சென்சார் போர்டு உறுப்பினர்கள், ஆதாரங்களைத் தூக்கி வெளியே போடுங்கள் என்றார்கள்! -‘கற்பு பூமி’ பட விழாவில் இயக்குநர் நேசமுரளி காட்டம்

நேசமுரளி இயக்கி, தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கற்பு பூமி.’ முன்னணி நடிகர் நடிகைகள் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் கதை பொள்ளாச்சி சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. இப்படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்வில் படத்தின் இயக்குநர் நேசமுரளி பேசியபோது, ”இன்னைக்கி என்ன நடக்குது? கொள்ளிடம், கபிலவஸ்து இரண்டு படமும் சின்ன சின்ன கிடுக்குப்பிடில தப்பிச்சி வந்திருச்சி… கொள்ளிடம் 2016-யிலும் கபிலவஸ்து 2019-யிலும் வெளியானது. கபிலவஸ்துலயும் எனக்குப் பிரச்சனை வந்தது. அதை மீறி சர்டிபிகேட் வாங்கி படத்தை ரீலிஸ் பண்ணேன். கற்பு பூமி படம் எதைப் பற்றியது என்றால் எல்லோருக்கும் தெரியும் பொள்ளாச்சியில் என்ன நடந்தது என்று. நக்கீரன் முதற்கொண்டு எல்லா செய்தித்தாள்களிலும் படித்த செய்திகளை வைத்துத் தான் நான் இந்தக் கதையை உருவாக்கி இருந்தேன். இந்த படம் துவங்கியதில் இருந்தே நெருக்கடி தான். இன்று கூட பாடல்களையோ படத்தின் காட்சிகளையோ திரையிடக்கூடாது என்று அவ்வளவு நெருக்கடி கொடுக்கிறார்கள்.

பொள்ளாச்சிக்கே சென்று மூன்று மாதங்கள் தங்கி இருந்தேன். அப்போது அறிந்து கொண்ட ஒரு சம்பவம் தான் இப்படம். இது போன்ற செய்திகள் எல்லாம் பெரும்பாலும் வெளியில் வரவில்லை. நான் இந்த சம்பவங்கள் எல்லாவற்றிற்கும் ஆதாரம் இருக்கிறது என்று சொல்கிறேன். அந்த ஆதாரங்களைத் தூக்கி வெளியே போடுங்கள் என்று சொல்கிறார்கள் சென்சார் போர்டு உறுப்பினர்கள். பத்திரிகைகளில் வந்த செய்தியை வைத்துக் கொண்டு உருவாக்கிய திரைப்படத்திற்கு ஏன் 109 வெட்டுகள்? இரண்டு மணி நேர படத்தைப் பார்த்துவிட்டு 4 மணி நேர விவாதத்திற்குப் பின்னர் அவர்கள் சொல்லிய முதல் வார்த்தை படத்திற்கு சர்டிபிகேட் தரமுடியாது.. நீங்கள் படத்தை ரீலிஸ் செய்ய முடியாது என்றார்கள். நான் அப்படி ஒன்றும் படத்தில் இல்லையே சார் என்று கேட்டதற்கு, இல்லை இப்படம் வெளியானால் இரண்டு கட்சிகளுக்கு இடையே பிரச்சனை வெடிக்கும். அதனால் அனுமதிக்க முடியாது, நீங்கள் வேண்டுமானால் ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி மறுபரிசீலனை கோருங்கள், நடிகை கவுதமி தலைமையில் 15 பேர் திரைப்படத்தைப் பார்த்து முடிவு செய்வார்கள் என்றார்கள்.

தியேட்டரில் சென்சார் உறுப்பினர்களுடன் படம் பார்க்க நான் என் நண்பர்களுடன் அமர்ந்திருக்கிறேன். யார் யாரோ வந்தார்கள். சிலர் ஏ.கே 47 துப்பாக்கி பாதுகாப்புடன் வருகிறார்கள். படத்தினைப் பார்த்துவிட்டு மீண்டும் நீண்ட விவாதத்திற்குப் பின்னர் படத்தின் எண்ட் கார்டை தூக்குங்கள் என்றார்கள். சரி அடுத்து என்ன என்று கேட்டால் பொள்ளாச்சி என்கின்ற டைட்டிலை தூக்குங்கள் என்கிறார்கள். பிரச்சனை நடந்த ஊரின் பெயரை எப்படி மாற்றுவது என்று நான் வாதிட்டுப் பார்க்கின்றேன். அவர்கள் யாரும் என் வாதத்தை கேட்கும் மனநிலையில் கூட இல்லை.

எங்கு பார்த்தாலும் பாலியல் பிரச்சனைகள் தலைவிரித்து ஆடுகின்றன. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் ஏதாவது ஒரு நாள் பத்திரிகையிலோ டிவியிலோ இது போன்ற செய்திகள் வரும். ஆனால் தற்போது அது போன்ற செய்தி இல்லாத நாளே இல்லை எனலாம்.

இப்படத்திற்கு நான் இயக்குநர் மட்டும் இல்லை தயாரிப்பாளரும் கூட என்பதால் படத்தை எப்படியாவது ரீலிஸ் செய்துவிட வேண்டும் என முடிவு செய்து, அவர்கள் சொன்ன 109 கட்-களுக்கு உடன்பட்டு, எண்ட் கார்டை தூக்கி, டைட்டிலை பொள்ளாச்சி என்று வைக்காமல் மாற்றி, யூனியனில் மற்றொரு டைட்டிலை ரிஜிஸ்டர் செய்து, மீண்டும் சென்சார் சர்டிபிகேஷனுக்கு விண்ணப்பித்தேன்.

என்னுடைய கதைகள் எல்லாமே பெண்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் கதைகள் தான். என் அடுத்த படமும் பாலியல் பிரச்சனை சார்ந்தது தான். இயக்குநர் சங்கத்தில் அய்யா செல்வமணி சார் அவர்கள் 2500 கதைகளைக் கேட்டு அதில் 52 கதைகளை படமாக்க தேர்வு செய்து வைத்திருக்கிறார்கள். அதில் என்னுடைய கதையும் ஒன்று. அதில் 10 கதைகளை அய்யா ஐசரி கணேஷ் அவர்கள் தயாரிப்பதாக கூறி இருக்கிறார்கள். அவருக்கு நன்றி” என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நேசமுரளி அவர்கள் முற்போக்கான இயக்குநர். சொல்லப் போனால் இடதுசாரி சிந்தனையுள்ள இளைஞர். வணிக நோக்கில் படங்களை இயக்க வேண்டும் என்று நினைக்காமல், இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு படம், ஆனால் சமூகச் சிக்கல்கள் குறித்த உள்ளடக்கத்தை கொண்டிருக்கும் வகையில், இளைய, புதிய தலைமுறையினரை முற்போக்காக சிந்திக்கத் கூடிய உந்துதலை, தூண்டலை கொடுக்கும் திரைப்படங்களை கொடுக்க வேண்டும் என்கின்ற வேட்கை உள்ளவர்.

படமாக்கி பணமாக்க வேண்டும் என்பதல்ல அவரின் நோக்கம். அவர் உள்வாங்கி இருக்கும் அரசியல் கோட்பாடு தான் அவரை துணிவாக இருக்கும்படி இயங்கும்படி தூண்டிக்கொண்டும் இயக்கிக் கொண்டும் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

பொள்ளாச்சியில் நடந்தது அவ்வளவு குரூரமானது. அதனைத் தடுக்க நாம் என்ன செய்திருக்கிறோம். அதனை என்றால் அந்தப் போக்கினை அது போல் வளர்ந்து வரும் கலாச்சாரத்தினை. சமூக ஊடகம் வளர்ந்திருக்கும் இந்தக் காலச்சூழலில் இந்தப் போக்கு வளருவது எவ்வளவு ஆபத்தானது. எதிர்காலம் எத்தகையதாக இருக்கும் என்று நினைத்துப் பார்த்தால் நெஞ்சு பதறுகிறது. அப்படிப்பட்ட குரூரமான நிகழ்வை படைப்பாக்க வேண்டும் என்று முடிவு செய்தது துணிச்சலான முடிவு

90களில் ஒரு கவிதை எழுதினேன். ‘எதனையும் எதிர் கொள்ள இரு விழிப்பாய், இமயம் போல் தடை வரினும் எகிறிப் பாய்’ என்று. எதனையும் எதிர்கொள்வோம், அந்த துணிச்சல் நமக்குத் தேவைப்படுகிறது. பெரியார் சொல்வார், ‘நீ போராடிப் போராடி உரிமையை வென்றெடுப்பாய், பாராளுமன்றத்தில் பேசி அதற்கு பாதுகாப்பாக ஒரு சட்டத்தை இயற்றுவாய், ஆனால் நீ இயற்றும் சட்டமே செல்லாது என்று சொல்லுகிற இடத்தில் அவன் இருப்பான்’ என்று சனாதன சக்திகளை அப்போதே தோலுரித்துக் காட்டியவர் தந்தை பெரியார்.

ஆனாலும் கூட அதை எதிர்த்து நாம் போரிட வேண்டும் என்றால் வரலாற்றுப் பின்னணி தெரிந்திருக்க வேண்டும். எங்கு சனாதனம் இருக்கிறது என்று கேட்கிறார்கள் வரலாற்றுப் பின்னணி தெரியாதவர்கள். ஏன் சனாதனத்தை எதிர்க்க வேண்டும் என்கிறார்கள் வரலாற்றுப் பின்னணி தெரியாதவர்கள். ஏன் அந்தக் கட்சியினை வெறுக்கிறீர்கள் என்கிறார்கள் வரலாற்றுப் பின்னணி தெரியாதவர்கள்.ஆர்.எஸ்.எஸ் ஒரு இயக்கம் தானே..? அதை எதிர்த்து ஏன் பேச வேண்டும் என்று கேட்கிறார்கள் வரலாற்றுப் பின்னணி தெரியாதவர்கள். வரலாற்றுப் பின்னணி தெரிந்து கொண்டால் நிச்சயமாக இந்தக் கேள்விகளே எழாது. தனிப்பட்ட முறையிலே நமக்கு எந்த அரசியல் பகையுமே இல்லை. இது ஒரு கோட்பாட்டுப் பகை. கெளதம புத்தர் காலத்தில் இருந்து தொடரும் ஒரு யுத்தம் இது. இந்த யுத்தம் 2500 ஆண்டுகளாகத் தொடர்கிறது.

‘கற்பு பூமி’ என்பதில் என்ன சிக்கல் இருக்கிறது…? இதில் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை எங்கே உருவாகிவிடப் போகிறது. பெண்களுக்கு எதிரான குரூரம் இந்த மண்ணில் அரங்கேறி இருக்கிறது. அதை அம்பலப்படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு ஏன் 109 வெட்டுகள்?

ஏன் அவர்கள் அச்சப்படுகிறார்கள். நூற்றுக்கு நூறு இது கருத்தியல் சார்ந்த பகைதான். நேசமுரளி உள்வாங்கி இருக்கும் இடதுசாரி அரசியல் தான், அதாவது கம்யூனிஸ்ட் சிந்தனை அல்ல, வலதுசாரி சிந்தனைக்கு எதிரான எல்லாமே இடதுசாரி சிந்தனை தான். பழமைவாதத்திற்கு எதிரான, ஜனநாயகத்தைப் பேசும் அனைத்து சிந்தனையும் இடதுசாரி சிந்தனை தான். பன்மைத் தன்மையை பேசுபவை எல்லாம் இடதுசாரி சிந்தனை தான். இந்தப் படத்திற்காகவே நாம் ஒரு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இதை நீங்கள் முன்னெடுத்தால் கண்டிப்பாக நாங்கள் அனைவரும் அந்த ஆர்ப்பாட்டத்தில் வந்து பங்கெடுப்போம் என்று சொல்லி வாழ்த்தி விடை பெறுகிறேன்” என்றார்.

நிகழ்வில் நக்கீரன் கோபால், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி,
தமிழ்நாடு செய்தி வாசிப்பாளர் சங்கத் தலைவரும், மற்றும் சன் செய்திகள் பத்திரிகையாளருமான டாக்டர் எஸ்.என்.பிரபுதாசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், இந்திய மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், அகில இந்திய காங்கிரஸின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here