தமிழ் சினிமாவை தலை நிமிர்த்துகிற படங்களின் வரிசையில் புதுவரவு.
தெருக் கூத்துக் கலைஞர்கள் சந்திக்கிற கஷ்ட நஷ்டங்களை ஒருசில திரைப்படங்களில் பார்த்திருக்கிற நமக்கு,
அவர்களுக்குள் நீடிக்கிற நீயா நானா போட்டி, பற்றியெறிகிற பொறாமை என மற்றொரு பக்கத்தை அறிமுக இயக்குநர் பாரி இளவழகன் அலசி ஆராய்ந்து அறிமுகப்படுத்தியிருக்கும் படைப்பு. கதைக்களத்துக்குப் பொருத்தமான தனித்துவ இசையால் இசைஞானி இளையராஜா ஜமாய்த்திருக்கிற ‘ஜமா.’
தன் தந்தை தலைமையேற்று நடத்திய ‘ஜமா’ என்கிற கூத்து நாடகக் கலைக்குழு, அவரது நெருங்கிய நண்பரின் பொறாமையால் கைவிட்டுப் போக, விரக்தியால் உயிர் விட்டுப் போகிறது. தந்தையின் இழப்புக்கு காரணமாக ஜமாவை தன் வசப்படுத்த, தந்தையைப் போலவே கூத்துக் கலையில் தேர்ந்த மகன் களமிறங்குகிறான். அவனது முயற்சிக்கு கிடைத்த பலன் என்ன என்பதே கதையின் மீதி…
படத்தை இயக்கி, கதைநாயகனாக களமாடியிருக்கிற பாரி இளவழகனின் வம்சாவளியில் பலரும் தெருக்கூத்துக் கலைஞர்களாம். அந்த அனுபவம் கதை, திரைக்கதையில் அழுத்தமாய் இடம்பிடிக்க காட்சிகளில் கூடியிருக்கிறது தரம். அப்பாவை அவமானப் படுத்தியவர்களிடம் தானும் அவமானப்படும்போது வெளிப்படுத்தும் பரிதாப முகபாவமாகட்டும், ஆத்திர ஆவேசமாகட்டும் பாரியின் நடிப்பில் தெரிகிறது நல்ல தேர்ச்சி. படத்தின் முன்பாதி முழுக்க பெண்களின் நளினம் வெளிப்படும் உடல்மொழியில் மனதை ஈர்ப்பவர், குந்தி தேவியாக வேடமிட்டு நீளமாக வசனம் பேசி எதிராளியை மிரள வைக்கும் காட்சியிலும், அர்ஜுனனாக வேடமிட்டு ஆடும் அந்த கிளைமாக்ஸிலும் காட்டியிருப்பது அதிரவைக்கும் வெறித்தனம். தோற்றத்தில் வயதுக்கேற்ற வித்தியாசம் காட்டியிருப்பதையும் பாராட்ட வேண்டும். லட்சியத்துக்காக காதலை தியாகம் செய்வதுபோல் கடந்தோடும் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் உயிரோட்டம் இருந்திருக்கலாம்.
காழ்ப்புணர்ச்சி, தலைக்கனம், ஆணவம் என மனிதனை மிருகமாக்கும் ஒட்டுமொத்த குணங்களையும் சுமந்திருக்கிற பலமான பாத்திரத்திற்கு, தேவையான திமிர்த்தனத்தை தன் நடிப்பில் சேர்த்திருக்கிற சேத்தன், அடவுகட்டி ஆடும்போது முறையான பயிற்சி பெற்றிருப்பதை உணரச் செய்கிறார்.
தனிமையில் ஆடிப்பாடி படிப்படியாக தன்னை கூத்துக் கலைஞனாக உருவாக்கிக் கொள்வது, நாட்டிய நாடகங்களில் அர்ஜுனனாக கம்பீரம் காட்டுவது, அவமானம் தாங்காமல் மனமுடைந்து மரிப்பது என நாயகனின் தந்தையாக வருகிற தயாளின் பங்களிப்பு நேர்த்தி.
நாயகனை காதலிக்கும் வழக்கமான காதலியாக வந்துபோனாலும், லட்சியத்துக்கு தடையாக இருக்கும் என்பதால் தன்னிடமிருந்து விலகும் நாயகனிடம் கோபப்பட்டு கொந்தளிக்கும்போது சற்றே கவனிக்க வைக்கிறது அம்மு அபிராமியின் அலட்டலற்ற நடிப்பு.
கூத்துக் கலைஞர்களாக வருகிற வசந்த் மாரிமுத்து உள்ளிட்டோர் அவரவர் பாத்திரங்களில் பொருந்திப் போயிருக்க, இன்னபிற நடிகர்கள், நடிகைகளின் நடிப்பு நிறைவு.
மண்மணம் மாறாத கதைக்களம் என்றால் இளையராஜாவுக்கு உற்சாகம் கூடிவிடுவது வழக்கம். அப்படி கூடிவந்த பின்னணி இசையால் படத்தின் அத்தனைக் காட்சிகளும் சிலிர்ப்பை நமக்குள் கடத்த, ‘நீ இருக்கும் உசரத்துக்கு’ பாடலில் மயங்காமல் கிறங்காமல் தப்பிப்பது சாத்தியமில்லை.
கலை இயக்குநரின் ஈடுபாடும், ஒளிப்பதிவிலிருக்கும் உழைப்பும் நேட்டிவிட்டிக்கு கேரண்டி.
வணிக அம்சங்கள் குறைவாக இருந்தாலும் கலைப் படைப்பிற்கான தகுதிகளால் நிரம்பித் ததும்புகிற ஜமா, பெறப்போகும் விருதுகளுக்கு முற்றுப் புள்ளியின்றி வைத்துக் கொண்டேயிருக்கலாம் கமா!
-சு.கணேஷ்குமார்