‘கிங் ஆஃப் கொத்தா’ சினிமா விமர்சனம்

கதையாழமிக்க படங்களைத் தருகிற மலையாள மண், கத்தியைத் தூக்கி கதகளி ஆட ஆசைப்பட்டதன் விளைவாக, பான் இந்திய படைப்பாக ‘கிங் ஆஃப் கொத்தா.’

நண்பர்கள் இருவர் தாதாக்களாகி தாங்கள் வசிக்கும் ‘கொத்தா’ என்ற பகுதியில் கொடிகட்டிப் பறந்து, பிரிந்துபோய், ஒருகட்டத்தில் மீண்டும் சந்தித்து ‘கொத்தாவின் ராஜா யார்?’ என தங்களுக்குள் மோதிக் கொள்ளும் கதை. வெற்றி யாருக்கு என்பதை துரோகம், சூழ்ச்சி, கத்தி, ரத்தம், துப்பாக்கி எல்லாமும் சேர்ந்து தீர்மானிக்கும் திரைக்கதை…

கேரளாவின் ‘கொத்தா’ என்ற ஏரியாவை தன் ரவுடித்தனத்தால் கட்டியாள்கிறான் கண்ணன். அவனை அடக்கி ஒடுக்கத் திட்டமிடுகிறார் புதிதாக அந்த பகுதிக்கு காவல்துறை உயரதிகாரியாக பொறுப்பேற்ற ஷாகுல். தான் நினைத்ததைவிடவும் கண்ணன் பலசாலியாக இருக்க, அவனை அடக்க அந்த பகுதியின் முன்னாள் தாதாவான ராஜூ பாயை வரவைக்கிறார். கேடுகெட்டவனை அதைவிட கேடுகெட்டவனை வைத்து சம்ஹாரம் செய்ய நினைத்த அவரது முயற்சி என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தியது, எப்படியான பலன் தந்தது என்பதே கதையோட்டம்… இயக்கம் அபிலாஷ் ஜோஷி

ராஜு பாயாக துல்கர் சல்மான். காதல் அதுவென மென்மையான கதாபாத்திரங்களில் திறமை காட்டிக் கொண்டிருந்தவர் கேங்ஸ்டர் களத்துக்குள் சீறிப் பாய்ந்திருக்கிறார். அப்படி திரும்பினால் நாலு பேரை அடித்துத் துவைப்பது, இப்படி திரும்பினால் ஏழுபேரை கழுத்தறுத்து கதை முடிப்பது, துப்பாக்கியின் துணையோடு பலரை பரலோகத்துக்கு அனுப்புவது என காட்சிக்கு காட்சி ரத்தச்சகதியில் உருண்டு புரண்டிருக்கிறார்; ஆக்சன் அதிரடியில் மிரட்டியிருக்கிறார்.

ஐஸ்வர்யா லெஷ்மிக்கு, துல்கரால் காதலிக்கப்பட்டு, பின் எதிரியாகி பாதை மாறிப் பயணிக்கிற கதாபாத்திரம். கதையோட்டத்தில் பெரிதாய் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாவிட்டாலும் தனது நடிப்புப் பங்களிப்பில் குறைவைக்கவில்லை!

கண்ணன் பாயாக ஷபீர் கல்லாரக்கல். வில்லனுக்குத் தேவையான அத்தனை அம்சங்களோடும் அட்டகாச அட்டனன்ஸ் போட்டிருக்கிறார்!

காவல்துறை உயரதிகாரியாக பிரசன்னா ஏற்ற கேரக்டருக்கான கம்பீரம் காட்டியிருக்கிறார்!

வில்லன்களில் ஒருவராக வருகிற செம்பன் வினோத் கத்துக்குட்டித்தனமாக ஆங்கிலம் பேசித் திரிவது சற்றே கலகலப்பூட்டுகிறது.

துல்கரின் தந்தையாக ஷம்மி திலகன், தங்கையாக அனிகா, ஷபீரின் மனைவியாக நைலா உஷா என மற்ற கதாபாத்திரங்களில் வருகிறவர்களும் கவனிக்க வைக்கிறார்கள்.

ஜேக்ஸ் பிஜோயின் பின்னணி இசையும், மேக்கிங்கில் இருக்கும் உழைப்பின் நீள அகலத்தை துல்லியமாகப் பதிவு செய்திருக்கும் நிமிஷின் ஒளிப்பதிவும் படத்தின் பலம்!

காட்சிகள் பலவும் ஏகப்பட்ட கேங்ஸ்டர் படங்களின் கலவையாய் நீள்வதும், படத்தின் நீளமும் அலுப்பும் சலிப்பும் தருகின்றன!

கிங் ஆஃப் கொத்தா – திரைக்கதையின் விறுவிறுப்புக்காக கூடுதலாய் மெனக்கெட்டிருந்தால் இருந்திருக்கும் இன்னும் கொஞ்சம் கெத்தா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here