்தை நேர்த்தியாக பதிவு செய்துள்ளது.
எளிய குடும்பத்து மனிதர்களின் வாழ்வியலை, அவர்கள் அனுபவிக்கும் சுக துக்கங்களை, அவர்களுக்குள் வருகிற சண்டை சச்சரவுகளை அதனதன் தன்மை மாறாமல், எதார்த்தம் மீறாமல் பதிவு செய்திருக்கிற சுரேஷ் மாரியை, தமிழ் சினிமா தனது தரமான இயக்குநர்கள் வரிசையில் சேர்த்துக் கொள்ளும்; கொண்டாடும்.
ஜெ பேபி – ஜெயிக்க வேண்டிய படைப்பு!
-சு.கணேஷ்குமார், startcutactionn@gmail.com