காழ் சினிமா விமர்சனம்

எது மாதிரியும் இல்லாத புது மாதிரியான கதைகள் தமிழ் சினிமாவில் எப்போதாவது எட்டிப் பார்ப்பதுண்டு. அந்த வரிசையில் கால் பதிக்கிறது ‘காழ்.’

ஆஸ்திரேலியாவில் மனைவியோடு வசிக்கும் தமிழரான சீனு, அந்த மண்ணில் சொந்த வீடு கட்டி குடியேற விரும்புகிறார். அதற்காக லோன் வாங்கும் முயற்சியில் இறங்குகிறார். லோன் விஷயத்தில் அந்த நாட்டின் சட்ட திட்டங்கள் கடுமையாக இருக்க, நேர்வழியில் லோன் கிடைக்க வாய்ப்பில்லை என்கிற சூழ்நிலை. அந்த நேரமாகப் பார்த்து ஒரு ஆசாமி குறுக்கு வழியொன்றை காட்டுகிறான். அவனை நம்பி கட்டுமானப் பணி துவங்குகிறது. துவங்கிய பணி ஓரளவு மட்டுமே நிறைவடைந்த நிலையில் நம்பியவன் கைவிட, தங்குவதற்குகூட வழியில்லாமல் சீனுவின் நிலைமை மோசமாகிறது. படத்தில் இது ஒரு கதை…

அதே ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழக இளைஞன் புலியேந்திரன், அந்த நாட்டின் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான பணத்தைக் கட்ட முடியாமல் தவிக்கிறான். கட்டாவிட்டால் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும். மட்டுமல்லாது தமிழ்நாட்டிலிருக்கும் சொந்த வீடு கைவிட்டுப் போகிற நெருக்கடியும் புலியைச் சூழ்கிறது. புலி அவற்றிலிருந்து மீண்டுவர சந்தர்ப்ப சூழ்நிலையால் பெரும் குற்றமொன்றைச் செய்கிறான். இது இன்னொரு கதை…

லோனுக்கான குறுக்கு வழியைத் தேர்ந்தெடுத்த சீனு, குடியுரிமைக்காக குற்றம் செய்த புலி இருவரும் என்னவானார்கள்? அவர்கள் நினைத்தது நிறைவேறியதா இல்லையா? சீனுவுக்கும் புலியேந்திரனுக்கும் ஏதேனும் தொடர்புண்டா? இதற்கான பதில்களே கதையோட்டம். இயக்கம் மோகன்ராஜ் விஜே

சீனுவாக, திரையில் பல வருடங்கள் முன் பார்த்த (பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன்) யுகேந்திரன் வாசுதேவன். முழுநேரப் பணி, பார்ட் டைம் ஜாப் என கஷ்டப்பட்டு உழைத்து பணம் சேர்ப்பதில் துடிப்பு தென்பட, வெளிநாட்டு வாழ்க்கையில் நினைத்ததை சாதித்துக் கொள்வதிலிருக்கும் போராட்ட மனநிலையை, வலியை முகபாவங்கள் துல்லியமாய் பிரதிபலித்திருக்கின்றன.

யுகேந்திரவின் காதல் மனைவியாக, இலங்கைத் தழிழராக நடித்துள்ள மிமி லியோனார்டுக்கு இயல்பாகவே அமைந்திருக்கிற கனிவான முகம் அவரது பாத்திரத்துக்கு மிகமிக பொருத்தம். கணவன் மனம் நொறுங்கும்போது ‘இதுவும் கடந்து போகும்’ என ஆறுதல் சொல்லி தேற்றுவதில் அத்தனை உயிரோட்டம்! ஹோட்டலில் பாத்திரம் தேய்க்கும் காட்சி நெகிழ்ச்சி.

புலியேந்திரனாக வருகிற சித்தார்த் அன்பரசு, தான் பணிபுரியும் சூப்பர் மார்க்கெட்டில் உயர்சாதிக்காரன் தருகிற அவமானங்களைச் சந்திக்கும்போது ஐயோ பாவம் என்றிருக்கிறது. தன்னை அவமானப்படுத்துவதோடு, சூழ்ச்சி செய்து வேலை பறிபோக வைத்தவனை சட்டத்தின் பிடியில் சிக்க வைக்க ஸ்கெட்ச் போடும்போது ‘அவரா இவர்?’ என்றிருக்கிறது. அவர் செய்த குற்றத்துக்கு தண்டனையாய், இயக்குநர் அவரை குற்ற உணர்ச்சிக்குள் தள்ளிவிட அதை தகுந்த உணர்வுகளோடு அனுபவித்திருக்கிறார்.

சித்தார்த்தின் காதலியாக வருகிற நித்யா பாலசுப்ரமணியனியனின் நடிப்பு எளிமையாகவும், ஏற்ற பாத்திரத்துக்கு ஏற்றதாகவும் இருக்கிறது.

‘நாங்கள்லாம் மேலே; நீயெல்லாம் கீழே’ என வார்த்தைகளில் அனல் கக்கும் அவாளாக, அஸ்வின் விஸ்வநாதனின் பங்களிப்பும் பக்கா.

லோன் விவகாரத்தில் வில்லங்கம் செய்பவர், சித்தார்த் பணிபுரியும் மார்க்கெட்டின் உரிமையாளர் என கதையில் மிச்சமிருக்கும் சில கேரக்டர்களில் வருகிறவர்கள் கச்சிதமாக நடித்திருக்க, அசுத்தங்கள் தென்படாத ஆஸ்திரேலியாவின் அழகை, வசந்தம் தவழ்கிற மெல்பர்னின் சாலைகளை, தெருக்களை, பூங்காக்களை ஓவியம்போல் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வசந்த் கங்காதரன்.

ஆர்ப்பாட்டக் கூச்சல், அதிரடி இரைச்சல் என எதுவுமின்றி பின்னணி இசையை இதமாக தந்திருக்கும் இசையமைப்பாளர்கள் ஹெல்வினும், சஞ்சய் அரக்கல்லும், ‘எனக்குள் மழையாய் வந்தாயே’, ‘கனவுகள் கைகள் சேர்ந்த உணர்வினில்’, ‘புதிரா புதிருக்குள்’ என்ற பாடல்களுக்கு வழங்கியிருக்கும் மெல்லிசை அலையற்ற நீரில் மிதக்கும் வெற்றுப் படகுபோல் தாலாட்டுகிறது.

முழுமையாக ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையைச் சம்பாதித்துள்ள இந்த படம்,

ஆர்ப்பாட்ட ஹீரோயிஸம், அதீத வன்முறை, காமெடி களேபரம், குத்துப் பாட்டு என வழக்கமான மசாலாக்களை ரசித்துப் பழகியவர்களின் மனதில் இடம்பிடிப்பது சிரமம் என்றாலும்,

பரிச்சயமற்ற நடிகர்கள், புதிய களம், சற்றே புதிய கதை என சுற்றிச் சுழன்றிருக்கும் ‘காழ்’, வித்தியாசமான படங்களில் ஒன்றாய் தடம் பதித்திருப்பதால் பாராட்டுக்களை பரிசளிக்கலாம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here