நாடகக் காதல், ஆணவக் கொலை என பார்த்துப் பழகிய கதைக்களத்தில் நுட்பமான அரசியல் கலப்போடு ‘காடு வெட்டி.’
அந்த கிராமத்தில் அந்த இளம்பெண் தாழ்த்தப்பட்ட சமூகத்து இளைஞனைக் காதலித்த காரணத்துக்காக ஊர்ப் பஞ்சாயத்து கூடுகிறது. அந்த பஞ்சாயத்து சம்பந்தப்பட்ட பெண்ணை கொன்றுவிடச் சொல்லி அவளது தகப்பனுக்கு கட்டாய உத்தரவு பிறப்பிக்கிறது. அவரும் அந்த பாதகச் செயலைச் செய்ய முன்வருகிறார்.
இப்படி வலிகளைச் சுமந்து நகரும் கதையில் அந்த பெண்ணைக் காதலித்தவன் ஒரு மோசமான ஆசாமியின் கையாள் என்பதும், அந்த ஆசாமி சொன்னதன் பேரிலேயே அவன் அவளைக் காதலித்தான் என்பதும் தெரியவருகிறது.
இன்னொரு பக்கம் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களின் தலைவனாக, பாதுகாவலனாக இருக்கிற ஒருவரின் தளபதியாக ‘குரு’ என்ற பெயரோடு மஞ்சள் சட்டைக்காரராக வலம் வருகிறார் ஆர் கே சுரேஷ். மனிதாபிமானமற்ற ஆண்களால் பாதிப்புக்கு ஆளாகும் பெண்களை மீட்டெடுத்து நல்வாழ்க்கை அமைத்துக் கொடுப்பது அவரது வேலையாக இருக்கிறது. அந்த வேலைக்காக அடிதடி வெட்டுக்குத்து என களமிறங்கி சிறைக்குப் போவதும் வருவதுமாக அவரது வாழ்நாள் கழிகிறது.
காதலித்ததை குற்றமாக கருதி ஊரேகூடி ஒரு பெண்ணை கொல்ல முடிவெடுத்த விவகாரத்தில் குரு தலையிட முடிந்ததா இல்லையா என்பது கதையோட்டம்… இயக்கம் சோலை ஆறுமுகம்
கிராமத்துச் சூழலில் சாதி மாறி காதலிப்பவர்கள் என்ன மாதிரியான சிக்கல்களைச் சந்திக்கிறார்கள் என்பதை எடுத்துச் சொல்லியிருப்பதோடு, அதே காதலர்கள் நகரத்துவாசியாக இருந்தால் அவர்கள் அடுத்த கட்டத்துக்கு எப்படி நகர்கிறார்கள் என்பதை அதே ஜோடியை வைத்து காட்சிப்படுத்தியிருப்பது இயக்குநரின் தனித்துவ அணுகுமுறை.
குருவாக ஆர் கே சுரேஷ். அடிதடியில் ஆவேசப் பாய்ச்சல் நிகழ்த்துவது, கொடியவர்களை கொலை செய்யத் தயங்காதது என நீளும் காட்சிகளில் சிங்கமாய் சிறுத்தையாய் முறுக்கேறி திரிபவர் சென்டிமென்ட் காட்சிகளில் இதமான மனிதராக மாறி பதமான நடிப்பைத் தந்திருக்கிறார். அவருடையது ஒரு குறிப்பிட்ட சமூக மக்களின் தலைவனுடைய விசுவாசமான தளபதியாய் சித்தரிக்கப்பட்ட கதாபாத்திரம்தான் என்றாலும், அந்த கதாபாத்திரத்தின் செயலும் நோக்கமும் ‘நல்ல மக்கள் அனைவருக்கும் நான் தோழனே’ என்பதுபோல் மனதுக்கு நெருக்கமாக இருப்பதை குறிப்பிடாமல் விட முடியாது.
குறிப்பிட்ட சமூகத்தின் தலைவராக ஏ எல் அழகப்பன், காதல் ஜோடியாக அகிலன், சங்கீர்த்தனா, மகளையே கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகிற பரிதாபத்துக்குரிய அப்பாவாக சுப்ரமணிய சிவா, ஆர் கே சுரேஷின் மனைவியாக வருகிற விஸ்மயா என கதையின் முக்கிய பாத்திரங்களை ஏற்றிருப்போர் அந்தந்த பாத்திரங்களுக்கு உயிரூட்டியிருக்க, மற்ற கதாபாத்திரங்களில் வருகிறவர்களும் கதையின் தன்மையுணர்ந்து பங்களித்திருக்கிறார்கள்.
வணக்கம் தமிழா சாதிக் இசையில், தேவாவின் குரலில் ‘வீரப் பரம்பரைடா’ பாடலில் உணர்ச்சியும் உற்சாகமும் ததும்பி நிற்க, ‘தேனோடு கரும்புச் சாறு ஊட்டுவேன்டி நிலாச் சோறு’ பாடல் புத்துணர்ச்சி தருகிறது.
எம்.புகழேந்தியின் ஒளிப்பதிவு, ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை படத்தை தாங்கிப் பிடித்திருக்கின்றன.
இந்த கதை யாரை மனதில் வைத்து, எதை மனதில் வைத்து உருவாக்கப் பட்டிருக்கிறது? எதற்காக எடுக்கப்பட்டிருக்கிறது? என்பதெல்லாம் புரிய வேண்டியவர்களுக்கு நன்றாகவே புரியும். அதையெல்லாம் தாண்டி படத்தை படமாக பார்க்கும்போது, ‘இந்த மாதிரி படமெடுக்கிற ஆசாமியெல்லாம் கொஞ்ச நாளாச்சும் ஓய்வெடுங்கப்பா’ என்று கெஞ்சத் தோன்றுகிறது.
காடுவெட்டி, வேலை வெட்டியில்லாவிட்டால் பார்க்கலாம்!