‘ஜம்பு மகரிஷி’ சினிமா விமர்சனம்

விவசாய நிலங்களின் வளத்தை அழித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு உலை வைக்கும் கார்ப்பரேட் சதியை வெளிச்சம் போட்டுக் காட்டும் படங்களின் வரிசையில் மற்றுமொரு படைப்பு. ஆன்மிகத்தை கலந்துகட்டிய திரைக்கதையால் தனித்துவம் பெறுகிற ‘ஜம்பு மகரிஷி.’

கூட்டுக் குடும்பமாக வசிக்கிற அந்த விவசாயியின் தந்தை இறந்துபோகிறார். அதன்பிறகு அந்த விவசாயியின் தம்பியின் மனைவியால் சொத்தில் பிரிவினை, கூட்டுக் குடும்பத்தில் பிளவு என சூழ்நிலை ரணகளமாகிறது.

விவசாயி கிராமத்தை விட்டு வெறொரு ஊருக்கு மனைவியோடும் பிள்ளையோடும் இடம்பெயர்கிறார். அங்கு தனக்கு பொருத்தமான விவசாயப் பணியையும் தேடிக் கொள்கிறார்.

கார்ப்பரேட் நிறுவனத்தினரின் சூழ்ச்சியால் அந்த ஊரின் விளைநிலங்கள் நாசமாக்கப்படுவதை அறிந்து அதற்கு துணைபோகிற ஊர்ப் பெரியவருக்கு எதிராக மக்களைத் திரட்டி போராடுகிறார். ஏழை, எளிய மக்களின் எதிர்ப்புகளை சமாளிக்கிற அத்தனை பலமும் கொண்ட அவர்களிடமிருந்து அந்த விவசாயி முன்னெடுத்த போராட்டத்தின் முடிவு என்ன என்பது கதையின் போக்கு.

இடையில், எளிய குடும்பத்து இளைஞன் ஊரின் முக்கியப் பிரமுகரின் மகளைக் காதலித்து எதிர்ப்பைச் சம்பாதிக்கிற அத்தியாயங்களும் உண்டு.

இந்த கதையில் திருவானைக்காவல் ஜம்பு மகரிஷியின் வாழ்க்கை வரலாற்றை இணைத்து புதுவிதமாக திரைக்கதை அமைத்து காட்சிகளுக்கு பரபரப்பூட்ட முயற்சித்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி. இயக்கியதோடு, விவசாயி, ஜம்பு மகரிஷி, ருத்ரவீரன் என மூன்று வெவ்வெறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். மூன்று வேடங்களுக்கும் உரிய வித்தியாசத்தை தோற்றத்தில் மட்டுமல்லாது நடிப்பிலும் காட்டியிருக்கிறார்.

திரைப்பாடல்களில் கவர்ச்சியாக ஆட்டம்போடும் அஸ்மிதா, சாதாரண விவசாயி ஒருவருக்கு மனைவியாக வந்து அலட்டலற்ற நடிப்பைத் தந்துள்ளார்.

ராதாரவியின் வில்லத்தனத்தில் வழக்கமான கம்பீரம் தெரிகிறது.

டெல்லி கணேஷ் அவருக்கு மிகமிக பொருத்தமான கதாபாத்திரத்தில் தரமான நடிப்பைத் தர, மீரா கிருஷ்ணன், ‘பாகுபலி’ பிரபாகர் என மற்ற கதாபாத்திரங்களை ஏற்றிருப்பவர்களின் நடிப்பும் பலம் சேர்த்திருக்கிறது.

இடைவேளை வரை குடும்பப் பிரச்சனை, விவசாயம் என்றெல்லாம் சுற்றிச் சுழலும் கதை, பின்னர் ஜம்பு மகரிஷியின் வாழ்க்கை, அவருக்கு சிவபெருமான் காட்சி தருவது, வாதாபி என்ற அரக்கனை அழிக்க சிவனுடைய வியர்வையிலிருந்து ருத்ரவீரன் அவதரிப்பது, ருத்ரவீரனும் வாதாபியும் மோதிக் கொள்வது என முழுக்க முழுக்க வேறொரு களத்தில் பயணிப்பது வித்தியாசமான அனுபவத்தை தருகிறது.

பின்னணி இசையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் பங்களிப்பு நேர்த்தியாக அமைய, புவனேஸ்வரன் இசையில் ‘நிலையில்லா உலகினிலே’ பாடல் கிறங்கடிக்கிறது.

பகவதி பாலாவின் ஒளிப்பதிவு கச்சிதம்.

பிரமாண்டமான பொருட்செலவில் படமாக்கப்பட வேண்டிய காட்சிகள் எளிய பட்ஜெட்டில் உருவாகியிருப்பது அந்த காட்சிகளின் கனத்தைக் குறைத்திருக்கிறது. அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் வித்தியாசமான முயற்சிக்காகவும் விவசாயம் மீதான அக்கறையோடு கதைக்களத்தை உருவாக்கியிருப்பதற்காகவும் இயக்குநரை பாராட்டலாம். பாகம் 2 கூடுதல் சுவாரஸ்யத்தோடு வெளிவரும் என்று நம்பலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here