நீங்கள் ரஜினியின் தீவிர ரசிகரா? அவர் திரையில் வந்தால் போதும் என்று நினைப்பவரா? அவர் என்ன செய்தாலும் பிடிக்கும் என்பவரா?
ஆமாம் என்பது பதிலென்றால்.. இந்தப் படம் உங்களை நிச்சயம் ஏமாற்றாது. விசிலடித்து கைதட்டி ரசிப்பீர்கள்.
சமீப காலமாக சிவாஜி, எந்திரனுக்குப் பிறகு சில படங்கள் ரஜினி ரசிகர்களுக்கே திருப்தியளிக்கவில்லை என்பது நிலவரம்.
மற்றபடி.. ஒரு சாதாரண சினிமா ரசிகராகப் பார்த்தால்..
ரஜினி என்கிற யானைக்கு இன்னும் தீனி போட்டிருக்கலாம் என்றேத் தோன்றுகிறது. சோளப் பொறியை மூட்டை மூட்டையாக யானை முன்பு வைத்திருக்கிறார்கள்.
ரஜினி என்கிற சூப்பர் ஸ்டார் வைத்துக்கொண்டே அதகளம் செய்திருக்கலாம். மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் என்று முரட்டு சிங்கங்களை சர்க்கசில் ஒரு குட்டி ஐட்டத்திற்குப் பயன்படுத்தியிருப்பது அநியாயம். நட்சத்திர கலை நிகழ்ச்சி போல அவர்கள் தோன்றி மறைந்துவிடுகிறார்கள்.
ரஜினியும், பேரன் ரித்விக்கும் யூ டியூப் நிகழ்ச்சி தயாரிக்கும் காட்சிகள் சுவாரஸ்யம். யோகிபாபுவுடனான டிராக்கும் கலகல. ஆனால் விடிவி கணேஷ் டிராக் கொட்டாவி.
இரண்டாம் பாதியில் வேகமெடுக்கும் திரைக்கதையில் மிக பயங்கரமாகக் காட்டப்படும் வில்லன் ( விநாயகம் பின்னியெடுத்திருக்கிறார். அவரை மேக்கப் இல்லாமல் பார்த்தாலும் பயமாக இருக்கும் போலிருக்கிறது) பிறகு பிச்சையெடுக்கும்போது தொபக்கடீரென்று விழுந்துவிடுகிறார்.
சுனில்,தமன்னா,கிங்ஸ்லி டிராக்கில் திடீரென்று சிரிப்பு வெடிக்கிறது. திடீரென்று எரிச்சல் வெடிக்கிறது.
சாமி சிலை திருடும் வில்லன் திடீரென்று பழம்பொருள் ஆசைப்பட்டு அதைக் கொண்டு வா, உன் மகனை விடுவிக்கிறேன் என்று ரஜினிக்கு சவால் விட.. ரஜினி திரும்பியபக்கமெல்லாம் நல்லவர்களுக்கு மட்டும் உதவும் ( ஆனால் இரக்கமே இல்லாமல் கொலைகள் செய்யும்) ரவுடிகள் உதவிசெய்ய..நோகாமல் காரியமாற்றுகிறார்.
யூகிக்க முடிகிற ட்விஸ்ட்டுகள் கடந்துவந்தால் யூகிக்க முடியாத கிளைமாக்ஸ்! ( உபயம்: தங்கப் பதக்கம், இந்தியன்)
தமன்னாவின் நடனம் மொபைலில் மீண்டும் மீண்டும் பார்க்க வைத்தது. பெரிய திரையில் இன்னும் ரசிக்க முடிந்தது.
ஃபிளாஷ்பேக் ஜெயிலர் கதைக்காக பில்டப் கொடுத்துக் காத்திருக்கவைத்துவிட்டு இவ்ளோதானா என்று ஏமாறவைத்திருந்தாலும்.. அந்த நிமிடங்களில் பழைய அலெக்ஸ் பாண்டியன் ஸ்டைலில் ரஜினி அசத்துகிறார்.
அனிருத் வித்தைக்காரர்தான்.
கேமிராமேனும் அசத்தியிருக்கிறார்.
நெல்சன் தனது பிளாக் காமெடி அம்சங்களும் வேண்டும், ரஜினியின் மாஸ் காட்சிகளும் வேண்டும் என்று முனைந்திருப்பதால் இரண்டும் கலந்து ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கிறது.
தமன்னா டான்சில் ரஜினியை இடம் மாற்றி கடைசி வரிசையில் ஆடச் சொல்ல இயக்குனருக்கு செம தைரியம்தான். சொல் பேச்சு கேட்டு அதை மறுக்காமல் செய்திருப்பதுதான் ரஜினியின் டிசிப்ளின்.
படம் பிடிச்சிருக்கா என்றால் பிடிச்சிருக்கு என்றோ பிடிக்கவில்லை என்றோ ஒற்றைச் சொல்லில் பதில் சொல்ல முடியாமல் யோசிக்க வைத்திருப்பதுகூட ஒரு சாமர்த்தியம்தான் இல்லையா?