ஒரு பாடி, நாலு லேடி, பத்து கோடி என அசத்தலான காமெடி ஜானரில் மனதுக்கு குதூகல அனுபவம் தரும் ‘ஜாலியோ ஜிம்கானா.’
வழக்கறிஞர் பூங்குன்றன் மக்களின் பிரச்சனைகளை கையிலெடுத்து கோர்ட்டில் வாதாடி நியாயம் பெற்றுத் தர முயற்சிப்பவர். அந்த வகையில் ஏழை எளிய மக்களின் பெயரில் மருத்துவக் காப்பீடு எடுத்து, அவர்களுக்கு சிகிச்சையளித்ததாக போலியான சான்றுகளை தயாரித்து, பெரியளவில் பணத்தைச் சுருட்டுவதை தொழிலாக செய்கிற அரசியல்வாதி ஒருவர் மீது வழக்கு தொடுக்கிறார். அப்படியான சூழ்நிலையில் அதே அரசியல்வாதியால் பாதிக்கப்பட்ட நான்கு பெண்கள் அவரை சந்திக்க செல்கிறார்கள். சென்ற இடத்தில் பூங்குன்றன் இறந்து கிடக்க அந்த சடலத்தோடு அவர்கள் ஊர் ஊராக சுற்ற வேண்டிய கட்டாயம் உருவாகிறது. அந்த சடலம் மூலமாக 10 கோடி ரூபாய் பணம் கிடைக்கும் என்ற வாய்ப்பும் கிடைக்கிறது.
அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதற்காக சடலத்திற்கு அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உயிர் கொடுக்க முயற்சிக்கிறார்கள். அந்த முயற்சி வெற்றி பெற்றதா, 10 கோடி கிடைத்ததா என்பதையெல்லாம் ரசித்து ரசித்துச் சிரிக்கும்படியான காட்சிகளாக தந்திருக்கிறது இயக்குநர் சக்தி சிதம்பரத்தின் திரைக்கதை.
பூங்குன்றனாக பிரபுதேவா. மிகச்சில காட்சிகளில் மட்டுமே வசனம் பேசி இயல்பாக நடித்திருப்பவர், மற்ற காட்சிகளில் மகளிர் மட்டும் நாகேஷ் போல் பிணமாக நடந்திருக்கிறார்; முகபாவங்களில், உடல்மொழியில் கோணங்கிச் சேட்டைகளை அரங்கேற்றி கலகலப்பூட்டியிருக்கிறார். பாடலொன்றில், அநியாயத்துக்கு வளைந்து நெளிந்து ஆடுகிற தனது வழக்கமான பாணியைத் தவிர்த்து ரோபோ ஸ்டைலில் களமாடியிருக்கிறார்.
வாயைத் திறக்காமலே மிமிக்ரி செய்யும் ஆச்சரியத் திறமை காட்டுகிற பாத்திரத்தில் மடோனா செபாஸ்டியனின் பரபரப்பும் துறுதுறுப்பும் படம் நெடுக பயணித்திருக்கிறது.
விருமாண்டி அபிராமி காமெடியில் கணிசமாக பங்களிப்பைத் தந்திருக்கிறார். ஒய் ஜி மகேந்திரன் பிரியாணி மாஸ்டராக இரண்டொரு காட்சிகளில் கெத்தாக வந்து போக, அவருக்கு மகளாக வருகிற பெண்களும், அரசியல்வாதியாக வருகிற மதுசூதன் ராவ், முதலமைச்சராக வருகிற நாஞ்சில் சம்பத் இன்னபிற பாத்திரங்களில் ஜான் விஜய், ரோபோ சங்கர், சாய் தீனா என மற்றவர்களும் கதையில் கச்சிதமாக கலந்திருக்கிறார்கள்.
எல்லா விஷயங்களிலும் உஷாராக இருக்கிற, அதே நேரம் தன் முன் உயிரில்லாமல் இருக்கிற பிரபுதேவாவை உயிருள்ள மனிதன் என நம்பி ஏமாறுகிற பாத்திரத்தில் இயக்குநர் சக்தி சிதம்பரம் கவனிக்க வைக்கிறார்.
ஃபைல்ஸ் வந்த பாதிரியாராக அடிக்கடி தோன்றி மறைகிற யோகிபாபுவுக்கு சிரிக்க வைக்கும்படியான சீன்கள் ஒன்றிரண்டாவது இருந்திருக்கலாம்.
ஜாதிராஜ் என்ற பெயரில் விரைப்பு மீசைக்காரராக வருகிற பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ் தனித்து தெரிகிறார்.
அஷ்வின் விநாயகமூர்த்தியின் இசையில் ‘போலீஸ்காரனை கட்டிக்கிட்டா’ என தொடங்கும் ஒரு மாதிரியான வரிகளைக் கொண்ட பாடல் ஆண்ட்ரியாவின் குரலில் கிறங்கடிக்கிறது.
எம்.சி. கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு கொடைக்கானல் காட்சிகளில் பசுமை விருந்து படைத்திருக்கிறது.
பிணத்தை ரோபாடிக் டெக்னாலஜி மூலம் செயல்பட வைப்பது, விதவிதமான, வித்தியாசமான வில்லன்கள் படத்தின் பலம்.
நிறைவுக் காட்சி பொம்மலாட்டத்துடன் கடந்தோடுவது ‘அடடே’ என்றிருக்கிறது.
லாஜிக் அதுஇதுவென அலசி ஆராயும் மூளையை மூலையில் தூக்கிப் போட்டுவிட்டு தியேட்டருக்கு போனால், ஜாலியோ ஜிம்கானா நிச்சயம் மனதுக்கு ஜாலிதான்!