சாதி அரசியல் கதைக்களத்தில் தமிழ் சினிமாவுக்கு மற்றுமொரு வரவு.
மேல்சாதி மூர்க்கனும் கீழ்சாதி பூமிநாதனும் சாதி மதம் கடந்த நண்பர்கள். பூமியை யாராவது சீண்டினால் அவர்களுக்கு மூர்க்கனால் ஆப்பு நிச்சயம். இப்படிப்பட்ட நண்பர்களைப் பிரித்தால் தங்களின் அரசியல் களத்துக்கு பலம் கூடும் என யோசிக்கிறார் லோக்கல் அரசியல்வாதியொருவர்.
சதித்திட்டம் அரங்கேறுகிறது. பூமி பரலோகத்துக்கு போகிறான். அந்த பழி மூர்க்கன் மீது விழுகிறது. கொதித்துக் கொந்தளிக்கும் மூர்க்கன், தன்னிடமிருந்து நண்பனை பிரித்தவர்களை அரிவாளால் பிரித்து மேய களமிறங்குகிறான். கதைக்களம் சூடுபிடிக்கிறது. இயக்கம் சை கெளதமராஜ்
முரட்டு மீசை, நெருப்புப் பார்வை என கம்பீரமான கிராமத்து இளைஞனாக, மூர்க்கனாக பாத்திரத்தின் கனம் உணர்ந்து மிரட்டலான நடிப்பைத் தந்திருக்கிறார் அருள்நிதி.
மூர்க்கனுக்கு அரிவாள் பலமென்றால், பூமியாக வருகிற சந்தோஷ் பிரதாப்புக்கு அறிவு பலம். அதை வைத்து தன் சாதியினரின் முன்னேற்றத்துக்கு பாலம் அமைத்துக் கொடுக்கிற அமைதியான பாத்திரத்தில் தேவைக்கேற்ப திறம் காட்டியிருக்கிறார்.
அருள்தியுடனான காதல் காட்சிகளில் காட்டும் சில்மிஷங்களால் மனதுக்குள் மழைச்சாரலின் இதம் தருகிறார் துஷாரா.
சந்தோஷின் மனதுக்குப் பிடித்தவளாக வருகிற சாயாதேவியின் பாத்திரமும், வில்லன்களில் ஒருவராக வருகிற ‘யார்’ கண்ணனின் நடிப்பும் தனித்து தெரிகிறது.
‘உண்மை’ என்ற பெயரில் வரும் முனீஸ்காந்திடமிருந்து வெளிப்பட்டிருப்பது உண்மையாகவே தரமான நடிப்பு.
சுயலாபத்துக்காக எதையும் செய்யத் துணிகிற அரசியல்வாதியாக ராஜசிம்மன், காவல்துறை உயரதிகாரியாக சரத்லோகிதாஸ்வா என இன்னபிற பாத்திரங்களை ஏற்றிருப்போரின் நடிப்பு கச்சிதம்.
‘அவ கண்ண பாத்தா’ பாடல் இதம் தர, பின்னணி இசையால் காட்சிகளுக்கு பரபரப்பூட்ட முயற்சித்திருக்கிறார் இமான்.
சண்டைக் காட்சிகளில் அனல் பறக்கச் செய்திருக்கிறார் கே.கணேஷ்குமார்.
கதைக்களத்தில் புதுமையில்லாவிட்டாலும், நாட்டில் சமத்துவ சமூகம் உருவாக வேண்டும் என்ற இயக்குநரின் எண்ணத்தை பாராட்டலாம்.