சூப்பர் நேச்சுரல் ஹாரர் த்ரில்லர் சப்ஜெக்டில், ஜோதி முருகன் எழுதி இயக்கியிருக்கும் ‘கண்டதை படிக்காதே.’
இந்த படத்தை தயாரித்துள்ள ‘புல்லி மூவிஸ்’ சத்யநாராயணனிடம் பேசியபோது, ‘‘சென்னையில் வேலைக்குச் செல்லும் ஒரு பெண் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொள்கிறாள். அதன் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் சிவராமன் புலனாய்வில் இறங்குகிறார். மர்மத்தின் வேர் தேடி கொடைக்கானல் செல்கிறார். அங்கே போன பிறகு தான் தற்கொலைகளுக்கான திகிலான சம்பவம் அவருக்குத் தெரிகிறது.
மணிமாறன் என்ற எழுத்தாளர் ஒரு திகில் கதையை எழுதி இருக்கிறார். அதை படித்த அவரது பேத்தி நிஷா கதையை இணையதளத்தில் பதிவிடுகிறாள். அந்த கதையைப் படித்ததால் அவள் இறந்தும் போகிறாள்.
இணையதளத்தில் வந்த அந்தக் கதையைப் படிக்கும் வாசகர்கள் ஒவ்வொருவராக இறக்கிறார்கள். இந்தப் பட்டியலில் புலனாய்வு செய்யப் போன காவல்துறை அதிகாரியின் தங்கையும் அடக்கம். அதனால் இதன் பின்னணியில் உள்ள மர்மத்தைத் தேடி விசாரணை செய்கிறார். அவர் அதற்காகக் கொடைக்கானல் செல்கிறார். அங்கே நிஷாவின் பாட்டியை சந்திக்கிறார்.
மர்ம முடிச்சுகளை அவிழ்க்க முயற்சிக்கும்போது பின்னணியில் ஒரு சாமியார் இருப்பது தெரிகிறது. அவரது கட்டுப்பாட்டில் உள்ள இறந்து போன ஒரு தம்பதிகளின் ஆவிகள் செய்யும் வேலை தான் அது. இணையத்தில் வெளிவந்தது அவர்களது சொந்தக் கதை. அந்த கதையை படிப்பவர்களை அந்த ஆவிகள் கொன்றுவிடுகின்றன என்று தெரிகிறது.
அதன்பின் அந்த சாமியார் சிவராமனைக் கொல்ல முயல்கிறார். சிவராமன் அதை எப்படி எதிர்கொள்கிறார், அந்த ஆத்மாக்களைத் தடுத்து எப்படி மக்களைக் காப்பாற்றுகிறார் என்பதுதான் கண்டதை படிக்காதே’ படத்தின் கதைக்களம்.
வளர்ந்து வரும் நடிகர்கள் ஆதித்யா, சுஜி, சீனிவாசன், வைஷாலி, ஜெனி பெர்னாண்டஸ், ஆரியன், ராஜ் நவீன் உள்ளிட்டோருடன் தயாரிப்பாளர் சத்யநாராயணன் எழுத்தாளர் பாத்திரத்தில் நடித்துள்ளார்.
80 சதவிகித படப்பிடிப்பு கொடைக்கானலிலும் மற்ற காட்சிகளுக்கான படப்பிடிப்பு சென்னை, செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், படப்பை உள்ளிட்ட பகுதிகளிலும் நடந்துள்ளது.
11 நாடுகளில் பல்வேறு விழாக்களில் திரையிடப்பட்ட இந்த படம் ஒன்பது சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.
படத்தை வரும் ஜூன் 30-ம் தேதி 9Vஸ்டூடியோஸ் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.
படக்குழு:
இசை – செல்வா ஜானகிராஜ்
ஒளிப்பதிவு – மஹிபாலன்
படத்தொகுப்பு – சுரேஷ் அர்ஸ்
கலை – முனி கிருஷ்ணா
பாடல்கள் – ரவி தாசன்