இயக்குநர் பாலு மகேந்திரா வீரப்பனின் கதையை படமாக்க என்னிடம் ஆலோசித்தபோது மறுத்துவிட்டேன்! -‘கூச முனிசாமி வீரப்பன்’ வெப் சீரிஸ் பத்திரிகையாளர் சந்திப்பில் நக்கீரன் கோபால் பேச்சு

சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை, வீரப்பன் நக்கீரன் பத்திரிகைக்கு அளித்த பேட்டி வீடியோக்களின் மூலமாக விவரிக்கும் டாக்குமெண்ட்ரி சீரிஸ் ‘கூச முனிசாமி வீரப்பன்.’

நக்கீரன் இதழாசிரியர் கோபாலின் மகள் பிரபாவதி தயாரித்துள்ள இந்த சீரிஸ் டிசம்பர் 14; 2023 அன்று முதல் ZEE5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.

முன்னதாக சீரிஸின் 6 எபிசோடுகளும் பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது. அதை தொடர்ந்து, சீரிஸை உருவாக்கிய குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

நிகழ்வில் நக்கீரன் கோபால், ‘‘வீரப்பனின் கதையை எடுப்பதற்காக நிறைய பேர் வந்தார்கள். என் மகள் கேட்பதற்கு முன்பாகவே நிறைய பேர் கேட்டார்கள். ஆனால் இதைச் சரியாகச் செய்ய வேண்டுமே என்கிற தயக்கம் இருந்தது. பாலுமகேந்திரா கூட கேட்டார். ஆனால் மறுத்துவிட்டேன்.

இது வரை வந்தது அனைத்துமே போலீஸ் பார்வையில் வீரப்பனின் கதை. அதைப் பார்க்கும் போதே கோபமாக வரும். பாதிக்கப்பட்டவன் அவ்வளவு பேர் இருக்கிறார்களே, அதைப்பதிவு செய்ய வேண்டுமே, அவர்களுக்குத் தீர்வு வேண்டுமே என்று தோன்றும். பாதிக்கப்பட்டவர்களுக்காக எவ்வளவோ போராடினோம். இதில் வந்திருப்பது வெறும் .001 பகுதி மட்டுமே. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று வரை நிவாரணம் இல்லை. அந்த பாதிப்பை வலியை இவர்கள் சரியாகப் பதிவு செய்து விட்டார்கள். என் மகளுடைய டீம் அதைச் செய்துள்ளார்கள் என்பது பெருமையாக இருக்கிறது. இதைத் தைரியமாக செய்த  ZEE5 க்கு நன்றி.

இது நக்கீரனின் 30 வருட உழைப்பு, எனக்கு வீரப்பனைப் பிடிக்கும், வீரப்பனுக்கு என்னைப் பிடிக்கும். ஆனால், எந்த இடத்திலும் நக்கீரன் வீரப்பனுக்கு ஆதரவாக ரிப்போர்ட் செய்ததில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் தான் நாங்கள் நின்றோம். வீரப்பனைத் தேடிப்போய்ப் பார்த்துப் பல கஷ்டங்களுக்கு பிறகு 1996-ல் அவரை வீடியோவில் கொண்டு வந்தோம். அதை அத்தனையையும் இவர்களிடம் தந்து இதைச் சரியாகக் கொண்டு வந்து விடுங்கள் என்று மட்டும் சொன்னேன். அதை மிகச் சரியாகச் செய்து விட்டார்கள்.

இதில் உழைத்த கலைஞர்கள் அனைவரும் அவ்வளவு அர்ப்பணிப்போடு உழைத்துள்ளார்கள். பல வருடங்களுக்குப் பிறகு நேரில் போய்ப் பல ரிசர்ச் செய்து, அந்த தகவல்களைக் கொண்டு வந்து சேர்த்துள்ளார்கள். திரையில் அந்தக்கதையை உண்மையாகக் கொண்டு வந்துள்ளார்கள். இதற்காக உழைத்த என் டீம் பலர் ஜெயிலுக்கு போயிருக்கிறார்கள். நான் 9 மாதம் ஜெயிலுக்குப் போனேன். நக்கீரனின் இந்த உழைப்பைக் காப்பாற்றிக் கொண்டு வந்த இந்த குழுவிற்கும்  ZEE5 தளத்துக்கும் நன்றி!” என்றார்.

தயாரிப்பாளர் பிரபாவதி, ‘‘இது எனக்கு மிக முக்கியமான மேடை. என்னை இந்த இடத்திற்குக் கொண்டு வந்தது என் தந்தை தான். என் சிறு வயதில் அப்பா கிளம்பும்போது வீடே அழும், ஏன் எனக் கேட்பேன். அப்பா வீரப்பனைப் பார்க்கப் போகிறார், அவர் யானையைக் கொன்றவர் மனிதர்களைக் கொன்றவர் என்றார்கள். அவரை ஏன் அப்பா பார்க்கப் போக வேண்டும் என நினைப்பேன். ஆனால் ஒரு நாள் காட்டில் இருந்து வந்து மயிலிறகு தந்து, வீரப்பன் தந்தாக சொன்னார்.

வீரப்பன் எப்படி இவ்வளவு எளிமையான மனிதராக இருக்க முடியும் எனத் தோன்றியது. கல்லூரி காலத்தில் தான் அவரைப் பற்றி முழுதாக தெரிய ஆரம்பித்தது. என்றாவது ஒரு நாள் அவரது கதையை படமாக்க வேண்டும் என நினைத்தேன். அப்பாவிடம் கேட்ட போது எனக்கு தான் நிறைய டெஸ்ட் வைத்தார். இதை செய்தால் முறையாகச் சரியாகச் செய்ய வேண்டும் என்றார். அப்படித்தான் இந்தப் பயணம் ஆரம்பித்தது.

இதைத் தயாரிக்கப் போகிறோம் என்றவுடன் எஸ் ஆர் பிரபு சாரிடம் போனேன் அவர் மிக ஆதரவாக எல்லாம் சொல்லித்தந்தார். எங்களுக்குக் கனவிருக்கலாம் ஆனால் அதைச் சரியாகப் புரிந்து கொண்டு நிறையப்பேர் உயிரைத்தந்து உழைத்துள்ளனர்” என்றார்.

இயக்குநர் சரத் ஜோதி, எல்லா இயக்குநருக்கும் முதல் புராஜக்ட் ரொம்ப முக்கியமானது. ஷங்கர் சார் கிட்ட இருந்து வெளியே வந்து ஒரு சீரிஸுக்காக உழைத்தோம். கோவிடால அது தடங்கல் ஆயிடுச்சு. அந்த நேரத்தில தான் இந்த வாய்ப்பு வந்ததது. இந்த புராஜக்ட் கேக்க அவ்வளவு பிரமிப்பாக இருந்தது.

முதல்ல வீரப்பன எனக்கு அடையாளப்படுத்தியது நக்கீரன் புத்தகம் தான். இப்ப இந்த புராஜக்ட் பண்ணும்போது அந்த புத்தகங்கள் படிச்சேன். அதில் பிரமிப்பை ஏற்படுத்தியது முதல் முதல்ல வீரப்பன தேடிபோன பத்திரிக்கையாளர்களோடு அனுபவம் தான். அது மிகப் பிரமாண்டமானது. தன்னோடு வீரப்பன் பேட்டிகள எடுத்த எல்லா பத்திரிக்கையாளர்களையும் கோபால் சார் தன் புத்தகங்களில் அடையாளப்படுத்திருக்காரு. இந்தக்கதையை எந்தக்காரணத்துக்காகவும் இத சினிமாத்தனமா ஆக்கிடக்கூடாதுங்கிறதுல தெளிவா இருந்தோம். எல்லாத்துக்கும் உண்மையான வீடியோ  பதிவுகள் சாட்சியங்கள் இருக்கு. அதை அப்படியே வீரப்பனோட பக்கத்துல இருந்து உங்களுக்கு சொல்லனும்னு முயற்சி பண்ணினோம். எந்த வகையிலும் அப்படி ஆகிடக்கூடாதுன்றது தான் எங்கள் நோக்கம். இப்ப வடநாட்டில் அடக்குமுறை நடக்குது, அத பதிவும் பண்றாங்க. இனி வர்ற காலத்தில் அதுவும் டாக்குமெண்ட்ரியா வரலாம். தமிழில் இது முதல் முறையா இருக்கும். பல சொல்லப்படாத கதைகள் இன்னும் இருக்கு. இன்னும் எக்கச்சக்க வீடியோக்கள், பேட்டிகள், பலரோட துயரங்கள் இருக்கு. எல்லாத்தையும் நாங்க ஆய்வு செஞ்சு, அத 6 எபிசோடா கொண்டு வந்திருக்கோம். இந்த மாதிரி ஒரு டாக்குமெண்ட்ரி தமிழுக்கு ரொம்ப புதுசு.

காட்டுக்குள்ள நாங்க போய் ஷூட் பண்ணினது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. இந்த புராஜக்ட் பின்னாடி கோபால் சாரோட 30 வருட உழைப்பு இருக்கு. அவர் இதுக்காக கொடுத்த விலை அதிகம். இந்த ஃபுட்டேஜ் எல்லாம் அவர் இவ்வளவு வருடம் பாதுகாத்து வச்சிருந்தது ரொம்ப பெரிய விஷயம். அவர் எங்களை நம்பியதற்கு மிகப்பெரிய நன்றி” என்றார்.

வீரப்பனை முதன் முதலாக பேட்டியெடுத்த நக்கீரன் பத்திரிகை நிருபர் சுப்பு, ‘‘1993ல என்னுடன் வீரப்பனை சந்திக்க இருவர் வந்தனர். அப்போது புகைப்படங்கள் மட்டுமே எடுத்தோம். அது நக்கீரனில் வந்தது. அது எல்லோருக்கும் தெரியும். பின்னர் 1996-ல் வீடியோ பதிவு செய்து ஒளிபரப்பினோம். நாங்கள் சேகரித்த பல தகவல்கள் உங்களுக்கு இந்த டாக்குமெண்ட்ரி மூலமாகக் கொண்டு வந்து தந்திருக்கிறோம்” என்றார்.

ZEE5 சார்பில் ஷ்யாம் திருமலை மற்றும் கௌஷிக் நரசிம்மன், ஒளிப்பதிவாளர் ராஜ்குமார், இசையமைப்பாளர் சதீஷ் ரகுநாதன், எடிட்டர் ராம் பாண்டியன், கிரியேடிவ் டீமிலிருந்து பிரசாந்த் பாலகிருஷ்ணன், எழுத்தாளர் ஜெயச்சந்திர ஹாஷ்மி உள்ளிட்டோரும் சீரிஸ் உருவான விதம், பணியாற்றிய அனுபவம் குறித்து பேசினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here