‘ஜவான்’ சினிமா விமர்சனம்

ராணுவ வீரனான தன் தந்தையை தேசத் துரோகி என முத்திரை குத்தியவர்களை, தன் தாயின் மரணத்துக்கு காரணமானவர்களை பழிவாங்கப் புறப்படும் ஒருவன் தான் நினைத்ததை எப்படியெல்லாம் சாதிக்கிறான் என்பதே ஜவானுக்கு அமைக்கப்பட்டிருக்கும் அஸ்திவாரக் கதை.

அந்த பழிவாங்கல் நாட்டின் நலன் சார்ந்திருக்க, பழிவாங்கப் புறப்படும் அவனோடு கார்ப்பரேட் சதிகளால் பாதிக்கப்பட்ட ஆறு பெண்கள் கைகோர்க்க கதைக்களம் ஆகிறது போர்க்களம். இயக்குநர் அட்லீயின் பாலிவுட் என்ட்ரீ அமர்க்களம்!

நேர்மையான ராணுவ வீரனாக ஜவானாக விக்ரம் ரதோர், அவருடைய மகன் அசாத் ரதோர் என இருவேட ங்களில் ‘கிங்கான்’ ஷாருக்கான். ‘இந்தியன்’, ‘அந்நியன்’, ‘கத்தி’, ‘காப்பான்’, ‘சர்தார்’ உள்ளிட்ட பல படங்களில் சமூக நலனை முன்வைத்து களமிறங்கிய ஹீரோக்கள் எதையெல்லாம் செய்தார்களோ அதையெல்லாம் ஷாருக்கான் அவர் ஸ்டைலில் விறுவிறுப்பாக சுறுசுறுப்பாக செய்திருக்கிறார்.

அனல் பறக்கும் ஆக்சன்; மனம் நெகிழச் செய்யும் பாசப்பிணைப்பு, பெருமிதம் தருகிற தேசப்பிணைப்பு, போகிறபோக்கில் தென்றலாய் இதம் பரப்ப மெல்லிய காதல் என திரும்பிய பக்கமெல்லாம் ஷாரூக்கின் ஆளுமை அட்டகாச அட்டனன்ஸ் போட்டிருக்கிறது.

காவல்துறை உயரதிகாரியாக நயன்தாரா. ஏற்ற வேடத்துக்கான தோற்றப் பொலிவு, பார்வையில் வீரம், நடையில் கம்பீரம் என கவர்கிறார்.

கதையின் முக்கிய கதாபாத்திரங்கள் தொழிற்சாலைகளின் நச்சுக் கழிவுகளால், அரசு மருத்துவமனைகளின் அலட்சியத்தால் என பல விதங்களில் பாதிக்கப்பட்டிருக்க, அத்தனைக்கும் காரணமான ஒரே மையப்புள்ளியாக விஜய் சேதுபதி. ‘முகம் என ஒன்று இருக்கிறதா இல்லையா?’ என சந்தேகப்படும்படி ஏராள தலைமுடி தாராள தாடி மீசை என ரோமக்காடாக வருகிற அவர் கார்ப்பரேட் முதலாளிகள் என்னவெல்லாம் அநியாய அட்டுழியங்கள் செய்வார்களோ அதையெல்லாம் கண்களால் சிரித்துக் கொண்டே கச்சிதமாக செய்திருக்கிறார். அவரது வில்லத்தனம் நமக்கெல்லாம் பழகியதுதான் என்றாலும் பாலிவுட்டுக்கு புதிதாக இருக்கலாம்.

தீபிகா படுகோனே ஏற்றிருப்பது கனமான கதாபாத்திரம். அம்மணி அதற்கேற்ற நடிப்பையும் கொடுத்திருக்கிறார்; பாடல் காட்சியில் இளமைத் துடிப்பையும் காட்டியிருக்கிறார்.

சஞ்சய் தத்தின் ஆரம்பக் காட்சியும் அவரது ஸ்டைலான நடிப்பும் ரகளை. வேட்டி சட்டையில் மனிதர் அழகு!

பிரியாமணி உள்ளிட்ட ஆறு பெண் போராளிகளின் பரபரப்பான நடிப்பு படத்தின் பலம்.

ஒன்றிரண்டு காட்சிகளில் வந்தாலும் கவனிக்க வைக்கிறார் யோகிபாபு.

கதையில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களின் பட்டியலே பெரிதாக இருக்க திரும்பிய பக்கமெல்லாம் பொதுமக்களையும் கூட்டம் கூட்டமாக காட்டும்படியான கதைக்களம். அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நடிகர் நடிகைகளும் அவர்களின் நேர்த்தியான நடிப்புப் பங்களிப்பும் நிறைவு.

மெட்ரோ ரயில் ஹைஜாக் கொஞ்சமே கொஞ்சம் சுவாரஸ்யம். ஒரே சிறைவளாகத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் கைதிகளாக இருப்பது, அவர்கள் அத்தனை பேரும் ஒரே மனநிலையில் செயல்படுவது என்றெல்லாம் நீளும் காட்சிகள் ‘இதுக்குப் பேருதான் சினிமா’ என அடித்துச் சொல்கின்றன.

அனிருத் இசையில் வந்த இடம்’, ராமையா வஸ்தாவையா’ பாடல்களில் உற்சாகம் தெறிக்கின்றன. பின்னணி இசையில் அதிரடி ஆர்ப்பாட்டம் அதிகம்.

ஒளிப்பதிவின் நேர்த்திக்கு மதிப்பெண்களை வாரியிறைக்கலாம்!

படத்தில் சிலபல குறைகள் இருந்தாலும், சலிப்பு தரும் அம்சங்கள் அணிவகுத்தாலும்,

நாட்டின் வளங்களைச் சூறையாட நினைக்கிற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கேட் திறந்துவிட்ட, இப்போதும் திறந்துவிடுகிற முன்னாள் இந்நாள் ஆட்சியை ஆட்சியை, ஆட்சியாளர்களை சரமாரியாக வெளுத்து வாங்கியிருக்கிற இயக்குநர் அட்லீயின் துணிச்சலைப் பாராட்டாமல் விட முடியாது!

ஜவான் – வசூலில் திவான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here