‘ஜெயிலர்’ சுமாருக்கு மேல்.
முதற்பாதியில் நெல்சன் பாணிக் கறுப்பு நகைச்சுவைக் காட்சிகளின் பின்னணியில் ரஜினியின் ஹீரோயிஸத்தைக் காண்பது refreshing ஆகவே இருக்கிறது (குறிப்பாக, ரஜினி – யோகி பாபு உரையாடல்கள், விடிவி கணேஷ் எபிஸோட்). இரண்டாம் பாதியின் கறுப்பு நகைச்சுவை எடுபடவில்லை, அதில் ரஜினி ஹீரோயிஸங்கள் தெலுங்கு மசாலா பாணிக்கு மாறி விடுகின்றன, அதில் வரும் ஃப்ளாஷ்பேக் ஒரு பில்டப் காட்சி மட்டுமே – கதையோடு நேரடித் தொடர்புடையதல்ல.
யோசித்தால் இப்படத்தில் இரு கதைகள் இருக்கின்றன.
ஒன்று ஜெயிலரின் மகன் காணாமல் போவது, இன்னொன்று கிரீடக் கடத்தல். இரண்டாவது தனியே சிறப்பான நெல்சன் பாணி கறுப்பு நகைச்சுவைப் படமாக எடுக்கும் potential கொண்டது. அதை இதோடு கோத்து இப்படத்துக்கும் நியாயம் செய்யாமல் அக்கதைக்கும் நியாயம் செய்யாமல் அந்தரத்தில் விட்டிருக்கிறார்கள்.
திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை என்பதுதான் பெரிய let down. அவ்வகையில் விக்ரம் போலவே ஏமாற்றம் தருகிறது. குறிப்பாக பாதாள உலகத்தில் வசிக்கும், குரூரத் தண்டனைக்கு செட்டப் செய்து வைத்திருக்கும் வில்லன் என அபத்தமான காட்சிகள். ரஜினிக்கு ஏன் இவ்வளவு உதவிகள் என்ற பில்டப் காட்சிகளிலும் லாஜிக்கே இல்லை – கேஎஸ் ரவிக்குமாரே தோற்றார்.
சீரியஸ் காட்சிகளில் கறுப்பு நகைச்சுவை வைப்பதன் ஆபத்து சற்று பிசகினாலும் அவை அபத்தத் துணுக்குகளாக மாறி படத்தின் நம்பகத்தன்மை மற்றும் சுவாரஸ்யம் நீர்த்துப் போய் விடும். டாக்டரில் மிகப் பிரமாதமாக எடுபட்ட கறுப்பு நகைச்சுவை இப்படத்தின் இரண்டாம் பாதியில் இந்த ஆபத்தைச் சந்திக்கிறது. (உதாரணமாக விநாயகனின் பிரதிநிதிகள் ரஜினியுடன் சுற்றும் காட்சிகள்.)
விக்ரம் படத்தின் வெற்றி ஓர் அனாவசிய அழுத்தத்தைத் தமிழ் சினிமாவில் தோற்றுவித்து வைத்திருக்கிறது – multistar. இந்தியில் கால் நூற்றாண்டாகவே இந்தச் சூத்திரம் இருக்கிறது என்றாலும் இங்கே ஒரு திணிப்பு போல் இதைச் செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள் – அதுவும் ஆனானப்பட்ட ரஜினி படத்திலேயே. இதில் ஷிவ் ராஜ் குமாரும், மோகன் லாலும், ஷாக்கி ஷெராஃபும், தமன்னாவும் கூட அப்படித்தான் (சுனில் மட்டும் விதிவிலக்கு, கதைக்கு அவசியப்படுகிறார்).
கபாலி, காலாவிலேயே தன் வயதுக்கு (ஓரளவு) ஏற்ற பாத்திரங்களை ரஜினி செய்ய ஆரம்பித்தாலும் இப்படம் ஒரு வகையில் முக்கியமானது – முழுக்க ஹீரோயிஸம் கொண்ட மசாலாப் படத்திலும் பேரன் எடுத்த பாத்திரமாக வர முடியும் எனக் காட்டி இருக்கிறார் (இடையில் பேட்ட, 2.0, தர்பார், அண்ணாத்த ஆகியன அவரது வயதை மழுப்ப முயன்றிருந்தன). இன்னொரு முக்கிய விஷயம் ஒரு துப்பாக்கி சுடும் காட்சி தவிர இதில் ரஜினி சண்டைப் போடுவதே இல்லை. (அவரது விரலசைவில் மற்றவர்கள் அதைப் பார்த்துக் கொள்கிறார்கள்.) ஆனால் நமக்கு அந்த உணர்வே எழாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அது brilliant!
படம் டாக்டர், பீஸ்ட், கோலமாவு கோகிலா ஆகிய முந்தைய நெல்சன் படங்களையும், பேட்ட, தர்பார், லிங்கா உள்ளிட்ட முந்தைய ரஜினி படங்களையும் நினைவூட்டுகிறது. இவை போக கமலின் விக்ரம் படத்தையும்.
ரஜினியை ரசிக்க முடிகிறது. விநாயகன் பிரமாதம். சுனிலும் நன்று. ரம்யா கிருஷ்ணனுக்குப் பெரிய வேலை இல்லை. வசந்த் ரவி, யோகி பாபு, சரவணன், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், மாரிமுத்து எல்லாம் பரவாயில்லை. அந்தச் சிறுவன் ரித்விக்கின் நடிப்பு எனக்குப் பொதுவாக உவப்பில்லை என்பதால் இப்படத்திலும் ரசிக்க இயலவில்லை. கிஷோர் கூட ஒரு காட்சியில் வருகிறார். இசை, ஒளிப்பதிவு நன்று.
இதை பேட்ட படத்துக்கு ஒரு படி கீழும் பீஸ்ட் படத்துக்கு இணையாகவும் வைக்கலாம்.