நாலுபேரு நாலு விதமா பேசும்படி, இதெல்லாம் சரியா தவறா என விவாதிக்கும்படியான படம். நான்கு பெண்களின் நான்கு விதமான கதைகள் ‘ஆந்தாலஜி’ ஸ்டைலில் அடுக்கப்பட்ட படைப்பு.
பெற்றோரால் திருமணம் தடைபடுகிற ஒரு பெண் சந்திக்கிற சம்பவங்களின் தொகுப்பாக ஒரு கதை.
ஆண்மையற்ற கணவருடனான விவாகரத்து வழக்கில் ஒரு பெண் தன் சார்பில் வாதாடவரும் வழக்கறிஞரையே வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்ள முடிவெடுக்கிற கதை.
ஐடி பணியிலிருக்கிற ஒரு பெண் காதல், கல்யாணம் என்கிற வட்டத்துக்குள் சிக்க விரும்பாமல், லிவிங் ரிலேசன்ஷிப்பில் இனிமை காண நினைத்து பலரோடு உறவு கொண்டு நிம்மதியை தொலைக்கிற ஒரு கதை.
இன்னொரு பெண் லிவிங் டு கெதர் வாழ்க்கையில் கர்ப்பமாகி, அதை கலைக்க நினைத்து சிலபல சிக்கல்களை சந்திக்கிற ஒரு கதை.
அவரவர் நியாயம் அவரவர்க்கு என்பதுபோல் கதாபாத்திரங்களின் விருப்பு வெறுப்புகளுக்கு நியாயம் சேர்த்திருக்கிறது திரைக்கதை. இயக்கம் யஷ்வந்த் கிஷோர்
நான்கு கதைகள் அம்மு அபிராமி, வித்யா பிரதீப், கீர்த்தி பாண்டியன், ஷாலின் ஜோயா என நான்கு பேர் மீது பயணிக்க, நான்கு பேருமே கதாபாத்திரத்தின் தன்மையுணர்ந்து நடித்திருக்க பொள்ளாச்சி கிராமத்துப் பெண்ணாக அம்மு அபிராமியின் நடிப்பில் கூடுதல் உயிரோட்டம் தெரிகிறது.
பெண்களை மையப்படுத்திய இந்த படத்தில் தனித்து தெரியும் விதத்திலான மயில்சாமியின் உணர்வுபூர்வமான நடிப்புக்கு மதிப்பெண்களை வாரி வழங்கலாம்.
கணவன், காதலன், வழக்கறிஞர் என இன்னபிற நடிகர்களின் நடிப்புப் பங்களிப்பு நிறைவு. மெளனிகாவின் நடிப்பு பரவாயில்லை.
நான்கு கதைகளும் வெவ்வேறு விதமாக பயணிக்க அதனதன் தன்மைக்கேற்ப காட்சிகளை பலப்படுத்த உதவியிருக்கிறது ஷான் ரஹ்மானின் பின்னணி இசை.
ஆந்தாலஜி பாணியிலான கதையோட்டத்தை நேர்த்தியாக கொண்டு செல்ல சரத்குமாரின் கச்சிதமான படத்தொகுப்புக்கு பெரும் பங்கிருக்கிறது.
எடுத்துக் கொண்ட கனமான கதைக்கு இன்னும் சற்று கனமான திரைக்கதை பின்னியிருக்கலாம்!