கூலிக்கு கொலை செய்பவன், ஒரு கும்பலால் கொலைவெறியோடு துரத்தப்படுகிற பெண்ணுக்கு வேலியாகிற கதை. ஹாலிவுட் பட பாணியில் கெளதம் மேனன் இயக்க, ஆக்சன் அதகளமாக ‘ஜோஷ்வா இமை போல் காக்க.’
இளைஞன் ஜோஷ்வா சர்வதேச அளவில் தொடர்புள்ள காண்ட்ராக்ட் கில்லர். ஓரு பெரிய சம்பவத்தை நடத்த சென்னைக்கு வரும் அவருக்கு குந்தவி என்ற பெண்ணுடன் பழக்கமாக, பற்றிக் கொள்கிறது காதல் தீ.
குந்தவி கோடிகளில் மிதப்பவர்; அமெரிக்காவில் வக்கீலாக பணிபுரிபவர். தன்னைக் காதலிக்கும் ஜோஷ்வா, கொலை செய்வதை தொழிலாக கொண்டவன் என்பதை அவன் மூலமாகவே அறிந்து, அவனிடமிருந்து விலகுகிறாள்.
ஒரு கட்டத்தில் குந்தவியை கொலை செய்ய அமெரிக்காவின் போதைப்பொருள் கடத்தல் தாதா கூலிப்படைகளை ஏவிவிட, குந்தவியை அந்த கொலைகார கும்பலிடமிருந்து பாதுகாக்க களமிறங்குகிற ஜோஷ்வா சந்திக்கும் சவால்களே மிச்ச சொச்ச கதை.
வந்தே பாரத்’துக்கு மும்மடங்கு வேகம்கூட்டியதுபோல் சீறிப் பாயும் திரைக்கதையில் குந்தவியின் உயிருக்கு குறிவைத்த காரணம், அவளை துரத்தும் கும்பலுக்கும் ஜோஷ்வாவுக்குமான தொடர்பு என கடந்தோடும் காட்சிகளில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.
கதாநாயகனாய் அறிமுகமாகும் முதல் படத்திலேயே அதிரடி ஆக்சனில் தெறிக்க விடுகிற வரம் கிடைத்திருக்கிறது வருணுக்கு; அதுவும் கெளதம் மேனன் இயக்கத்தில். கிடைத்த வாய்ப்பின் கனம் உணர்ந்து, தன்னை இயக்குபவரின் தரம் அறிந்து தகுதியோடு களமிறங்கியிருக்கிறார். முறுக்கேறிய உடம்போடும், வெறியேறிய பார்வையோடும் துப்பாக்கியும், கத்தியுமாக சுற்றித் திரிபவர் முன்னணி ஹீரோக்களுக்கு சளைத்தவனில்லை என்பதுபோல் ஆக்சன் காட்சிகளில் அட்டகாச அமர்க்களம் செய்திருக்கிறார்.
ஜோஷ்வாவின் மனதைக் கொள்ளையடித்தவராக ராஹே. அவரது முகத்தை, எந்த நேரமும் முத்தமிட தயாராக இருப்பதைப் போன்ற கோணத்திலேயே காட்டினாலும், தான் ஏற்றிருக்கும் பாத்திரத்தின் தேவைக்கேற்ப கண்களில் பயத்தையும் பதட்டத்தையும் சரியாக கடத்தியிருக்கிறார். கதாநாயகனை கட்டியணைத்து முத்தமிடுகிற காட்சிகளும் இல்லாமலில்லை.
ஹீரோயினை போட்டுத்தள்ளினால் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும்; தப்பிக்க விட்டால் நட்பு பிழைக்கும் என்ற நிலையில் என்ன முடிவெடுப்பது என தடுமாறி தடம் மாறுகிற கிருஷ்ணா, மெல்லிய வில்லத்தனத்தால் தன் பாத்திரத்தை தாங்கிப் பிடித்திருக்கிறார்.
ஜோஷ்வாவுக்கு கொலை வாய்ப்பு வழங்குகிற டானாக டிடி. அவரை தீர்த்துக் கட்ட எங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள், இவரது கதையை முடிக்க கான்ட்ராக்ட் போட்டோம் என்றெல்லாம் வார்த்தைகளில் கெத்து காட்டுபவர், அதற்கேற்ப ஓரளவு நடிக்கவும் செய்திருக்கிறார்.
மன்சூர் அலிகான், விசித்ரா ஊறுகாய் போல் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். கிளைமாக்ஸில் கவனிக்க வைக்கிறது கிட்டியின் துடிப்பான நடிப்பு!
இன்னபிற பாத்திரங்களில் வருகிறவர்களின் பங்களிப்பு நேர்த்தி.
இயக்குநரை விட சண்டைப் பயிற்சியாளர் அதிகம் உழைத்திருக்கிறார் என்பதை படம் முழுக்க பற்றியெரியும் ஆக்சன் காட்சிகள் எடுத்துச் சொல்கின்றன.
இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் மூன்று தரப்பும், ஹாலிவுட் படம் பார்ப்பதை போன்ற உணர்வைத் தர முழுமூச்சாய் மெனக்கெட்டிருக்கிறார்கள்.
இரண்டாம் பாகமும் வருகிறதாம்.
ஜோஷ்வா – ஆக்சன் பட பிரியர்களுக்கான விஷுவல் டிரிட்!