கிழக்கு மாகாணத்தை உயர்த்த புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பு தேவை! -கல்லாறு சதீஷின் நூல் வெளியீட்டு விழாவில் இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் பேச்சு

இலங்கை மட்டக்களப்பு, கோட்டைக் கல்லாறு மகா வித்தியாலயத்தில் சுவிஸ் வாழ் தமிழர் கல்லாறு சதீஷின் ‘பனியும் தண்டனையும்’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு தலைமையேற்ற கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் பேசியபோது,“மாணவர்களுக்கு எதிர்காலத்தில் நல்ல வழிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டும். கல்வியை அவர்கள் பற்றுடன் முன்னெடுக்ககூடிய வகையில் அந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இந்தக் கிழக்கு மாகாணம் யுத்தத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதி. கடந்த 30 வருடமாக இலங்கை அரசாங்கத்தினால் வளர்ச்சிப் பணிகள் முன்னெடுக்கப்படவில்லை.

ஆனால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கிழக்கு மாகாணத்தில் அதிகளவான வளர்ச்சிப் பணியை முன்னெடுக்குமாறு எனக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தினை ஏனைய மாகாணங்களுக்கு இணையாகக் கொண்டுவரவேண்டிய பெரிய பொறுப்பினை எனக்கு வழங்கியுள்ளார். கடந்த காலங்களில் இங்கிருந்து புலம்பெயர்ந்து சென்றுள்ளவர்கள் மீண்டும் இங்கு வருவதற்கு முன்னுதாரணமாக சதீஷ் இங்கு வந்துள்ளார். அவரது தமிழ்ப் பற்று எனக்கு ஆச்சரியமூட்டுகிறது. புலம்பெயர்ந்து சென்றவர்கள் இங்கு முதலீடுகளைச் செய்து தொழில்துறையினையும் அபிவிருத்திகளையும் செய்யவேண்டும்.

இது உங்களின் பிரதேசம், உங்களது நாடு. மீண்டும் கிழக்கு மாகாணத்திற்கு வந்து கிழக்கு மாகாணத்தை உயர்த்திக் கொண்டுவருவதற்கு உங்களின் முழுமையான ஒத்துழைப்பு தேவை” என்றார்.

இந்த நிகழ்வில் தென்னிந்தியாவின் திரைப்படத் தயாரிப்பாளரும் பதிப்பாளருமான டிஸ்கவரி புக் பேலஸ்’ மு.வேடியப்பன் கலந்துகொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாகக் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி மு.கோபாலரட்னம்,கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் துறையின் பணிப்பாளர் நவநீதன், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்னம்,பட்டிருப்பு வலய கல்விப் பணிப்பாளர் ஸ்ரீதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நூலாசிரியர் கல்லாறு சதீஷ் , கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

விழாவில் கோட்டைக் கல்லாறு மகா வித்தியாலய மாணவிகளின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன. அவை தமிழின் பாரம்பரியக் கலைகளை நினைவூட்டும் வகையில் அமைந்திருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here