ஹாலிவுட் படங்களில் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மிரளவைப்பதைப் போல், நம்மூர் இயக்குநர்களும் அசத்தலான படங்களைக் கொடுக்க முயற்சித்து வருகின்றனர். அந்த வரிசையில் ‘கட்டானா‘ என்கிற படம் காட்சியில் புதுமை என்பதோடு கதையிலும் புதுமையாக, காலப்பயணம் செய்யும் கதையாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது.
‘தமிழனானேன், ‘23 23 தி பிகினிங்’ என்ற படங்களை இயக்கிய சதீஷ் ராமகிருஷ்ணன் மூன்றாவதாக இயக்கும் படம் இது.
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி படத்தொகுப்பு செய்து இயக்கியுள்ள இயக்குநர் சதீஷ் ராமகிருஷ்ணனே கதாநாயகனாகவும் நடித்துள்ளார். கோவையைச் சேர்ந்த ஆல்சிஃபா கதாநாயகியாக நடித்துள்ளார். சரவணன் ராதா கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.
படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. படத்தில் யாரும் தொடாத ஒரு விஷயத்தைப் பேசியுள்ளதாக இயக்குநர் நம்புகிறார். அதற்கேற்ப சமீபத்தில் மோஷன் போஸ்டர் வெளியாகி படத்தின் தரத்தை அடையாளம் காட்டியுள்ளது.
இந்த நிலையில் படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ‘‘கிட்டத்தட்ட 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இளவரசன் டைம் ட்ராவல் எனப்படும் காலப்பயணம் மூலம் தற்காலத்துக்கு பயணிக்கிறான். இங்கே நிகழ்காலத்திற்கு வந்தவன் இங்கு நிலவும் பிரச்சினைகளைப் பார்க்கிறான். தன்னிடம் உள்ள பாரம்பரியமான தற்காப்பு வீரக்கலையைப் பயன்படுத்தி அந்த பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கிறான், சமாளிக்கிறான், முடிவு என்ன என்பதை கதைக்களம்.
வரலாற்றிலும் மதம் சார்ந்த கதைகளிலும் எந்தத் தகவலும் இடம் பெறாமல் கைவிடப்பட்டுள்ளான் ஓர் இளவரசன். அவன் பெயர் இளஞ்சேட்சென்னி கரிகால் வர்மன். அவன் தான் இந்தப் படத்தின் கதையில் கதாநாயகனாக முதன்மைக் கதாபாத்திரமாக வருகிறான்.
இது ஒரு முழுக்க முழுக்க ‘மார்ஷியல் ஆர்ட்ஸ்’ எனப்படும் தற்காப்புக் கலை சார்ந்த படம். படத்தில் ஒன்பது சண்டைக் காட்சிகள் உள்ளன. இதை ‘மார்ஷியல் ஆர்ட்ஸ் சயின்ஸ் பிக்சன் ஆக்சன் படம்’ என்று சொல்லலாம். யாரும் அனுகாதவற்றை நாங்கள் அணுகியிருக்கிறோம். படம் பார்ப்பவர்களுக்கும் சாகச அனுபவத்தைத் தரும்.
இதுவரை அந்நிய மொழிப் படங்களில் குறிப்பாக ஹாலிவுட் படங்களில்தான் கணினித் தொழில்நுட்பத்தைப் பார்த்து நாம் மிரட்சி அடைந்திருக்கிறோம். இந்த படத்தின் கதை காலப்பயணம் பற்றி கூறுவதால் அதில் கணினி தொழில்நுட்பத்தின் பங்கு மிகப் பெரிய அளவில் இருக்கிறது. அதை படத்தில் இடம்பெறும் பிரமாண்டமான காட்சிகள் மூலம் உணரலாம்” என்றார்.