பாஷாவை வளர்த்து வாடிவாசலில் இறக்கினேன்! -‘குடிமகான்’ பட விழாவில் நடிகை ஷீலா ராஜ்குமார் பேச்சு

நாளைய இயக்குநர் சீசன் 6-ல் ‘குட்டி தாதா’ என்கிற குறும்படத்திற்காக ரன்னர் அப் டைட்டில் வென்ற பிரகாஷ். என் இயக்கும் முதல் திரைப்படம் ‘குடிமகான்.’

சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் இந்த படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ளார் விஜய் சிவன். சாந்தினி தமிழரசன் கதாநாயகியாக நடித்துள்ளார். பிக்பாஸ்’ சுரேஷ் சக்கரவர்த்தி, நமோ நாராயணன், சேது, விஜய் டிவி’ கேபிஒய் ஹானஸ்ட் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்கள் தவிர நாளைய இயக்குநர்கள் சீசன்-6 டீமில் பணியாற்றிய கலைஞர்கள் பலரும் இதில் நடித்துள்ளனர்.

கடந்த மாதம் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை இயக்குநர்கள் வெற்றிமாறன், அருண்ராஜா காமராஜ், பொன்ராம் உள்ளிட்ட பிரபல இயக்குனர்கள் வெளியிட்ட நிலையில், இந்தப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை வடபழனி ஃபோரம் மால் திறந்தவெளி அரங்கில் பொதுமக்கள் மத்தியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சதீஷ், நடிகைகள் ஷீலா ராஜ்குமார், கோமல் சர்மா, ஜிபி முத்து மற்றும் யூட்யூப் புகழ் இரட்டையர்களான அருண் – அரவிந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் விஜய் சிவன் பேசும்போது, “நாளைய இயக்குநர் மூலம் என்னை அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் பிரகாஷ். கொரோனா காலகட்டம் ஆரம்பித்த சமயத்தில் தான் இந்த படம் பற்றி பேச துவங்கினோம். லாக்டவுன் ஒரு பக்கம் இருந்தாலும் தினந்தோறும் தவறாமல் கதைபேசி இந்த ஸ்கிரிப்டை உருவாக்கினோம். குறிப்பாக டீக்கடையில் நாங்கள் மூவரும் சந்தித்து பேசி அப்படி உருவானது தான் இந்த குடிமகான் கதை” என்றார்.

இயக்குநர் பிரகாஷ் பேசும்போது, “நட்பு நம்பிக்கை இரண்டையும் அடிப்படையாக வைத்து தான் இந்த படம் உருவாகி இருக்கிறது. நாளைய இயக்குநர் சமயத்தில் என்னுடன் பணியாற்றிய குழு அப்படியே இந்த படத்திலும் பணியாற்ற வேண்டும் என நினைத்தேன். இந்த படத்தில் குடி என்பது ஒரு பகுதி மட்டும்தான். மற்றபடி கமர்சியல் அம்சங்கள் நிறைந்ததாக தான் இந்த படம் உருவாகியுள்ளது. குடும்பத்தினருடன் இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம்” என்றார்.

நடிகை ஷீலா ராஜ்குமார் பேசும்போது, “நான் நடித்த பேட்டக்காளி வெப் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பார்த்தவர்கள் அனைவரும் என்னை அவர்கள் வீட்டில் ஒருவராக நினைத்து ஏற்றுக்கொண்டதை நான் மிகப்பெரிய பொறுப்பாக உணர்கிறேன். அதில் பேட்டக்காளி என்கிற ஜல்லிக்கட்டு மாடு வளர்க்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நான், இரண்டு நாட்களுக்கு முன்பு தான் நானே வளர்த்த என்னுடைய மாட்டை வாடிவாசலில் இறக்கினேன். அந்த மாட்டின் பெயர் பாஷா.

இந்த குடிமகன் படத்தில் நானும் நடித்திருக்க வேண்டியது. ஆனால் பேட்டக்காளி வெப் தொடருக்கு மொத்தமாக என்னுடைய கால்ஷீட்டை கொடுத்து விட்டதால் இதில் என்னால் நடிக்க முடியாமல் போனது,. அதற்காக இந்த இடத்தில் இயக்குனர் பிரகாஷிடம் எனது வருத்தத்தை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

ஜி.பி முத்து பேசும்போது, “இந்த படத்தின் டிரெய்லரை பார்த்தேன். ரொம்பவே எதார்த்தமாக இருக்கிறது. அதனாலேயே இந்த படம் வெற்றி பெறும்” என்றார்.

நடிகர் சதீஷ் பேசும்போது, “தண்ணி, தம் அடிக்காத டீ-டோட்டலர் என்பதால் என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து இருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதற்காக நானும் இங்கே அறிவுரை சொல்ல நினைத்தேன்.. ஆனால் டிரெய்லரில் அதை சரியாக சொல்லியிருக்கிறார்கள். பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவர்கள் அந்த வயதில் மதுப்பழக்கத்திற்கு ஆளாகாமல் இருந்தால் அதன்பின் அதை நாம் தொடவே மாட்டோம்.. நான் அப்படித்தான் இவற்றில் இருந்து ஒதுங்கினேன்.

இதுபற்றி சில கல்லூரி நிகழ்ச்சிகளில் நான் பேசியிருக்கிறேன். ஒரு பெண்கள் கல்லூரியில் கலந்து கொண்டபோது கூட இதே விஷயத்தை வலியுறுத்தி பேசும்படி அந்த கல்லூரியின் முதல்வர் கேட்டுக் கொண்டது தான் வேடிக்கை.. ஏன் என கேட்டதற்கு ஆண்களுக்கு சமமாக இந்த விஷயத்தில் பெண்களும் வளர்ந்து வருகிறார்கள் என கூறினார். ஆண்களும் பெண்களும் ஒருபோதும் சமமானவர்கள் அல்ல.. பெண்கள் ஆண்களைவிட இன்னும் கொஞ்சம் மேலானவர்கள் தான்.. சொல்லப்போனால் பெண்கள் தெய்வத்திற்கு சமம்” என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here