யானைக்கும் எளிய மனிதனுக்குமான பாசப்பிணைப்போடு அழகிய காதலையும் கலந்துகட்டி பிரபு சாலமன் இயக்கிய ‘கும்கி’க்கு கிடைத்த வரவேற்பு வரலாறாக நிலைத்திருக்கிறது. அந்த கும்கி’க்கு தொடர்பில்லாத வேறொரு கதையாக விரிகிறது ‘கும்கி 2.’
பூமி சிறுவனாக இருக்கிறபோது, தாயை இழந்து தவிக்கும் ஒரு யானைக் குட்டிக்கு ஆதரவளிக்கிறான்; நிலா என பெயர் சூட்டி பாசமாக வளர்த்து ஆளாக்குகிறான். மதி இளைஞனாகிவிட்ட, நிலா 20-வது வயதை எட்டிவிட்ட காலகட்டத்தில், அரசியல் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக ஒரு கும்பல் நிலாவை பலியிட திட்டமிடுகிறார்கள். பூமி துடித்துப் போகிறான். நிலாவைக் காப்பாற்ற களமிறங்குகிறான். அந்த களப்பணியில் அவன் சந்திக்கும் சவால்கள், கஷ்ட நஷ்டங்கள் காட்சிகளாக விரிய நிலாவை பூமியால் காப்பாற்ற முடிந்ததா இல்லையா என்பது கிளைமாக்ஸ்…
உயிருக்குயிராக வளர்த்த யானை காணாமல் போனபோது காட்டுகிற பரிதவிப்பு, யானையை மீண்டும் காணும்போது காட்டுகிற பரவசம் என கதைநாயகன் பூமியாக வருகிற மதியின் நடிப்புக்கு பாஸ்மார்க் தரலாம்.
யானையை மீட்பதற்கான போராட்டத்தில் அவரது பங்கு குறைவாக இருக்க, கொலைவெறிக் கும்பலின் தாக்குதல்களில் இருந்து அவரைக் காப்பாற்றும் பொறுப்பை நிலாவாக வருகிற யானை மீது ஏற்றியிருக்கிறது திரைக்கதை. அந்த யானை வளர்த்தவன் மீது பாசத்தைப் பொழிந்து, தன்னிடமிருக்கும் பந்துவீச்சுத் திறமையைப் பயன்படுத்தி தன்னைப் பலியிட வட்டமிடுபவர்களை சிக்ஸராக சுழற்றியடித்து தன் பொறுப்பை சரியாக செய்துமுடிக்கிறது. விசிலடிப்பது, ஓவியம் வரைந்து அனிமல் பிகாஸோவாக புகழ் பெறுவது என நிலாவை ரசிக்க இன்னும் சில காட்சிகளும் படத்தில் உண்டு.
இடைவேளைக்குப் பிறகு என்ட்ரி கொடுத்து என்ட் கார்டு போடும்வரை வருகிற அர்ஜுன்தாஸ் அரசியல்வாதியின் சதித்திட்ட அரங்கேற்றத்துக்கு துணைநிற்கிற நபராக அலட்டலில்லாத வில்லத்தனத்தை அரங்கேற்றியிருக்கிறார்.
ஆரம்பக் காட்சியில் பூமியாக வருகிற சிறுவன் யானையை பள்ளத்திலிருந்து மீட்பது, அதற்கு மிட்டாய் வாங்கிக் கொடுப்பது என நீள்கிற காட்சிகளில் இருக்கிற உயிரோட்டம் படத்தின் பலம்.
ஹீரோவின் அம்மாவாக கரடுமுரடான பெண்மணியாக வந்து கவனம் ஈர்க்கும்படி நடித்து நகர்கிறார் மைனா சூசன்.
யானையை பலிகொடுத்து பதவியை தக்கவைக்க நினைக்கும் முதலமைச்சராக வின்சென்ட் பெராரா, அவரது குற்றச் செயல்களுக்கு உதவி செய்கிற காவல்துறை அதிகாரியாக ஹரீஷ் பெராடி என இன்னபிறரின் நடிப்பு கச்சிதம்.
ஹீரோவுக்கு காதல், காதலியுடன் டூயட் அதுஇதுவென எதையும் நுழைக்காமல் கதையை நேர்க்கோட்டில் நகர்த்த நினைத்தது நல்ல விஷயம்தான். அதற்கேற்ப அழுத்தமான காட்சிகள் இல்லாதது படத்தை பலவீனமாக்கியிருக்கிறது.
பலியிடத் துடிப்பவர்களிடமிருந்து தான் வளர்த்த யானையை காப்பாற்ற போராடும் இளைஞன் என்கிற கதையில் கடந்த ஓராண்டில் ‘ராஜபீமா’, ‘படை தலைவன்’ என ஒருசில படங்கள் வந்துள்ள நிலையில் அதன் ஜெராக்ஸாக வந்துவிழுகிற காட்சிகள் அலுப்பு சலிப்பு தருகின்றன.

