நடப்பது சைக்கோ கொலைகாரனின் வெறித்தனமான வெளிப்பாடு என்பதுபோல் துவங்கி, காட்சிகள் கடந்துபோக போக கிரைம் திரில்லர் ரூட்டுக்கு மாறுகிற திரைக்கதையில் ‘குற்றம் புதிது.’
காவல்துறை உயரதிகாரி ஒருவரின் இளவயது மகள் காணாமல் போக, சில ஆதாரங்களை வைத்து அவள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வருகிறது காவல்துறை. சந்தேகத்தின் பேரில் ஒரு இளைஞனை தட்டித் தூக்கும் காவல்துறை அவனிடம் விசாரிக்கும்போது, அந்த பெண்ணை கொன்றதாக ஒத்துக் கொள்ளும் அவன், சடலத்தை துண்டு துண்டாக்கி ஆற்றில் வீசியதாக வாக்குமூலம் தருகிறான். அது மட்டுமல்லாது ஸ்கூல் டீச்சர் ஒருவரையும், ஸ்கூல் ஃபிரெண்ட் ஒருவரையும் கொன்றதாக சொல்லி போலீஸாரை அதிர வைக்கிறான்.
அதை தொடர்ந்து நடக்கும் விசாரணையில், அவன் கொலை செய்ததாக சொன்ன டீச்சரும், நண்பனும் உயிருடன் இருப்பதாக தெரியவர, அவன் சொன்னது பொய் என்றாகிறது.
இந்த நிலையில் நம் மனதில் தோன்றுகிற அவன் அப்படி பொய் சொன்னதற்கான காரணம் என்ன? காணாமல் போன பெண்ணுக்கு என்னவானது? என்ற சிலபல கேள்விகளுக்கு பதில் தந்து கடந்தோடுகின்றன அடுத்தடுத்த காட்சிகள்…
முகத்தை அப்பாவித்தனமாக வைத்துக்கொண்டு போலீஸ் அதிகாரியை அங்கிள் என்றழைப்பது, அதே அப்பாவித்தனத்துடன் எப்படியெல்லாம் கொலை செய்தேன் என வாக்குமூலம் தருவது, கொலை செய்த உடலை அவேசமாக துண்டு தூண்டாக வெட்டி ரத்தச்சகதியில் குளிப்பது, தன்னை விரும்பும் பெண்ணிடம் காதல் உணர்வோடு நேரத்தைச் செலவிடுவது என பாஸ்மார்க் கொடுக்கலாம் எனும்படி நடிப்புப் பங்களிப்பை வழங்கியிருக்கிறார் அறிமுக நாயகன் தருண் விஜய்.
தான் பாத்ரூமில் இருந்தபோது போட்டோ எடுத்த அயோக்கியன் மீது கோபமாகப் பாய்வது, அந்த விவரமறிந்து வெறியேறிய தன் காதலனுடன் சேர்ந்து குற்றச் சம்பவத்தை செய்து முடிப்பது, அந்த தருணத்தில் ஏராளமான கொலைகளைச் செய்து உடல்களை அகற்றிய அனுபவம் உள்ளவர் போல் நடந்துகொள்வது, போலீஸ் அதிகாரியான தன் தந்தையிடம் நடந்த சம்வங்களை மறைத்து அவர் நம்பும்படி வேறுவிதமான கதை சொல்லி சமாளிப்பது என விழிகளால் பேசுகிற நாயகி ஜேஷ்விதா கனிமொழி தந்திருக்கும் நடிப்பு அவர் சார்ந்த காட்சிகளுக்கு நல்ல பொருத்தம்.
பக்கத்து வீட்டுக்கு வந்த பெண்ணை ஆபாசமாக போட்டோ எடுத்து ரசிப்பதோடு அவளை அனுபவிக்க ஆசைப்பட்டு ஆபத்தில் சிக்குகிற கேரக்டரில் போதுமான வில்லத்தனத்தை காட்டியிருக்கிறார் ராம்ஸ்.
மதுசூதன் ராவ் மகளைக் காணாத பதட்டத்தை வெளிப்படுத்துவதில் குறை வைத்தாலும் போலீஸ் அதிகாரியாக காட்டுகிற கம்பீரம் நிறைவாக இருக்கிறது. மற்றவர்கள் கதையின் போக்கிற்கு தங்களது நடிப்பால் நியாயம் செய்திருக்கிறார்கள்.
கரண் பி கிருபாவின் பின்னணி இசை சில காட்சிகளின் பரபரப்புக்கு விறுவிறுப்பு தருகிறது. சில காட்சிளில் அதீத சப்தமாக டெலிவரி ஆகியிருக்கிறது. ஜேசன் வில்லியம்ஸின் ஒளிப்பதிவு கச்சிதம்.
ஒரு இளைஞன் மூன்று கொலைகளைச் செய்ததாக சொல்வதிலிருந்து இடைவேளை வரை தீப்பிடித்த வேகத்துடன் திரைக்கதையை நகர்த்தியிருக்கும் இயக்குநர் நோவா ஆர்ம்ஸ்ட்ராங், கொலை எதற்காக நடந்தது, எப்படி நடந்தது என்பதை விவரிக்கும்போது ‘இதுக்காகத்தான் இத்தனை அக்கப்போரா?’, ‘இதுதான் குற்றம் புதிதா?’ என்ற சலிப்புணர்ச்சிக்குள் ஆடியன்ஸை தள்ளி விடுகிறார்.

