என்னைவிட ஹீரோயினுக்கே வசனம் அதிகம்! -‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ஆர்யா பேச்சு

ஆர்யா நடிப்பில், முத்தையா இயக்கத்தில், கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ள கமர்ஷியல் ஆக்சன் திரைப்படம் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்.’ ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படம் உலகமெங்கும் வரும் ஜூன் 2-ம் தேதி வெளியாகிறது. அதையொட்டி படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

நிகழ்வில் இயக்குநர் முத்தையா பேசும்போது, ‘‘இது என்னுடைய எட்டாவது படம். எனது அனைத்து படங்களும் ஒரு உறவைப் பற்றிய கதையாக இருக்கும். ஆனால், இந்த படத்தில் நன்றி உணர்வைப் பற்றிக் கூற முயற்சி செய்துள்ளேன். படத்தில் அனைத்து கதாபாத்திரமும் ஒரு உணர்வை மற்றும் உறவைச் சொல்லும். படத்தின் கதைக்களம் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பது போல அமைந்துள்ளது. நிறைய நகரப் படங்கள் வருகிறது. இந்த கிராமத்து மண் சார்ந்த படத்தையும் நீங்கள் ஆதரிக்க வேண்டும். இந்தப் படத்தில் அனைவரும் மிகப்பெரிய உழைப்பைக் கொடுத்துள்ளனர். படம் மிகவும் அருமையாக வந்துள்ளது உங்களுக்கு கண்டிப்பாகப் பிடிக்கும். அனைவரும் ஆதரவு தர வேண்டும்” என்றார்.

நடிகர் ஆர்யா பேசும்போது, ‘‘முத்தையா சார் மிகத்திறமையான இயக்குநர். பயங்கரமான சிட்டி சப்ஜெக்டோட என்னிடம் வந்தார். சார் இது வேண்டாம், ஒரு கிராமத்துப் படம் பண்ணனும்; அதுவும் உங்க கூட பண்ணனும்னு சொன்னேன். அவர் இந்த கதையோடு திரும்ப வந்தார். அவரோட படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும், எமோஷன் எப்பவும் சூப்பரா இருக்கும். சீன் சொல்லும் போதே அழுதுருவாரு. அவர் மாதிரி என்னால நடிக்க முடியுமானு பயமா இருக்கும். நிறைய நிறையச் சம்பவங்கள் கதைகள் சொல்லிக்கொண்டே இருப்பாரு. தயாரிப்பாளர்கள் அவ்வளவு உறுதுணையா இருந்தாங்க. ஹீரோயினுக்கு என்னை விட டயலாக் அதிகம். அவங்களுக்கு நிறைய காட்சிகள் இருக்கு, சாதாரணமா வந்துட்டு போற ஹீரோயின் ரோல் இல்ல. சூப்பரா நடிச்சிருக்காங்க. ஒரு செம்மையான டீம் முத்தையா சார் வச்சிருக்காரு. டெக்னிகலா எல்லோருமே அட்டகாசமா பண்ணிருக்காங்க. நான் இந்த மாதிரி தோற்றம் பண்ணதே இல்ல உங்களுக்கு பிடிக்கும்னு நம்பறேன்” என்றார்.

நாயகி சித்தி இதானி பேசும்போது, ‘‘என்னுடைய முதல் ‘படம் வெந்து தணிந்தது காடு.’ அந்த படத்திற்கு நீங்கள் நல்ல ஆதரவு கொடுத்தீர்கள். அதே போல் இந்த படத்திற்கும் ஆதரவு தர வேண்டும். ஆர்யா மிகச்சிறப்பான ஒத்துழைப்பைத் தந்தார். இந்த படம் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. படத்தை அனைவரும் தியேட்டரில் பார்த்து ஆதரவு தர வேண்டும்” என்றார்.

படக்குழு:
இசை – ஜீ.வி.பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு – வேல்ராஜ்
கலை இயக்கம் – வீரமணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here