‘ஜோ’ சினிமா விமர்சனம்

மயிலிறகால் மனம் வருடுவது போன்ற உணர்வைத் தருகிற கதைக்களத்தில் ஒரு படம்.

கல்லூரியில் படிக்கும் காலத்தில் தமிழ்நாட்டு ஜோவும், கேரளத்து சுஜியும் காதல் வயப்படுகிறார்கள். மூச்சுக் காற்றின் கதகதப்பை அனுபவிப்பதிலிருந்து முத்தம் பரிமாறிக் கொள்வது வரை நாட்கள் உற்சாகமாய் கழிகிறது. அவர்களுக்குள் நெருக்கமும் இருக்கிறது; சின்னச் சின்ன சண்டைகள் உருவாகி மன இறுக்கமும் தொடர்கிறது. பொதுவாக இப்படியான காதலை சாதி, மதம், பொருளாதார ஏற்றத் தாழ்வு என ஏதோவொன்று பிரிக்கப் பார்க்கும். ஜோ, சுஜி காதலில் ஜோ தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் என்பதால் சுஜியின் வீட்டார் அவர்களின் காதலை எதிர்க்கிறார்கள். அதன் விளைவுகள் ஜோவின் வாழ்நாளை நரகமாக்குகிறது.

அந்த நரகத்திலிருந்து தங்கள் மகனை மீட்க அவனை வேறொரு வசந்தகாலத்துக்குள் தள்ளிவிட முயற்சி செய்கிறார்கள். அது ஜோவுக்கு வசந்தகாலமாக அமையாமல் புயல் வீசும் களமாக மாறிப்போகிறது. ஏற்கனவே அடிபட்டவன் இப்போது மிதிபட அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பதே ஜோவின் மிச்ச சொச்சம்… இயக்கம் ஹரிஹரன் ராம்.

ஜோவாக ரியோ ராஜ். காதலும் மோதலுமாய் நகரும் நாட்களில் பாலிஷ் போட்ட பேரிச்சம்பழம் போல் அத்தனை பளபளப்பாக இருக்கிறார். சோகம் தொற்றிக் கொண்டபின் முகம் மறைய தாடி மீசையோடு வரும்போது பரிதாபத்தை அள்ளுகிறார். முந்தைய படங்களைவிட கதாபாத்திரத்தின் தன்மையை உள்வாங்கி நடிப்பதில் பெரியளவில் தேர்ச்சி தெரிகிறது. பத்து காட்சிகளில் வருகிறார் என்றால் எட்டு காட்சிகளில் குடித்துக் கொண்டேயிருப்பது எரிச்சல்!

சுஜியாக கேரளத்து புதுவரவு மாளவிகா மனோஜ். அந்த குழாப்புட்டு தேசத்துக்கேயுரிய இளமையும் வனப்பும் சரிவிகிதத்தில் கலந்திருக்க, அந்த மென் புன்னகையும், பார்வையிலிருக்கும் வசீகரமும் ஏற்ற பாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கும் பொருத்தமான நடிப்பும் மனதை நிறைக்கிறது!

கதைநாயகனின் இரண்டாவது ஜோடியாக பவ்யா திரிகா. நடை உடையில் பணக்காரத்தனம் காட்டுவது, தனக்குச் சொந்தமான கல்லூரியில் கறாரான சட்டதிட்டங்கள் வகுக்கும்போது சர்வாதிகார மனோபாவத்தை வெளிப்படுத்துவது, கணவனின் மனதை புரிந்துகொள்ளாமல் அவனது மனம் நோக நடப்பது, கணவன் நல்லவன் என புரியும்போது கனிவுப் பார்வையால் கவர்வது என தன் பாத்திரத்துக்கு பலமூட்டியிருக்கிறார்.

கடந்த சில வருடங்களாக கனமான பாத்திரங்களில் நடித்து வரும் சார்லிக்கு இந்த படத்திலும் அப்படியான வேடம். ஒருசில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் மனிதர் நெகிழ வைக்கிறார். அவரது கதாபாத்திரம் போகிறபோக்கில் சமூகத்துக்கு தேவையான பாடம் நடத்தியிருப்பதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்!

நாயகனுடன் ஒட்டிக் கொண்டிருப்பவர்களில் ஒருவரை மட்டுமே உருப்படியான நண்பன் வரிசையில் சேர்க்கலாம். மற்றவர்கள் காட்சிக்கு காட்சி ‘டாஸ்மாக்’ பிரியர்களாக வலம்வருவதோடு சரி. அந்த பிரியம் நாயகனின் வாழ்க்கைப் பாதையில் ஆப்பு வைப்பதாக கதை நகர்வதில் நல்லதொரு விழிப்புணர்வு சங்கதி அடங்கியிருக்கிறது.

கல்லூரியில் கோச்சாக இருப்பதால் ஆர்யா என்ற தன் பெயரை கோச்சார்யாவாக மாற்றிக் கொண்டு சுற்றித் திரிகிற அந்த இளைஞன் சீரியஸாக பயணிக்கும் கதையில் ஆங்காங்கே சிரிப்பு மசாலா தூவ பயன்பட்டிருக்கிறார்.

நாயகனுக்கு அம்மாவாக வருகிற பிரவீணா, அப்பாவாக வருகிற இளங்கோ குமணன் என படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள். அவற்றை ஏற்றிருப்பவர்களின் நடிப்பு நேர்த்தி.

கதைக்கான முடிவை யோசித்துவிட்டு அதற்கேற்றபடி திரைக்கதையை வளைத்திருப்பது போலிருக்கிறது கிளைமாக்ஸ்!

சித்துகுமார் இசையில் ‘பார்த்தவுடனே படபடக்குது’ பாடல் தென்றலின் இதம் தந்து கடந்துபோக, ‘உருகி உருகி’ பாடலில் சற்றே மனம் கரையலாம். அந்தோணி தாசன் பாடியிருக்கும் அந்த துள்ளாட்டப் பாடலில் உற்சாகம் தெறிக்கிறது.

தனது ஒளிப்பதிவால் பல காட்சிகளை கலர்ஃபுல்லாக நகர்த்தியிருக்கும் ராகுல் விக்னேஷ் கேரளத்தின் அழகை கண்களுக்கு குளிர்ச்சியான விருந்தாக்கியிருக்கிறார்!

வாழ்நாளில் நாம் கடந்து வந்தவற்றில் ஏதேனும் ஒரு நினைவை, படத்தின் ஏதேனும் ஒரு காட்சி கிளறாமல் விடாது. அதற்காகவே ‘ஜோ‘ராக கை தட்டலாம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here