பாட்டி வைத்தியம், இயற்கை மருத்துவம், சித்த மருத்துவம் என்றெல்லாம் வகை பிரிக்கப்பட்டிருக்கிற நமது பாரம்பரிய மருத்துவத்தின் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்லும் திரைப்படங்கள் ஏழாம் அறிவாய் எப்போதாவது தமிழில் எட்டிப் பார்ப்பதுண்டு. இப்போது ‘கன்னி‘யாய் களம் கண்டிருக்கிறது.
காடும், மலையும் சூழ்ந்த பகுதியில் ஒரு பாட்டியம்மாள் மக்களின் உடல்நலப் பிரச்சனைக்கு மூலிகை வைத்தியம் செய்து குணப்படுத்தி வருகிறார். அந்த வைத்தியத்துக்கு அவருடன் இறை சக்தியும் துணை நிற்கிறது. அந்த வகையில் பெரும் பணக்காரர் ஒருவரின் தீர்க்க முடியாத வியாதியை பாட்டியின் வைத்தியம் தீர்த்து வைக்க, அந்த வைத்தியத்தின் சூத்திரத்தை (Formula) அபகரிக்க வெளிநாட்டு கார்ப்பரேட் களவாணிகள் முயற்சி செய்கிறார்கள். அந்த சதித் திட்டத்துக்கு உள்ளூர் அயோக்கியப் பேர்வழிகளைப் பயன்படுத்துகிறார்கள்.
இப்படி நகரும் கதையில், திட்டமிட்டபடி சூத்திரத்தை அவர்களால் அபகரிக்க முடிந்ததா இல்லையா என்பது கிளைமாக்ஸ்… இயக்கம் மாயோன் சிவா தொரப்பாடி
கதையோட்டத்தின் பெரும்பகுதியை, மூலிகை வைத்தியம் செய்கிறவரின் மகளாக வருகிற அஸ்வினி சந்திரசேகர் ஆக்கிரமித்திருக்கிறார். அடர்ந்த காட்டுக்குள், இருளில் அவர் தன் அண்ணனின் மகள்களை கூட்டிக்கொண்டு மலையேறும் ஆரம்பக் காட்சியே மிரட்சி தருகிறது. வில்லன்களிடம் உறவுகளைப் பறிகொடுத்து, உயிர் தப்பிக்கப் போராடும்போது கரடு முரடான காட்டுப் பகுதியில் தாறுமாறாய் ஓடுவது, தடுமாறி விழுவது என நீளும் காட்சிகளில் உடலை வருத்திக் கொண்டு உழைத்திருக்கிறார்.
மூலிகை வைத்தியராக வருகிற மாதம்மா வேல்முருகன், அவருக்கு மகனான வருகிற மணிமாறன் ராமசாமி, மருமகளாக தாரா க்ரிஷ் என இன்ன பிற பாத்திரங்களில் வருகிறவர்களின் நடிப்பு பரவாயில்லை ரகம்.
மக்கள் வசிக்காமல் ஏகப்பட்ட எளிமையான வீடுகள் சிதிலமடைந்து கிடக்க, ஒருசில குடும்பங்கள் மட்டுமே வாழ்கிற கதை நிகழ்விடம் (இப்படியான வாழ்விடங்களை பேச்சில்லா கிராமம்’ என்று சொல்வதுண்டு) தமிழ் சினிமாவுக்கு புதிது. அதையும், காடு மலை என சுற்று வட்டத்தையும் அதன் தன்மை மாறாமல் கழுகுப் பார்வையில் காட்சிப்படுத்தியிருக்கிற ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் பெரியசாமியை தாராளமாகப் பாராட்டலாம்.
சமூக அக்கறையை உள்ளடக்கிய கதைக்கருவை எடுத்துக் கொண்ட இயக்குநர் ஆன்மிகம், மர்மம் என திரைக்கதையின் போக்கை மனம்போன போக்கில் அமைத்திருப்பது கண்டிப்பாக வித்தியாசம்தான். மறுப்பதற்கில்லை. அந்த வித்தியாசம் சிலரை மட்டும் கவரலாம்.
திரைக்கதையில் கமர்சியல் அம்சங்களை கொஞ்சமேனும் தொட்டிருந்தால், கன்னி பெரும்பாலான மக்களின் மனதை எட்டியிருப்பாள்.