சஸ்பென்ஸ் திரில்லர், கிரைம் திரில்லர், மர்டர் மிஸ்ட்ரி… எந்த ஜானரில் வேண்டுமானாலும் இந்த படத்தை சேர்க்கலாம். அப்படியான கதைக்களத்தில் தயாராகி, ‘ஏ கியூப்’ செயலியில் வெளியாகியுள்ள ‘ஜெய் விஜயம்.’
இளைஞன் ஜெய் சரவணன் தன் அப்பா, மனைவி, தங்கை மூவரும் தன்னை நடத்தும் விதத்தில், பேசுவதில், பழகுவதில் விநோதமான அணுகுமுறையை, செயற்கையாக பாசம் காட்டுவதை உணர்கிறான்.
அவர்களின் நடவடிக்கைகளை வைத்து தன்னுடன் இருப்பது தன் மனைவி இல்லையோ, தன்னுடன் இருப்பது தன் அப்பா இல்லையோ என்ற குழப்பமும், சந்தேகமும் உருவாகிறது.
அது குறித்து கேட்டால், அவனது மனைவி நான் உங்கள் மனைவிதான்; உங்களுக்கு நினைவாற்றலில் குறைபாடு ஏற்பட்டுள்ளது. அதற்கு தீர்வுகாண இதை போட்டுக் கொள்ளுங்கள்’ என்பதுபோல் ஒரு விளக்கம் சொல்லி அவ்வப்போது ஏதோவோரு மாத்திரையைக் கொடுத்து விழங்க வைக்கிறாள். படுக்கையில் அவன் அவளை ஆசையாக நெருங்கினால் விலகிப் போகிறாள்.
அவர்களுடன் சில நேரங்களில் வாக்குவாதம், சண்டை சச்சரவு உருவாகிறது. அந்த சமயங்களில் அவனைத் தாக்கி, மயக்க மருந்தை வலுக்கட்டாயமாக நுகரச் செய்து படுக்க வைக்கிறார்கள். கண் விழித்துப் பார்த்தால் மூவரும் அப்படியொரு சம்பவமே நடக்காதது போல் அவனிடம் பழகுகிறார்கள்.
தான் அவர்களால் தாக்கப்பட்டதை அவர்களிடம் சொன்னால், ‘கனவு கண்டிருப்பாய்’ என்று சொல்லி அவனை குழப்புகிறார்கள். மாத்திரை விழுங்கச் சொல்லி வலியுறுத்துகிறார்கள். கிட்டத்தட்ட மனநோயாளியைப் போல் நடத்துகிறார்கள்.
உடனிருப்பவர்கள் மட்டுமல்லாமல் இன்னும் சிலரும் அவர்களது செயல்களால் அவன் மனதுக்குள் ‘தான் பைத்தியமோ?’ என்கிற அளவுக்கு யோசிக்க வைக்கிறார்கள்.
நாட்கள் அப்படியே கடந்துபோக, ஒரு கட்டத்தில் தன்னுடன் இருப்பவர்கள் போலியான சொந்தங்கள் என்பதை உறுதி செய்துகொண்டு போலீஸில் புகார் கொடுக்க போகிறான்…
உண்மையில் அவன் யார்? அவனுடன் இருந்தவர்கள் யார்? அவர்களது எதிர்பார்ப்பு என்ன? அவனுடைய நினைவாற்றல் பிரச்சனைக்கு என்ன காரணம்? இப்படி ஏராளமான கேள்விகளை முன்வைத்து படத்தின் முன்பாதி நிறைவுக்கு வர பின்பாதி அத்தனை கேள்விகளுக்கும் விடை தருகிறது; மர்மங்களை விடுவிக்கிறது.
தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது? தனக்கு உண்மையிலேயே ஞாபக சக்தியில் ஏதும் பிரச்சனையா? தன்னுடன் இருப்பவர்கள் தன்னை ஏமாற்ற நாடகமாடுகிறார்களா? இதுவரை நடந்தது என்ன? இனி நடக்கப்போவது என்ன? இப்படி மனம் முழுக்க குழப்பங்கள் சூழ்ந்து பயமும் பதற்றமுமாக நாட்களைக் கடத்தும் கனமான கதாபாத்திரத்தில் கதையின் நாயகனான ஜெய் ஆகாஷ்.
மனதளவில் குழம்பித் தவிப்பதை அதற்கேற்ற சரியான முகபாவங்களில் காண்பிக்கும் அவர், மனைவி என்று சொல்லிக் கொண்டு தன்னுடன் இருப்பவள் தாடி குத்துது என்று சொன்னதற்கான கிளீன் ஷேவ் செய்துகொண்டு இப்போ எப்படியிருக்கு என்பதுபோல் கேட்பதில் வெளிப்படும் குழந்தைத்தனம் கவர்கிறது.
சொந்த தம்பி சூழ்ச்சி செய்து சொத்தை பறித்துக் கொள்ள அவனிடம் சண்டையிட்டு தோற்பது, மனைவியின் மருத்துவ சிகிச்சைக்கு பணமின்றி தவித்து அதற்காக கொலை செய்ய ஒத்துக் கொள்வது, விபத்தில் சிக்கிய மனைவியைக் கண்டு கலங்குவது, சடலமாய் கிடக்கும் தங்கையைக் கண்டும் அடையாளம் தெரியாமல் கடந்து போவது, தன்னுடன் இருப்பவர்களின் தில்லுமுல்லுகளை கூர்மையாய் கவனித்து கண்டுபிடிப்பது என தனக்கான காட்சிகளை கச்சிதமாக செய்திருக்கிறார்.
நகரத்துப் பெண்ணின் தோற்றம்; கிராமத்துப் பெண்ணின் வெகுளித்தனம் என கண்டதும் கவரும் விதத்திலிருக்கிறார் அக்ஷயா கண்டமுதன். மனைவியாக நடிக்க ஒத்துக் கொண்டு படுக்கையறையில் ஜெய் ஆகாஷின் சீண்டல்களை சிணுங்கலோடு எதிர்கொள்வதாகட்டும், அக்கறையோடு சிகிச்சையளிப்பதாகட்டும் நேர்த்தியான நடிப்பால் ஈர்க்கிறார்.
நாயகனின் தங்கையாக அட்சயா, காவல்துறை உயரதிகாரியாக ராஜேந்திரன், ஹீரோவின் நிஜ மனைவியாக கீகி வாலஸ் என மற்ற கதாபாத்திரங்களை ஏற்றிருப்பவர்களின் நடிப்பு பரவாயில்லை’ ரகமாக இருந்தாலும் கதையோட்டத்துக்கு போதுமானதாக இருக்கிறது.
பெரும்பாலான காட்சிகளில் புகை வடிவில் ஆத்மாவொன்று சுற்றிக் கொண்டிருப்பது விழிகளை சிரமப்படுத்தாதபடி ஒளிப்பதிவில் திறமை காட்டியிருக்கிறார் பால் பாண்டி.
சதீஷ்குமார் இதமான இசை மண்மீது வந்த பெண் தேவதை’ பாடலை ரசிக்க வைக்கிறது. அடுத்து என்ன அடுத்து என்ன என்று சஸ்பென்ஸோடு நகரும் இடைவேளை வரையிலான காட்சிகளுக்கு மயிலிறகால் ஒத்தடம் கொடுப்பதுபோல் பின்னணி இசை தந்து பின்னர் பரபரப்பாக வேகமெடுக்கும் காட்சிகளுக்கு சுறுப்பான இசையால் வேகம் கூட்டியிருப்பதை தனியாக பாராட்டலாம்.
சூழ்நிலை தரும் நெருக்கடியால் கொலைக் குற்றம் செய்யத் துணிந்த ஒருவன் சந்திக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி பல கோணங்களில் சுற்றிச் சுழலும் கதைக்கு,
சிலபல திருப்பங்களுடன் திரைக்கதையமைத்து இயக்கியிருக்கிற ஜெயசதீஷன் நாகேஸ்வரன் அடுத்தடுத்து அட்டகாசமான சஸ்பென்ஸ் திரில்லர் வகை படங்களை இயக்குவார் என்ற நம்பிக்கையை தருகிறார்.