எளிமையான பட்ஜெட்டில் மனிதாபிமானத்தை எடுத்துக் காட்டுகிற, விழிப்புணர்வூட்டுகிற கதைக்களத்தில் ஒரு படம்.
கொடைக்கானலில் வசிக்கிற ‘கொடை‘யுள்ளம் கொண்ட ஹீரோ, தான் நிதியுதவி செய்யும் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்காக பெரியளவில் நிதி திரட்டும் முயற்சியில் இறங்குகிறார்.
அதன் பலனாக 25 லட்சம் கிடைக்கவிருக்கிற சூழலில், பலரிடமிருந்தும் புத்திசாலித்தனமாக பணத்தைக் கொள்ளையடிக்கிற கும்பலொன்றிடம் சிக்குகிறார். பணம் பறிபோகிறது.
தான் இழந்ததை மீட்க களமிறங்கும் ஹீரோ, அந்த மோசடி கும்பல் அதுவரை கொள்ளையடித்த மொத்த பணத்தையும் கைப்பற்றி குற்றவாளிகளை வெளியுலகுக்கு அடையாளம் காட்டும் முடிவுக்கு வருகிறார். அவர் நினைத்ததை செய்ய முடிந்ததா இல்லையா என்பதே கதையோட்டம்…
அடுத்த வீட்டுப் பையன் போலிருக்கும் கார்த்திக் சிங்காவுக்கு மாஸ் ஹீரோக்கள் செய்கிற அத்தனை விஷயங்களையும் செய்கிற கதாபாத்திரம். தன்னால் முடிந்ததை அளவாக, அழகாக செய்திருக்கிறார்.ஹீரோயினாக புதுமுகம் அனயா. தீயணைப்புத் துறை பணியிலிருக்கும் அவருக்கு ஹீரோவை அணைத்து ஆடுவது தவிர பெரிதாய் வேலையில்லை; அதை சரியாய் செய்திருக்கிறார்.
காமெடிக்கு ரோபோ சங்கர், சிங்கமுத்து. அவர்களை குறை சொல்வதில் அர்த்தமில்லை; காட்சிகள் ரசித்து எழுதப்பட்டிருந்தால் சிரிக்க வைத்திருப்பார்கள். ‘பர்ஸ் இருக்குறப்போ சில்லரை ஆடக்கூடாது.’ ரோபோ பேசும் வசனம் சுவை!
5 லட்சம் வாங்கிக் கொண்டு 25 லட்சம் தருகிற நூதன மோசடிப் பேர்வழியாக அஜய் ரத்னம். ஒட்டுமொத்த தமிழ் சினிமா, தெலுங்கு சினிமா வில்லன்களின் வில்லத்தனத்தை கரைத்துக் குடித்தது போலிருக்கிறது அவரது பெர்ஃபாமென்ஸ்!
கே.ஆர்.விஜயா, நளினி, ஆனந்த்பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மாரிமுத்து,பேராசிரியர் கு.ஞானசம்பந்தம்,போஸ் வெங்கட், கராத்தே ராஜா, லொள்ளு சபா சாமிநாதன், கிரேன் மனோகர், வைஷாலி தணிகா என பலரும் அவரவர் பாத்திரங்களில் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.
சுபாஷ்கவியின் இசையில் ‘என்ன உன் கணக்கு’, ‘உன்ன பத்தி முழுசா நினைக்கிறேன்’ பாடல்கள் இதம்.
அர்ஜூனன் கார்த்திக் ஒளிப்பதிவில் கொடைக்கானலின் அழகை கொஞ்சமாய் ரசிக்க முடிகிறது.
முன்பாதியை எனோதானோவென்றும் பின் பாதியை ‘பரவாயில்லை’ ரகமாகவும் இயக்கியிருக்கிற ராஜா செல்வம், அடுத்தடுத்த படங்களில் மெருகேறுவார் என நம்பலாம்!