‘கிங் பிக்சர்ஸ்’ யூடியூப் சேனலில் வெளியாகி இதுவரை 35 ஆயிரம் பார்வையாளர்கள் எண்ணிக்கையைத் தாண்டியிருக்கிறது ‘கள்வா’ குறும்படம். பல தரப்பிலிருந்தும் பாராட்டுகளைக் குவித்து வருகிற அந்த படம் குறிப்பிடத்தக்க அங்கீகாரத்தை சம்பாதித்துள்ளது.
இந்திய சினிமாவின் புகழ்மிக்க இயக்குநர்கள் சத்யஜித் ரே, ரித்விக் காட்டக், மிருணாள் சென். இந்த மூன்று பெங்காலி இயக்குநர்களின் பெயரில் ஆண்டு தோறும் ‘சத்யஜித் ரித்விக் மிருணாள் சர்வதேச திரைப்பட விழா’ கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான விழா நிறைவு நிகழ்ச்சியில் திரைப்படங்கள் மற்றும் குறும்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.நிகழ்வில், பத்திரிகையாளர் ஜியா எழுதி இயக்கியுள்ள கள்வா குறும்படத்துக்கு சிறந்த ரொமான்டிக் திரில்லர் படத்துக்கான விருது வழங்கப்பட்டது.
விருதினை பெற்றுக்கொண்ட இயக்குநர் ஜியா பேசும்போது, ‘எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி, எனது குடும்பத்தாருக்கும், கள்வா படக்குழுவினருக்கும் சத்யஜித் ரித்விக் மிருணாள் திரைப்பட விழா குழுவினருக்கும் நன்றிகள்’ என்றவர், ‘எல்லா புகழக்கும் இறைவனுக்கே’ என்று முடித்தபோது அரங்கில் நிறைந்திருந்தோர் கை தட்டி உற்சாகப் படுத்தினர்.
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்த திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் 643 படங்கள் போட்டியிட்டன. இந்தி, பெங்காலி, ஆங்கிலம், ஒரியா, போஜ்புரி, மராத்தி, உருது, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிப் படங்களிலிருந்து விருதுக்காக 85 படங்கள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றில் ஒன்றாக ‘கள்வா’ தேர்வானது என்பது பெருமிதமான தகவல்!