‘கட்டில்’ சினிமா விமர்சனம்

உணர்வுபூர்வமான கதையும் உருக்கமான திரைக்கதையும் சங்கமித்ததில் கருவாகி உருவாகியிருக்கும் ‘கட்டில்.’

வீட்டில் நாம் புழங்கும் பொருட்கள் சிலவற்றின் மீது இனம்புரியாத பற்றுதல் உருவாகிவிடுவது சகஜம். அப்படி, அந்த குடும்பத்தின் கடைக்குட்டி பிள்ளை கணேசனுக்கு தங்கள் வீட்டில் 250 வருடங்களாக இருந்துவரும் கட்டில் மீது பிரியம் உருவாகிவிடுகிறது.

ஒரு கட்டத்தில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவரும் வீட்டிலிருந்து வெளியேறும் கட்டாயத்துக்கு தள்ளப்பட கட்டிலையும் இழக்க வேண்டிய சூழ்நிலை.

அந்த சூழ்நிலையை மாற்ற அவன் முயற்சிக்கிறான். அந்த முயற்சிகளில் சிலபல அவஸ்தைகளை, விபரீதங்களை சந்திக்கிறான். அதையெல்லாம் சமாளித்து அவனால் கட்டிலை தக்க வைக்க முடிந்ததா இல்லையா என்பதே கிளைமாக்ஸ். இந்த கதையில் போகிறபோக்கில் சாதி மத நல்லிணக்கம், தொழிற்சங்கப் போராட்டம் என சிலவற்றையும் கட்டியணைத்திருக்கிறது திரைக்கதையோட்டம்…

கதை, திரைக்கதை, வசனம் எடிட்டர் பி. லெனின்.

படத்தை இயக்கியிருக்கிற இ.வி. கணேஷ்பாபு மூன்று தலைமுறை கதாபாத்திரங்களில் வருகிறார். முடிந்தவரை இயல்பாக நடிக்க முயற்சித்திருக்கிறார்.

நாயகனுக்கு மனைவியாக கருவில் சிசுவை சுமந்தபடி வருகிற சிருஷ்டி டாங்கே நெகிழ வைக்க, நாயகனுக்கு அம்மாவாக வருகிற கீதா கைலாசம் நேர்த்தியான நடிப்பைக் கொடுக்க, தொழிற்சங்க நிர்வாகிகளில் ஒருவராக வருகிற பத்திரிகையாளர் சு. செந்தில்குமரன் கவனிக்க வைக்கிறார்.

ஒன்றிரண்டு காட்சிகளில் வந்து போகிறார் விதார்த்.

நாயகனின் மகனாக வருகிற சிறுவன் நிதீஷின் துறுதுறுப்பான நடிப்பு கவர்கிறது.

எழுத்தாளர் இந்திரா செளந்தராஜன், ஓவியர் ஷ்யாம் நடிப்புலகுக்கு புதுவரவு. அவர்களுக்கு பொருத்தமான கதாபாத்திரங்களை வழங்கியிருக்கிறது திரைக்கதை.

செம்மலர் அன்னம், சம்பத்ராம் உள்ளிட்ட இன்னபிற நடிகர், நடிகைகளின் பங்களிப்பு பரவாயில்லை.

ஸ்ரீகாந்த் தேவா இசையில் ‘கோயிலிலே குடியிருந்தோம்’ பாடல் மனதுக்கு இதம் சேர்க்கிறது.

எளிமையான கதைக்கு ‘வைட் ஆங்கிள்’ ரவி சங்கரின் எளிமையான ஒளிப்பதிவு கைகொடுத்திருக்கிறது.

கதை நிகழ்விடம் தஞ்சாவூர். படத்தின் ஹீரோ பாரம்பரிய கட்டிலை வைக்கும்படியான பெரிய வீடு கிடைக்காமல் தவிப்பதாக நகர்கிறது திரைக்கதை. அந்த சந்தர்ப்பத்தில் ஹீரோவின் கைக்கு 75 லட்சம் வந்து சேர்கிறது. அதைவைத்து அந்த ஊரில் 25 லட்சத்துக்கு இடம் வாங்கி, 50 லட்சத்தில் பெரிதாய் புது வீடு கட்டி கட்டிலை கொண்டு சேர்க்க முயற்சி செய்திருக்கலாம். அதைவிட்டு விட்டு சோகத்தில் புரள்வதாய் கதையை நகர்த்தியிருப்பதை ஏற்க முடியவில்லை.

அந்த கட்டிலை வைக்க பிரமாண்டமான வீடுதான் வேண்டும் என அல்லாடுகிற அளவுக்கு அந்த கட்டில் அத்தனை பெரியதா என்றால் உம்ஹூம். ஒரு கட்டத்தில் அந்த கட்டிலை சாதாரண லோடு ஆட்டோவில் ஏற்றி, பல்வேறு பொருட்கள் நிறைந்துள்ள ஒரு இடத்தில் கொண்டுபோய் வைப்பதுபோல் கடந்தோடுகிறது திரைக்கதை.

இப்படி பொறுமையைச் சோதிக்கும் காட்சிகளை தவிர்த்துப் பார்த்தால், பாரம்பரிய பொருட்களை இழக்க நேர்வதன் வலியை பதிவு செய்ய நினைத்திருக்கும் முயற்சிக்காக படக்குழுவை பாராட்டலாம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here