ஐந்து வயது மகனை தன் வரலாற்றுப் படைப்பான ‘கண்ணப்பா’வில் நடிகராக அறிமுகப்படுத்தும் விஷ்ணு மஞ்சு!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷ்ணு மஞ்சு, தனது கனவுத் திரைப்படமான ‘கண்ணப்பா’வை உலக சினிமாவில் இந்திய சினிமாவின் அடையாளமாக உருவாக்கி வருகிறார்.

அப்படம் பற்றிய ஒவ்வொரு தகவல்களும் இந்திய சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், மஞ்சு குடும்பத்தின் மூன்றாவது தலைமுறை திரையுலகில் அடியெடுத்து வைக்கும் நிகழ்வும் இந்த படம் மூலம் நிகழ்ந்துள்ளது. ஆம், நடிகர் விஷ்ணு மஞ்சுவின் ஐந்து வயது மகன் அவ்ராம் மஞ்சு, இந்த  படம் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.

புகழ்பெற்ற இந்திய நடிகர், தயாரிப்பாளர், கல்வியாளர், சமூக செயல்பாட்டாளர் என பன்முகம் கொண்ட டாக்டர்.எம்.மோகன் பாபுவின் வழிகாட்டுதலால், மூன்று குறிப்பிடத்தக்க தலைமுறைகளை கடந்து, மஞ்சு குடும்பத்தின் நீடித்த பாரம்பரியத்திற்கு ஒரு சான்றாக இந்த நிகழ்வு கருதப்படுகிறது.

நியூசிலாந்து நாட்டின் அழகிய நிலப்பரப்புகளில் 90 நாட்கள், முன்னணி நட்சத்திரங்களுடன் நடைபெற்ற படப்பிடிப்பு, ‘கண்ணப்பா’ திரைப்படத்தை காவியமாக மட்டும் இன்றி, காட்சி மொழியாகவும் பல மடங்கு உயர்த்தியுள்ளது. நியூசிலாந்து படப்பிடிப்பில் பங்கேற்ற நட்சத்திரங்களின் பெயர்களை படக்குழு வெளியிடவில்லை என்றாலும், அதில் பங்குபெற்றவர்கள் யார்? என்பதை அறிவதற்கான ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டிருப்பதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

விஷ்ணு மஞ்சுவின் மகன் அவ்ராம் மஞ்சுவின் கதாபாத்திரம், திரைப்படங்களில் இளமைக் குதூகலத்தை குடும்பங்கள் கொண்டாடும் விதமாக இருப்பதோடு, படத்தின் மையப்புள்ளியாகவும், நடிகர் விஷ்ணு மஞ்சுவின் உணர்ச்சியின் ஆழத்தைப் பிரதிபலிப்பதாகவும் அமைந்திருக்கிறது.

இது குறித்து பேசிய நடிகர் விஷ்ணு மஞ்சு, “என் மகன் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாவது பெருமைக்குரியது. என்னை பொருத்தவரை ‘கண்ணப்பா’ வெறும் திரைப்படம் அல்ல, என் கனவு, என் லட்சியம் மற்றும் என் மனதில் இருக்கும் ஆழமான உணர்வுப்பூர்வமான படைப்பு.

இப்படி ஒரு படைப்பில் என் மகனின் அறிமுகம் என்பது, எங்கள் குடும்பத்தின் மூன்று தலைமுறையின் சினிமா பயணத்தின் சங்கமம்.

அவ்ராமுடன் இந்த சினிமா பயணத்தைத் தொடங்குகிறேன், அனைத்து திரைப்பட ஆர்வலர்களின் ஆசீர்வாதத்தை பணிவுடன் பெறுகிறேன். படத்தில் சம்மந்தப்பட்ட அனைவருக்கும் ‘கண்ணப்பா’ ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருப்பதோடு, எங்கள் குடும்பத்தின் சினிமா சரித்திரத்தில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகவும் இருக்கும்” என்றார்.

இந்த படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்து, அடுத்தகட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here