இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள ‘கண்ணப்பா’ திரைப்படம் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஷ்ணு மஞ்சு எழுத்து, தயாரிப்பு மற்றும் நடிப்பில் பிரமாண்டமான உருவாகியுள்ளது.
படத்தில் பிரபாஸ், மோகன்லால், அக்ஷய் குமார், சரத்குமார் உள்ளிட்ட இந்தியா சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளார். படத்தை முகேஷ் குமார் சிங் இயக்கியிருக்கிறார்.
வரும் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த படத்தின் பிரத்யேக காட்சிகள் பத்திரிகையாளர்களுக்கு திரையிடும் நிகழ்வு மே 30; 2025 அன்று சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடந்தது.
விஷ்ணு மஞ்சு, மதுபாலா, இயக்குநர் முகேஷ் குமார் சிங், படத்தொகுப்பாளர் ஆண்டனி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்.
கண்ணப்பா படத்தின் பிரேத்யக காட்சிகளை பார்த்த பத்திரிகையாளர்கள் ‘நியூசிலாந்தில் படமாக்கப்பட்ட காட்சிகள் மிக பிரமாண்டமாக இருப்பதோடு, இதுவரை எந்த ஒரு இந்திய திரைப்படத்திலும் இடம்பெறாத லொக்கேஷன்களாக இருக்கிறது, முழுக்க முழுக்க கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் கதை சொல்லாமல், இதுபோன்ற லொக்கேஷன்களில் காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பது நிச்சயம் ரசிகர்களை கவரும்’ என்று பத்திரிகையாளர்கள் பாராட்டினார்கள்.
நிகழ்வில் பேசிய நாயகன் விஷ்ணு மஞ்சு, “‘கண்ணப்பா’ திரைப்படத்தை பொறுத்தவரை இதுவரை கண்ணப்பா பற்றி வந்திருக்கும் படங்களை விட மிக வித்தியாசமான அதே சமயம் பிரமாண்டமான படமாக இருக்கும். குறிப்பாக கண்ணப்பா சிவன் பக்தராக மாறிய பிறகு என்ன நடந்து என்பதை தான் அனைத்து படங்களும் காட்டியிருக்கிறது. ஆனால், சிவ பக்தர் ஆவதற்கு முன்பு அவரது வாழ்க்கை எப்படி இருந்தது? என்பதை இந்த படத்தில் பார்க்கலாம். அதை சாதாரண படமாக அல்லாமல் விஷுவல் விருந்தாக பார்க்கும் அளவுக்கு படத்தை மிக பிரமாண்டமாக எடுத்திருக்கிறோம். நிச்சயம் இந்திய சினிமாவில் கண்ணப்பா மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
படம் தொடர்பாக ஏகப்பட்ட கேள்விகள் எழலாம், ஆனால் வரலாறு மற்றும் இதிகாசங்கள் என்ன சொல்கிறதோ அதை தான் காட்சிகளாக எடுத்திருக்கிறோம். தணிக்கை குழுவினர் ஏகப்பட்ட கேள்விகளை முன் வைக்க உள்ளார்கள், குறிப்பாக கண்ணப்பா தனது வாயில் தண்ணீர் எடுத்து லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது, வட இந்தியாவில் ஏற்க மாட்டார்கள், என்று சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் அப்படித்தானே இருக்கிறது, உண்மையை தானே நாங்கள் காட்சியாக எடுத்திருக்கிறோம், என்று வாதிட்டேன்.
இதைவிட பெரிய விசயம், காதல் பாடலை பார்த்துவிட்டு, கண்ணப்பா காதலித்தாரா? என்று கேட்கிறார்கள். சிவனும், பார்வதியும் காதலிக்கவில்லையா, அவர்களுக்கு இடையே இருக்கும் காதல் தான், கண்ணப்பாவிடமும் இருக்கிறது, என்று விளக்கம் அளித்தேன்.
இப்படி பல கேள்விகளை தணிக்கை குழுவினர் கேட்க இருக்கிறார்கள், அவர்களுக்கு எப்படி புரிய வைத்து படத்திற்கு சான்றிதழ் பெறப்போகிறேன், என்று தெரியவில்லை. அனைத்தையும் சிவன் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவருக்காக எடுக்கப்பட்ட படம், நிச்சயம் அவர் அனைத்து தடைகளையும் தகர்த்தெரிவார், என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.
இயக்குநர் முகேஷ் குமார் சிங், “தமிழ்நாடு என்னுடைய இரண்டாவது சொந்த இடம். இங்கு ஏராளமான கோவில்கள் இருக்கிறது. நான் இங்கு திரும்ப வந்ததும், ’கண்ணப்பா’ படத்திற்காக உங்கள் முன்பு நிற்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் தயாரிப்பாளர் மோகன் பாபு சார், விஷ்ணு ஆகியோருக்கு நன்றி.
இந்த படம் வாழ்க்கைப் பயணத்தில் நிறைய விசயங்களை கற்றுக் கொடுத்தது. எனக்கு மட்டும் அல்ல, இங்கு இருக்கும் அனைவருக்கும் கண்ணப்பா சிறந்த பயணமாக அமைந்தது. அனைத்து படங்களுக்கும் கஷ்ட்டங்கள் வரும், அதுபோல் கண்ணப்பா படத்திலும் நாங்கள் ஏராளமான பிரச்சனைகளை எதிர்கொண்டோம். ஆனால், அவை அனைத்தையும் கடவுள் சிவன் பார்த்துக் கொண்டார். சிறந்த படைப்பாக கண்ணப்பா படத்தை உருவாக்கியிருக்கிறோம். கடவுள் சிவனுக்கு நன்றி. உங்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.
நடிகை மதுபாலா, “இந்த படம் பண்ணுவதற்கு என்னை சிவன் தான் தேர்வு செய்தார், என்று விஷ்ணு சார் நேர்காணலில் சொன்னார். இந்த படத்திற்காக எனக்கு கால் வந்தபோது உடனே எஸ் சொல்லிவிட்டேன். என்ன கதாபாத்திரம், என்ன கதை என்று எதையும் கேட்கவில்லை, உடனே சம்மதம் தெரிவித்து விட்டேன், இன்று படத்தை பார்க்கும் போது, இரண்டாவது முறை எதையும் கேட்காமல் ஓகே சொன்னது சரிதான் என்று தோன்றுகிறது.
இளம் அம்மா என்ற இமேஜ் எனக்கு இருக்கிறது, தற்போது அந்த இமேஜை கண்ணப்பா படம் உடைத்து, போர் வீராங்கனை என்ற புதிய பிம்பத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. நான் அந்த கதாபாத்திரத்தில் மிக மகிழ்ச்சியாக நடித்தேன். நமக்கு பலர் மீது பல கோபங்கள் இருக்கும், ஆனால் அந்த கோபத்தை வெளிக்காட்ட முடியாது. இந்த படத்தில் சண்டைக்காட்சியில் எனக்கான கோபத்தை வெளிக்காட்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த கத்தியை என்னிடம் கொடுத்து அடிக்க சொல்லியதும், எதிரே வந்த அனைவரையும் அடித்து துவம்சம் செய்து விட்டேன். இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்தது சந்தோஷமாக இருந்தது. இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் போது இருந்த ஒரே கஷ்ட்டம், அந்த வெயிட்டான கத்தியை தூக்குவது தான். போர் வீராங்கனையாக உடை அணிந்து கம்பீரமாக நிட்பேன், கையில் கத்தியை கொடுத்ததும், அதன் வெயிட் தாங்க முடியாது. கை எல்லாம் வலி எடுக்கும், அது ஒன்று தான் கஷ்ட்டமாக இருந்தது, மற்றபடி என் கதாபாத்திரத்தில் மகிழ்ச்சியாக நடித்தேன், இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்தது புதிய அனுபவமாக இருந்தது. திரையில் பார்க்கும் போது ரசிகர்களும் அதை உணர்வார்கள்” என்றார்.
நடிகர் சம்பத்ராம், நடிகர் அர்பித் ராணா, படத்தொகுப்பாளர் ஆண்டனி, இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளர் சித்தார்த் உள்ளிட்டோரும் பேசினார்கள்.

