என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக முனீஸ்காந்த் நடித்திருக்கும் படம். ஹீரோவாகவும் வில்லனாகவும் நட்டி நட்ராஜ் நடித்திருக்கும் படம்.
அப்போ ஹிப்ஹாப் ஆதி?
அவர், படத்தை இயக்கியிருக்கிறார், பாடல்களை எழுதியிருக்கிறார், இசையமைத்திருக்கிறார், படம் முழுக்க பாடியிருக்கிறார். படத்தை தயாரித்தும் இருக்கிறார்.
அவ்வளவுதானா?
இல்லையில்லை… கதைப்படி உலகப் போரிலிருந்து நாட்டைக் காப்பாற்றவும் செய்கிறார்.
நாட்டைக் காப்பாற்றுகிறார் என்றால் அவர்தானே ஹீரோ?
ம்… ஆமாம், மறுக்க முடியாதுதான்… அவர்தான் ஹீரோ.
சரி அதெல்லாம் இருக்கட்டும். கதை?
உலகப்போர் உருவாகிறது. (ஏன் உருவாகிறது, யாரால் உருவாகிறது என்பதையெல்லாம் சொன்னால் ஏழெட்டுப் பேராக்கள் தேவைப்படும். ஆகவே அதெல்லாம் வேண்டாம்.) உலகப் போரை உருவாக்கி நாடுகளைக் கைப்பற்றும் சக்தி கொண்டவர்கள் தமிழ்நாட்டையும் கைப்பற்றுகிறார்கள். தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களிடம் சரணடைய, அதற்கு சன்மானமாக உயரிய பதவியைக் கொடுத்து தங்கள் கஸ்டடியில் வைத்துக் கொள்கிறார்கள். மக்களையெல்லாம் தாறுமாறாக கொல்கிறார்கள்.
அவர்களின் பிடியில் சிக்கும் இளைஞன் தமிழரசன், அடிபட்டு மிதிபட்டு ரத்தம் சிந்தி உயிர் பிழைக்கிறான். அப்படி பிழைத்த அவன், தான் வசிக்கிற இடத்திலிருக்கிற மக்களைக் காப்பாற்றவும் தன் மக்களைக் கொன்றழிப்பவர்களை ஒட்டுமொத்தமாக ஒழிக்கவும் திட்டமிடுகிறான். அந்த திட்டத்தை செயல்படுத்தும்போது அவன் படும் கஷ்ட நஷ்டங்கள், ஏற்படுகிற இழப்புகள் என காட்சிகள் பரபரப்பாக கடந்தோட, போர் முடிவுக்கு வந்ததா இல்லையா என்பதே கிளைமாக்ஸ்.
தமிழரசனாக ஹிப்ஹாப் ஆதி. முதலமைச்சரின் மகள் மனதில் இடம்பிடிப்பதிலிருந்து விதவிதமாக யுக்திகள் வகுத்து எதிரிகளை துவம்சம் செய்வதுவரை வழக்கம்போல் சுறுசுறுப்புத் திலகமாக களமாடியிருக்கிறார்.
நாயகி அனகாவுக்கு கதாநாயகனை காதலிக்கிற வேலைதான் என்றாலும் முதலமைச்சரின் மகளாக, அமைச்சராக வலம் வருவதால் கவனம் பெறுகிறார்.
தன் மாமா, மக்கள் செல்வாக்கை சம்பாதித்த முதலமைச்சராக இருந்தாலும் அவரையே தன் கைக்குள் வைத்திருக்கும் ஆளுமையாக, சூழ்ச்சியின் அத்தனை நீள அகலங்களும் தெரிந்தவராக, சூழ்ச்சிகளால் காரியம் சாதிக்கும் ஆற்றல் கொண்டவராக நட்டி நட்ராஜ். ஏற்ற பாத்திரத்துக்கு கச்சிதமான நடிப்பால் பலம் சேர்த்திருக்கிறார்.
கதை சீரியஸாக போய்க் கொண்டிருக்கும்போது, நகைச்சுவை என்ற பெயரில் என்னென்னவோ செய்கிறார் ஷாரா. சிலவற்றை மட்டுமே ரசிக்க முடிகிறது.
முதலமைச்சராக நாசர். சந்தர்ப்ப சூழலால் சதிகாரர்களின் பிடியில் சிக்கினாலும், மக்களுக்கு விசுவாசமாக இருப்பதை நோக்கமாக கொண்டிருக்கிற அவரது கதாபாத்திரம் மதிக்கும்படியிருக்கிறது. அவரது நடிப்பில் எப்போதும்போல் நேர்த்தி இருக்கிறது.
ராணுவ உயரதிகாரியாக வருகிற ஹரிஷ் உத்தமனிலிருந்து காவல்துறை உயரதிகாரியாக வருகிற கல்யாண் மாஸ்டர் வரை இன்னபிற நடிகர்கள் தங்கள் பங்களிப்பை சரியாக செய்திருக்க, சிங்கம்புலி அச்சுப்பிச்சு காமெடிக்கு உதவியிருக்கிறார்.
பாடல்கள் மனதில் தங்குவது சந்தேகம். பின்னணி இசை பரபரப்பான காட்சிகளுக்கு ஓரளவு விறுவிறுப்பு தந்திருக்கிறது.
உலகப் போர் உருவாவதன் பின்னணி, தமிழ்நாட்டைக் கைப்பற்றும் ‘ரிபப்ளிக்’ பிரிவினர் அதுஇதுவென நீள்கிற காட்சிகளில் என்ன நடக்கிறது, ஏது நடக்கிறது என்பது பலருக்கும் புரிவது சிரமம்.
உலகப் போர், அதன் ஆபத்துகள் என கனமான விஷயங்களை யோசித்த இயக்குநர் ஆதி, அதற்கான காட்சிகளை நாடகத்தனமாக பதிவு செய்திருப்பதால்,
படம் பார்த்து வெளிவரும் ரசிகர்கள், ‘கடைசி உலகப்போர் செம போர்’ என்று சொல்வதையும், ‘கடைசி உலகப்போர் அக்கப்போர்’ என்று சொல்லி ஆதங்கப்படுவதையும் ஏற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்!