‘கெழப்பய’ சினிமா விமர்சனம்

தாங்கள் எடுக்கும் படத்தில் கதை இருக்கிறதா இல்லையா, ஓடுமா ஓடாதா என்பது பற்றியெல்லாம் யோசிக்காமல், ‘வித்தியாசமாக எதையாவது செய்வோம்’ என களமிறங்கும் சினிமா படைப்பாளிகள் பெருகி வருகிற காலகட்டம் இது. அந்த வரிசையில் கருவாகி உருவாகியிருக்கிற படம்.

அந்த கிராமத்தில், அகலத்தில் குறுகிய சாலையில் முதியவர் ஒருவர் தன் சைக்கிளில் ஆமை வேகத்தில் சென்று கொண்டிருக்கிறார். அவருக்கு பின்னால் வருகிற காரில் இளவயதும், நடுத்தர வயதுமாக நான்கு பேர், கூடவே கர்ப்பிணி பெண்னொருவர். எத்தனையோ முறை ஹாரன் அடித்தும் முதியவர் காருக்கு வழிவிடாமல் அதே வேகத்தில் சென்று கொண்டிருக்கிறார்.

காரில் வந்தவர்கள் பொறுமையிழந்து இறங்கி வந்து அவரிடம், காரிலுள்ள கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க அவசரமாக மருத்துவமனைக்கு செல்வதாக சொல்கிறார்கள். அப்போதும் அவர் மனதில் ஈரம் சுரப்பதாயில்லை; காருக்கு வழிவிடுவதாயில்லை.

காரில் வந்தவர்கள் பெரியவரிடம் பேச்சுவார்த்தைக்கு பலனில்லை என்பதால் சைக்கிளை தூக்கிவீசி, அவரை தாக்குகிறார்கள். தாறுமாறாக அடிபட்டு ரத்தம் சிந்தினாலும் திரும்பத் திரும்ப சைக்கிளை தூக்கிவந்து சாலையின் நடுவில் நிறுத்தி காரை முன்னோக்கி செல்லவிடாமல் மறிக்கிறார்.

அந்த வழியாக கடந்துபோகிற விஏஓ நடப்பதை தெரிந்துகொண்டு பெரியவரிடம் பேசுகிறார். காருக்கு வழிவிட சொல்கிறார். அவர் எதையும் பொருட்படுத்தாமல் காரை வழி மறிக்கிறார்; அடிவாங்குகிறார்; ரிப்பீட்டு… காரை வழி மறிக்கிறார்; உதைபடுகிறார்; ரிப்பீட்டு… காரை வழி மறிக்கிறார்;  மிதிபடுகிறார்; ரிப்பீட்டு… நேரம் போய்க் கொண்டேயிருக்கிறது.

முதியவரின் நோக்கம் என்ன? எதற்காக காரை தடுக்கிறார்? கர்ப்பிணிக்கு என்னவாயிற்று? இப்படியான கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதமாக விரிகின்றன அடுத்தடுத்த காட்சிகள். இயக்கம் யாழ் குணசேகரன்

முதியவராக கதிரேச குமார். ‘ஒரு சாதாரண கெழப்பய என்ன செய்துவிட முடியும்?’ என கேலிபேசி தன் பலத்தை குறைத்து மதிப்பிடுகிறவர்களிடம் ஓரு வார்த்தைகூட பேசாமல் எதிர்ப்பு காட்டுவது, தான் நினைத்ததை செய்து முடிக்கும்வரை முரட்டுப் பேர்வழிகளிடம் அடிவாங்கி அவதிப்படுவது, நிறைவுக் காட்சியில் தனது நோக்கம் என்ன என்பதை ஒடுங்கிய குரலில் தெனாலிராமன் கதை மூலம் காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவிப்பது என தான் ஏற்ற பாத்திரத்துக்கு தேவையான எளிமையான நடிப்புப் பங்களிப்பை தந்திருக்கிறார்.

விஜய் ரணதீரன், ‘பேக்கரி’ முருகன், அனுதியா, கே.என். ராஜேஷ், விஏஓ.வாக உறியடி ஆனந்தராஜ் என மற்ற கதாபாத்திரங்களில் வருகிறவர்களின் நடிப்பு பரவாயில்லை ரகம்.

பாகுபலியின் பகையாளி ரேஞ்சுக்கு முதியவரை ‘உன்னை என்ன பண்றேன் பாரு’ என கண்களை உருட்டி மிரட்டுபவரின் மிகை நடிப்பு சிரிப்புக்கு உதவுகிறது.

கெபியின் பின்னணி இசையின், அஜித்குமாரின் ஒளிப்பதிவின் தரம் கதைக்களத்துக்கு போதுமானதாக இருக்கிறது.

காரில் வந்த நான்கு முரட்டு ஆசாமிகளில் யாரேனும் ஒருவர் முதியவரைப் பிடித்து கொண்டாலே கார் கடந்து போயிருக்கலாம் என்கிற நிலையில், அவரை மீறி கார் சென்றுவிட முடியாது என்பதுபோல் நீளும் காட்சிகள் சலிப்பு தரத்தான் செய்கின்றன.

கதையின் நாயகனாக தள்ளாத வயதுக்காரர், சமூக அக்கறை, ஊருக்கு உலை வைக்கும் வைரஸ் என்றெல்லாம் யோசித்த இயக்குநர் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்ட முயற்சித்திருக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here