‘கல்லறை’ சினிமா விமர்சனம்

எளிமையான பொருட்செலவில், புதுமுகங்கள் நடிக்க திகில் திரில்லராக எழு(த)ப்பட்டிருக்கும் ‘கல்லறை.’

அந்த பணக்காரருக்கு இரண்டு மகள்கள். அதில் இளவயது மகள் போதைக்கு அடிமையாகி ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொண்டிருக்க, அதற்கான சிகிச்சைக்கு ஒருவித போதை உணவுப் பொருள் தேவைப்படுகிறது. ஆனால், அந்த பொருள் மற்ற மருந்து மாத்திரைகளைப் போல் மெடிக்கல் ஷாப்களில், மருத்துவமனைகளில் கிடைக்காது என்பதும், கடத்தல் அது இதுவென சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுகிறவர்கள் மூலம் கிடைக்கும் என்பதும் தெரிய வருகிறது.

மகளை காப்பாற்ற எதையும் செய்யத் தயாராக இருக்கிற அந்த பணக்காரர், குற்றச் செயல்களில் ஈடுபடுகிற ஒரு நபரை அணுகுகிறார். அவர் மூலம் தேவையான பொருள் கிடைக்கிறது. அதை கொண்டு வந்து கொடுக்க மூன்று பேர் வீட்டுக்கு வருகிறார்கள். அப்படி வந்தவர்களும் சிகிச்சைக்கு காத்திருக்கும் பெண்ணும் அந்த வீட்டுக்குள்ளிருக்கும் அமானுஷ்ய சக்தியின் பிடியில் சிக்குகிறார்கள். அதன்பின் அவர்களுக்கு என்னவானது என்பதே மீதிக் கதை, பீதிக் கதை…

ஒரு இடத்தில் பேய், பிசாசு சுற்றுகிறது என்றால் கண்டிப்பாக ஒரு அதிர வைக்கும் பிளாஷ்பேக் இருக்கும். இந்த படத்திலும் இருக்கிறது. இயக்கம் ஏ பி ஆர்

மகள்கள் இருவரில் மூத்தவரின் நண்பனாக இருந்து காதலனாகிற ரமேஷ், காவல் துறை அதிகாரியாக அளவாக கெத்து காட்டுகிறார். அந்த கதைக்களத்துக்கு அதுவே போதுமானதாக இருக்கிறது.

மகள்களில் மூத்தவரான தீப்தி ஜவான் உடலளவில் சற்றே அகலமாக இருந்தாலும், அழகிலும் நடிப்பிலும் குறையில்லை.

பாசமான அப்பாவாக ஏற்கனவே சீரியல்கள், திரைப்படங்கள் மூலமாக பரிச்சயமான தேர்ந்த நடிகர் பாரதி மோகன். அவரையறியாமல் அவரால் உயிரிழந்தவர்கள் ஆவிகளாகி பழி வாங்கும் படலத்தில், அவரது மகள் பலியாகிறபோது கதறித் துடிப்பது நெகிழ்ச்சி!

பேய், பிசாசு, தொடர் மர்ம மரணங்கள், காவல்துறை விசாரணை என சீரியஸாக சுற்றிச் சுழலும் கதையோட்டத்தின் இறுக்கத்தை அந்த இரண்டு போலீஸ்காரர்களின் அலம்பல் சலம்பல் கொஞ்சம் தளர்த்துகிறது.

ரதி ஜவகர், டி.ஜவஹர் ஞானராஜ்,
வி.யசோதா, பிரேம பிரியா, ரோஷிலா, சுரேந்தர் ஹரிஹரன், புதுப்பேட்டை சுரேஷ், ராம் ரஞ்சித், நந்தகுமார், அஜய் சுரேஷ் என மற்ற கேரக்டர்களில் வருகிறவர்கள் அவரவர் வேலையை சரியாகச் செய்திருக்கிறார்கள்.

கதை நடக்கும் குளிர்ப் பிரதேசத்தின் அழகை தன்னால் முடிந்தவரை கேமராவால் வாரியணைக்க முயற்சித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரித்வி ராஜேந்திரன்.

‘ஒன்னோட வாழணும்னு ஆசைதான்’, ‘அடி எனக்கொரு ஆசை உங்கூட பேச’ பாடல்களில் தென்றலின் இதம் தந்திருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.கே ராம்ஜி. ‘புள்ளிமானை புலியுமிங்கே’ பாடல் படத்தின் கதையைச் சொல்கிறது.

திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் பரபரப்பேற்றி, பிளாஷ்பேக் காட்சிகளில் விறுவிறுப்பு கூட்டியிருந்தால் ‘கல்லறை’யை வைத்து பெரிதாய் கல்லா கட்டியிருக்கலாம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here